தடம் தந்த தகைமை - யூதர்களின் ‘பூரிம்’ விழா
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
ஆகாகியனும் அம்மதாத்தின் மகனுமான ஆமான், யூதர்க்கெல்லாம் எதிரியாய் இருந்து, அவர்களை அழிக்கவும், அடியோடு ஒழிக்கவும், ‘பூர்’ என்ற சீட்டைப் போட்டான். அப்போது எஸ்தர், மன்னரின் உதவியை நாட, யூதருக்கு எதிராய்ச் சதிசெய்த ஆமானின் தீவினை அவன் தலைமேலே விழுமாறு அவர் கட்டளை பிறப்பித்தார். அதன்படி அவனும் அவன் புதல்வரும் தூக்கிலிடப்பட்டனர். எனவே, யூதர் இந்நாள்களை, ‘பூர்’ என்ற சொல்லினின்று எழுந்த ‘பூரிம்’ என்ற பெயரால் அழைக்கலாயினர். ‘பூரிம்’ என்ற இவ்விழாவிற்கு மொர்தக்காயின் மடலின் வாசகமும் அவர்கள் கண்டவையும் அனுபவித்தவையுமே அடிப்படை ஆயின. அவர்களும் அவர்களின் வழிமரபினரும் அவர்களைச் சார்ந்தோர் அனைவரும், இந்த இரு நாள்களை அவை பற்றிய மடல்களின்படியும் குறிக்கப்பட்ட காலத்திலும் கண்டிப்பாய்க் கொண்டாடுவது என்று கீழ்க் கண்டவாறு உறுதி பூண்டனர்: ‘‘இந்நாள்கள் தலைமுறைதோறும், ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு நகரிலும் நினைவுகூரப்பட்டுக் கொண்டாடப்பட வேண்டும். ‘பூரிம்’ என்ற இந்நாள்கள் யூதரிடையே கொண்டாடப்படாமல் போகா. இவற்றின் நினைவு அவர்களின் வழிமரபினரிடையிலும் ஒழிந்து போகாது”.
யூதராகிய மொர்தக்காயும் அரசி எஸ்தரும் இட்ட ஆணையின்படி, ‘பூரிம்’ என்ற இந்த நாள்களை யூதரும், அவர்களின் வழிமரபினரும் குறிக்கப்பட்ட காலத்தில் நோன்பு, புலம்பல் நாள்களாகக் கடைப்பிடிக்க வேண்டும். இந்தப் ‘பூரிம்’ விழாபற்றிய ஒழுங்குமுறைகள் யாவற்றையும் உறுதிப்படுத்திய எஸ்தரின் ஆணை ஓர் ஏட்டுச் சுருளில் எழுதி வைக்கப்பட்டது.
மன்னர் அகஸ்வேர் நிலங்களின் மீதும், கடலின் தீவுகளின் மீதும் தீர்வை விதித்தார். அவருடைய ஆற்றலும் வலிமைமிகு செயல்களும், அவர் மொர்தக்காய்க்கு அளித்த மேன்மையின் முழுவிவரமும், மேதியா மற்றும் பாரசீக மன்னர்களின் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன அல்லவா? யூதராகிய மொர்தக்காய், மன்னர் அகஸ்வேருக்கு அடுத்த நிலைபெற்று, யூதருள் மேன்மை நிறைந்தவராகவும், தம் சகோதரர் பலருக்கு இனியவராகவும், தம் மக்களின் நன்மையை நாடுபவராகவும், தம் இனத்தார் அனைவரின் நல்வாழ்வுக்காகப் பரிந்துரை செய்பவராகவும் விளங்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்