தேடுதல்

மரியன்னை மாநாட்டிற்கான செபஅட்டை வெளியீட்டின் போது பொறுப்பாளர்கள் மரியன்னை மாநாட்டிற்கான செபஅட்டை வெளியீட்டின் போது பொறுப்பாளர்கள்  

2023ஆம் ஆண்டு மாபெரும் மரியன்னை மாநாட்டிற்கான அழைப்பு

1921ஆம் ஆண்டு ஜனவரி 4 முதல் 6வரை சென்னையில் நடைபெற்ற மரியன்னை மாநாட்டில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஆகஸ்ட் மாதம் சென்னை மயிலை உயர் மறைமாவட்டத்தில் கொண்டாடப்பட இருக்கும் மரியன்னை மாநாட்டிற்கான கருப்பொருளையும், அம்மாநாட்டிற்கான ஒன்றிணைந்து பங்கேற்றலுக்கான அழைப்பினையும் தெரிவித்துள்ளார் பேராயர் முனைவர் ஜார்ஜ் அந்தோணிசாமி.

ஆகஸ்ட் மாதம் 12  சனிக்கிழமை முதல், 15 செவ்வாய்க்கிழமை வரை நடைபெற உள்ள மரியன்னை மாநாடு ‘‘மரியா நம் பயணத்தின் வழித்துணை‘‘ என்ற கருப்பொருளின் அடிப்படையில் சிறப்பிக்க இருப்பதாக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார் சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் முனைவர் ஜார்ஜ் அந்தோணிசாமி.

1921ஆம் ஆண்டு சென்னையில் நடந்த மரியன்னை மாநாட்டின் நூற்றாண்டு, மறைமாவட்ட பாதுகாவலரான தூய தோமாவின் 1950ஆவது ஆண்டு, 16ஆவது உலக ஆயர்கள் மாமன்றம், பெசண்ட் நகர் ஆரோக்கிய அன்னை திருத்தல பொன்விழா ஆண்டு, சென்னை மயிலை  மறைமாவட்ட பாதுகாவலியாக அன்னை மரியா அறிவிக்கப்பட்டதன் 70ஆம் ஆண்டு, கீழ்ப்பாக்கம் மரியாவின் மாசற்ற திருஇதய ஆலயத்தின் ஆண்டு என 2023ஆம் ஆண்டு மரியன்னை மாநாடு கொண்டாட 6 காரணங்கள் இருப்பதாக எடுத்துரைத்தார் பேராயர் அந்தோணிசாமி.

மரியன்னை மாநாட்டிற்கான செபம்
மரியன்னை மாநாட்டிற்கான செபம்

மரியன்னைக்கு பொது அங்கீகாரமும் வணக்கமும் வழங்குதல், மரியன்னை பக்தி முயற்சிகளை ஊக்குவித்தல் மற்றும் வளர்த்தல், கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களிடம் ஒருமைப்பாட்டை வளர்த்தல் போன்ற மூன்று நோக்கங்களுக்காக முதல் மரியன்னை மாநாடு நடத்தப்பட்டதையும் நினைவுகூர்ந்தார் பேராயர் அந்தோணிசாமி.

2023ஆம் ஆண்டு கொண்டாடப்பட இருக்கும் மரியன்னை மாநாடு அருளின் நேரம் மற்றும் புத்தாக்கத்திற்கான கடவுளின் வாய்ப்பு என்று தான் கருதுவதாக எடுத்துரைத்த பேராயர் அந்தோணிசாமி அவர்கள், திருஅவை மற்றும் அன்னை மரியாவுடன் நாம் கொண்டுள்ள அன்பின் பிணைப்பை உறுதிப்படுத்த ஒன்றிணைந்து மாநாட்டில் பங்கேற்க இறைமக்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.

மரியன்னை மாநாட்டிற்கான செபம்
மரியன்னை மாநாட்டிற்கான செபம்

திருஅவையின் பன்முக அடையாளங்கள் மற்றும் பணிகளைப் புதுப்பிக்கவும் கடவுளின் கொடைகள் நம்மில் செயலாற்றவும் உறுதிகொள்வோம் என்று கூறியுள்ள பேராயர் அந்தோணிசாமி அவர்கள், மாநாட்டின் அனைத்து நிகழ்வுகளிலும் ஈடுபாடு மற்றும் ஆர்வமுடன் பங்கேற்க வலியுறுத்தியுள்ளார்.

1921ஆம் ஆண்டு ஜனவரி 4 முதல் 6வரை சென்னையில் நடைபெற்ற மரியன்னை மாநாட்டில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். கத்தோலிக்க மக்களின் நம்பிக்கைக்கும், கிறிஸ்தவர்களின் ஒற்றுமைக்கும் உறுதியான சான்றாக அமைந்திருந்த இம்மாநாடே அதிகமான மக்கள் கலந்துகொண்ட முதல் மரியன்னை மாநாடாகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 July 2023, 14:04