Synodality என்பது இறைவனின் எதிர்பார்ப்பை புரிந்துகொள்ள உதவுகிறது
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உலக ஆயர்கள் மாமன்றம் என்பது, ஒரு நிகழ்வாகக் கருதப்படக் கூடாது, மாறாக ஒரே திருஅவையாக ஒன்றிணைவதற்கான ஒரு தொடர்ச்சியான வழியாக அதனைக் கொள்ளவேண்டும் என்று கூறினார் அருள்பணியாளர் Jan Nowotnik
வரும் அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்தில் ஆயரல்லாத வாக்களிக்கும் உறுப்பினர்களில் ஒருவரும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர் பேரவைக்கான பணித்தள இயக்குநருமான அருள்பணியாளர் Jan Nowotnik அவர்கள் அம்மாமன்றம் குறித்த தனது கருத்துக்களை வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கியபோது இவ்வாறு தெரிவித்தார்.
ஆயர் மாமன்றம் என்பது 'அமைப்புரீதியான ஒரு பயணம்' (constitutively synodal) என்றும், திருஅவைக்கான திருந்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விருப்பத்துடன் தொடர்புடையது என்றும் எடுத்துக்காட்டிய அருள்பணியாளர் Nowotnik அவர்கள், இது ஒரு நிகழ்வாகக் கருதப்படக்கூடாது, மாறாக, ஒரே திருஅவையாக ஒன்றிணைவதற்கான ஒரு தொடர்ச்சியான வழியாகக் கொள்ளப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
நாம் ஒருவருக்கொருவர் செவிமடுக்கும்போது, குறிப்பாக, தூய ஆவியாரின் குரலுக்குச் செவிசாய்க்கும்போது, நமது இறைவேண்டல், திருவிவிலியம், வழிபாடு மற்றும் ஒருவருக்கொருவர் உரையாடுவதன் வழியாக இன்றையத் திருஅவைக்கு என்ன முக்கியம் என்பதை நாம் புதிதாகக் கண்டுணரலாம் என்றும் எடுத்துரைத்தார் அருள்பணியாளர் Nowotnik.
அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் இவ்வுலக ஆயர்களை மாமன்றம் இறைமக்கள் தூய ஆவியாரின் ஊற்றையும், இம்மாமன்றத்தில் பங்குபெறுவோரின் உண்மையான விருப்பத்தையும் பார்க்கும் ஒரு தருணமாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார் அருள்பணியாளர் Nowotnik.
இறுதியாக, ஒன்றிணைந்த பயணம் (synodality) என்பது, இப்போது இறைவன் நம்மிடம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது என்றும், நமது பாரம்பரியத்திலும், நமது படிப்பினைகளிலும் வேரூன்றி, நாம் பெற்றுக்கொண்ட பொதுத் திருமுழுக்கின் அடிப்படையில் ஒருவருக்கொருவருடன் இணைந்து நடக்கவும், ஒருவருக்கொருவர் துணையாக இருக்கவும் விரும்புகிறது என்றும் விளக்கினார் அருள்பணியாளர் Nowotnik.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்