தடம் தந்த தகைமை - திருக்கோவில் கட்ட உதவும் ஈராம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
தீரின் மன்னர் ஈராம் தாவீதுக்கு அவரது வாழ்நாளெல்லாம் நண்பராயிருந்தார். சாலமோன் தம் தந்தையாகிய தாவீதுக்குப் பின் அரசராகத் திருப்பொழிவு பெற்றுள்ளார் எந்று அவர் கேள்விப்பட்டுத் தம் தூதரை அவரிடம் அனுப்பினார். சாலமோனும் ஈராமிடம் தூதனுப்பி, “ஆண்டவர் என் தந்தை தாவீதின் எதிரிகளை அவருக்கு அடிபணியச் செய்யும் வரை, எப்பக்கமும் இடையறாது போர் நடந்து வந்தது என்பது உமக்குத் தெரியும். இதனால், தம் ஆண்டவராகிய கடவுளின் பெயருக்குக் கோவில் எழுப்ப அவரால் முடியாமல் போயிற்று என்பதும் உமக்குத் தெரியும். இப்பொழுதோ, என் கடவுளாகிய ஆண்டவர் என் எல்லைகள் எங்கும் அமைதி நிலவும்படி செய்திருக்கிறார். எனக்கு எதிரியுமில்லை; இடையூறுமில்லை. ஆகையால், ஆண்டவர் என் தந்தை தாவீதை நோக்கி, ‘உனக்குப் பின் உன் அரியணையில் நான் அமர்த்தும் உன் மகனே என் பெயருக்குக் கோவில் கட்டுவான்’ என்று சொன்னபடியே, என் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்குக் கோவில் எழுப்ப எண்ணியுள்ளேன். எனக்குத் தேவையாயிருக்கும் கேதுரு மரங்களை லெபனோனிலிருந்து வெட்டித்தருமாறு உம் பணியாளருக்குக் கட்டளையிடும். மரம் வெட்டுவதில் சீதோனியரைப் போல் திறமையுள்ளவர் என் குடிமக்களுள் ஒருவரும் இல்லை என்பது உமக்குத் தெரியும். என் பணியாளர் உம் பணியாளரோடு சேர்ந்து வேலை செய்வார்கள். உம் பணியாளருக்கு நீர் குறிப்பிடும் கூலியை நான் கொடுத்து விடுகிறேன்” என்று சொல்லச் சொன்னார்.
ஈராம் சாலமோனின் வார்ததைகளைக் கேட்டு மிகவும் மகிழ்ந்து, “அந்த ஏராளமான மக்களை ஆளும்படி தாவீதுக்கு ஞானமுள்ள ஒரு மகனைக் கொடுத்த ஆண்டவர் இன்று வாழ்த்தப் பெறுவாராக!” என்றார். மேலும், ஈராம் சாலமோனிடம் ஆளனுப்பி “நீர் எனக்குச் சொல்லி அனுப்பியதைக் கேட்டேன். உமது விருப்பபடியே கேதுரு மரங்களையும், நூக்கு மரங்களையும் அனுப்பி வைக்கிறேன். என் பணியாளர் லெபனோனிலிருந்து அவற்றைக் கடற்கரைக்குக் கொண்டு வருவார்கள். தெப்பம் தெப்பமாகக் கட்டி, கடல் வழியாக நீர் குறிக்கும் இடத்திற்கு அனுப்பி, அங்கே அவற்றை அவிழ்த்து உம்மிடம் சேர்ப்பிப்பேன். அவற்றை நீர் பெற்றுக் கொள்ளும். என் வீட்டாருக்கு உணவுப் பொருள் கொடுத்தால் போதும், இதுவே என் விருப்பம்” என்று தெரிவித்தார். அப்படியே ஈராம் சாலமோனுக்கு கேதுரு மரங்களையும், நூக்கு மரங்களையும் அவர் விரும்பியபடி அனுப்பிக் கொண்டிருந்தார். சாலமோன் ஈராம் வீட்டாரின் உணவுக்காக. இருபதாயிரம் கலம்* கோதுமையும் இருநூறு குடம்** பிழிந்து வடிகட்டிய ஒலிவ எண்ணெயும் கொடுத்தார். இவ்வாறு, ஈராமுக்குச் சாலமோன் ஆண்டுதோறும் கொடுத்து வந்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்