சகோதரத்துவத்தை மேம்படுத்த உதவும் 'பிரான்சிஸின் முற்றம்'
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
வரும் செப்டம்பரில் "il Cortile di Francesco" (பிரான்சிஸின் முற்றம்) கலாச்சார நிகழ்வின் ஒன்பதாவது நிகழ்வு நடத்தப்படும் என்றும், இந்த ஆண்டு, இந்த நிகழ்வு பிரான்சிஸ்கன் சபை அங்கீகரிக்கப்பட்டதன் 800-வது ஆண்டு நிறைவை மையமாகக் கொண்டது என்றும் அச்சபையின் அருள்தந்தை Giulio Cesareo அவர்கள் தெரிவித்தார்.
ஜூலை 12, இப்புதனன்று வத்திக்கான் செய்திக்கு வழங்கிய உரையில் இத்தகவலைத் தெரிவித்த அருள்தந்தை Cesareo அவர்கள், உடன்பிறந்த உறவு என்ற தலைப்பை தெளிவுபடுத்தி, அது எப்படி கலாச்சாரத்தை உருவாக்கும் ஒரு வழி என்று விளக்குவதுதான் இவ்வாண்டுக் கூட்டத்தின் முக்கிய நோக்கம் என்றும் கூறினார்.
இந்நிகழ்வு வரும் செப்டம்பர் மாதம் 14 முதல் 16 வரை அசிசியில் நடைபெறும் என்றும், அரசியல், அறிவியல் மற்றும் மதம், அத்துடன் அழகியல் மற்றும் தத்துவம், உளவியல் மற்றும் கல்வி, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் இருந்து எனப் பல்வேறு தலைப்புகளில் சிறந்த நபர்களைக் கொண்டு சொற்பொழிவுகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார் அருள்தந்தை Cesareo.
இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவரும் பிறருக்குக் கொடுப்பதற்கென்று ஏதாவதொன்றை வைத்துள்ளனர் என்பதைத்தான் இந்த உடன்பிறந்த உறவு என்ற தலைப்பு சுட்டிக்காட்டுகிறது என்பதை இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் யாவரும் உணர்ந்துகொள்ளவேண்டும் என்றும் எடுத்துரைத்தார் அருள்தந்தை Cesareo.
800 ஆண்டுகளுக்கு முன்பு, புனித பிரான்சிஸ், திருத்தந்தை மூன்றாம் Honorius அவர்களால் தனது சபையின் சட்டவிதிகளுக்கான அங்கீகாரத்தைப் பெற்றார் என்றும், துறவிகளின் 'வாழ்க்கையும் பணிகளுமே நற்செய்தி' என்பதே அச்சட்டவிதிகளின் முதல் வார்த்தைகளாக அமைந்துள்ளன என்றும் எடுத்துக்காட்டினார் அருள்தந்தை Cesareo.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்