தேடுதல்

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது கர்தினால் ஷூப்பி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது கர்தினால் ஷூப்பி  

சந்திப்பு, உரையாடல், அமைதி போன்றவற்றின் அடையாளம் Rondine

மனிதர்களை ஒருவர் மற்றவரிடம் இருந்து பிரிக்கும், பிளவுகளை ஏற்படுத்தும் போர்ச்சூழலுக்கு பதிலாக, எல்லா இடங்களிலும் ஒன்றிணைந்து செயல்பட, உடன்வாழும் சகோதரர்களில் நம்மைக் கண்டறிய முயலவேண்டும்

மெரினா ராஜ் – வத்திக்கான்

நடந்து கொண்டிருக்கும் போர்ச்சூழலுக்கு முற்றிலும் மாறுபட்டதாக Rondine நகரம் சந்திப்பு, உரையாடல், அமைதி போன்றவற்றிற்கு அடையாளமாகத் திகழ்கின்றது என்றும், அமைதிக்கான முயற்சியில் சோர்வடையாது ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் கர்தினால் மத்தேயோ ஷூப்பி.

ஜூன் 8 வியாழன் முதல் 11 ஞாயிற்றுக்கிழமை வரை இத்தாலியின் Rondine Cittadella della Pace என்ற இடத்தில் நடைபெறும் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசிய போது இவ்வாறு கூறினார் இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் மத்தேயோ ஷூப்பி.

மோதல்கள் என்பது வெடிகுண்டு வீச்சுக்களால் மட்டும் நடைபெறுவதல்ல என்று கூறிய கர்தினால் ஷூப்பி அவர்கள், மனிதர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமை, செவிமடுக்காமை போன்றவற்றாலும், மனிதர்களைப் பிரித்து அந்நியப்படுத்துவதாலும் மோதல்கள் உருவாகின்றன என்றும் கூறினார்.

இளைஞர்கள் எதிர்காலம் மட்டுமல்ல அவர்களே நிகழ்காலம் என்றும், திருத்தந்தையின் அனைவரும் உடன்பிறந்தோர் என்ற திருமடலில் கூறப்படுவது போல ஒன்றிணைந்து இருக்கப் பழகுவதிலேயே எதிர்காலம் உள்ளது என்றும் கூறினார் கர்தினால் மத்தேயோ ஷூப்பி.

ஒன்றிணைந்து இருப்பதில் அடங்கியிருக்கிறது எதிர்கால வாழ்வு என்று கூறிய கர்தினால் ஷூப்பி அவர்கள், இது சாத்தியமற்றது போல சில நேரங்களில் தோன்றினாலும், ஒருவருக்கொருவர் ஆர்வமூட்டி, சோர்வடையாது முடிந்தவரை அமைதிக்காக முயற்சிக்கவேண்டும் என்றும் கூறினார்.  

அனைவரும் உரையாடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய கர்தினால் ஷூப்பி அவர்கள், மனிதர்களை ஒருவர் மற்றவரிடம் இருந்து பிரிக்கும், பிளவுகளை ஏற்படுத்தும் போர்ச்சூழலுக்கு பதிலாக, எல்லா இடங்களிலும் ஒன்றிணைந்து செயல்பட, உடன்வாழும் சகோதரர்களில் நம்மைக் கண்டறிய முயலவேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 June 2023, 14:07