தடம் தந்த தகைமை – அதோனியா கொலை செய்யப்படல்
மெரினா ராஜ் – வத்திக்கான்
பத்சேபா அதோனியாவுக்காக அரசர் சாலமோனிடம் பரிந்து பேசும்படி போனார். அப்போது அரசர் எழுந்து அவரை எதிர்கொண்டு வந்து வணங்கியபின், தம் அரியணையில் அமர்ந்து கொண்டார். அரசரின் தாய்க்கு அவரது வலப்புறத்தில் ஓர் இருக்கை போடப்பட்டது. அவரும் அதில் அமர்ந்தார். அப்போது அவர், “நான் உன்னிடம் கேட்க விரும்பும் சிறு வேண்டுகோள் ஒன்று உண்டு. அதை நீ மறுக்கக்கூடாது” என்றார். அதற்கு அரசர், “கேளுங்கள் அம்மா! நான் மறுக்கமாட்டேன்” என்றார். அப்போது அவர், “சூனேமைச் சார்ந்த அபிசாகை உன் சகோதரன் அதோனியாவுக்கு மணமுடித்துக் கொடுக்க வேண்டும்” என்றார்.
அரசர் சாலமோன் தம் தாய்க்கு மறுமொழியாக, “சூனேமைச் சார்ந்த அபிசாகை அதோனியாவுக்காக நீர் கேட்பானேன்? இந்த அரசையும் அவனுக்காக நீர் கேட்டிருக்கலாமே? அவன்தான் என் மூத்த சகோதரனாயிற்றே! மேலும் குரு அபியத்தாரும் செரூயாவின் மகன் யோவாபும் அவர் பக்கம் இருக்கின்றனரே!” என்று சொன்னார். பிறகு, அரசர் சாலமோன் ஆண்டவர் மேல் ஆணையிட்டு “அதோனியா சொன்ன இந்த வார்த்தை அவன் உயிருக்கே கேடு விளைவிக்கும். இல்லையேல் கடவுள் எனக்குத் தகுந்த தண்டனை அளிப்பாராக! எனவே, என் அரசுரிமையை நிலைநிறுத்தி என் தந்தை தாவீதின் அரியணையில் என்னை அமர்த்தித் தாம் சொன்னபடி என் குடும்பத்தை அரச பரம்பரையாக்கியவரான வாழும் ஆண்டவர் மேல் ஆணை! அதோனியா இன்றே கொல்லப்படுவான்” என்று சொன்னார். சாலமோன் அரசர் யோயாதாவின் மகன் பெனாயாவுக்குக் கட்டளையிட்டு அனுப்பினார். அவனும் அதோனியாவைத் தாக்கவே, அவனும் இறந்தான்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்