காரித்தாஸ் இந்தியாவின் 3 கோடி ரூபாய் நிவாரண உதவி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
மணிப்பூரில் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய அதிகாரிகள் அங்குள்ள வன்முறைகள் குறித்து நீண்ட மௌனம் காப்பது, மற்றும் பாராமுகமாய் இருப்பது குறித்து இந்திய ஆயர் பேரவையின் பிரதிநிதிகள் குழு ஒன்று ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.
இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் சென்று திங்களன்று திரும்பிய இந்திய ஆயர் பேரவையின் பிரதிநிதிகள் குழு, மணிப்பூர் வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவரும் அக்கறையின்றி அதிகாரிகள் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
இந்திய ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் ஆன்ட்ரூஸ் தழத், மணிப்பூரின் இம்பால் பேராயர் Dominic Lumon, இந்திய ஆயர் பேரவையின் துணைப் பொதுச்செயலர் அருள்பணி Jervis D’Souza, காரித்தாஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குனர், அருள்பணி Paul Moonjely ஆகியோரையும் உள்ளடக்கிய இக்குழு, மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் ஏனைய அடிப்படைப் பொருட்களை வழங்கியுள்ளதுடன், அழிவுக்குள்ளாக்கப்பட்டுள்ள கோவில்கள், வீடுகள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றையும் பார்வையிட்டுத் திரும்பியுள்ளது.
மே மாதம் 3-ஆம் தேதி Kuki பழங்குடியின மக்களுக்கும், பெரும்பான்மையினராக வாழும் Meitei மக்களுக்கும் இடையே மோதல் உருவாகி இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், 160க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர், பல ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர், 349 கிறிஸ்தவ கோவில்கள் மற்றும் நிறுவனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.
மணிப்பூரில் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் CRS என்னும் கத்தோலிக்க நிவாரண அமைப்பு, மற்றும் மறைமாவட்ட சமூகப்பணிமையங்களுடன் இணைந்து நிவாரண உதவிகளை வழங்கிவரும் இந்தியக் கத்தோலிக்கக் காரித்தாஸ் நிறுவனம், இதுவரை அப்பகுதியில் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 3 கோடி ரூபாய் மதிப்புடைய உதவிகளை வழங்கியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்