தேடுதல்

ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தையுடன் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால்    ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தையுடன் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால்  

திருத்தந்தையர் வரலாறு - திருத்தந்தை இரண்டாம் ஜான்பால். 2ஆம் பாக

இளைஞர்களில் மட்டுமல்ல, குழந்தைகளிடமும், குடும்பங்களிடமும் அதிக அக்கறையும் ஆர்வமும் கொண்டவராக இருந்தார் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருத்தந்தையர் வரலாற்றில் 264வது திருத்தந்தையாக 1978ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை இரண்டாம் ஜான்பாலின் வரலாறு குறித்த முதல் பாகத்தை கடந்த வாரம் செவிமடுத்தோம்.

    கரோல் யோசேப் வொய்த்தில்யா என்ற இயற்பெயர் கொண்ட நம் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால், 1978ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி பாப்பிறையாக பொறுப்பேற்றார். இளைஞர்கள் மீது அதிக அன்பு கொண்டிருந்த இத்திருத்தந்தை தான் உலக இளைஞர் தினக் கொண்டாட்டங்களை திருஅவையில் துவக்கினார். தான் சிறப்பித்த 19 உலக இளையோர் தினங்களில் பல இலட்சக்கணக்கான இளையோரைச் சந்தித்து ஓர் இளைஞனாகவே மாறினார். இளைஞர்களில் மட்டுமல்ல, குழந்தைகளிடமும், குடும்பங்களிடமும் அதிக அக்கறையும் ஆர்வமும் கொண்டவராக இருந்தார் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால். 1994ல் குடும்பங்களுக்கான உலகக்கூட்டத்தை துவக்கியவரும் இவரே. யூதர்களுடன் ஆன பேச்சுவார்த்தைகளை ஊக்குவித்தது மட்டுமல்ல, அனைத்து மதபிரதிநிதிகளுடன் இணைந்து அமைதிக்காக ஜெபிக்க அழைப்பு விடுத்து இத்தாலியின் அசிசியில் அவர்களை ஒன்றிணைத்தார். மீட்பின் ஆண்டு, மரியன்னை ஆண்டு, நற்கருணை ஆண்டு என சிறப்பு ஆண்டு நிகழ்ச்சிகளை அறிவித்து திருஅவையின் ஆன்மீகப் புதுபபித்தலையும் ஊக்குவித்தார். நம் காலத்தின் மக்கள், முன்னால் வாழ்ந்து சென்ற புனிதர்களின் வாழ்வைப் பின்பற்றி நடக்க ஊக்கமளிக்கும் வகையில் பல இறையடியார்களை புனிதராக அறிவித்தார். இவரின் பாப்பிறை பதவி காலத்தில் 1338 பேர் அருளாளர்களாகவும், 482 பேர் புனிதர்களாகவும் அறிவிக்கப்பட்டனர். புனித குழந்தை தெரேசாவை திருஅவை மறைவல்லுனராக அறிவித்ததும் திருத்தந்தை இரண்டாம் ஜான்பாலே.

   திருத்தந்தை இரண்டாம் ஜான்பால், தன் பதவிக்காலத்தின்போது 231 பேரை கர்தினாலாக உயர்த்தினார். 6 முறை அனைத்து கர்தினால்களையும் ஒருசேர அழைத்து கலந்துரையாடியுள்ளார். 15 முறை உலக ஆயர்கள் பேரவையைக் கூட்டியுள்ளார்.    திருத்தந்தையாக 5 புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். திருத்தந்தை இரண்டாம் ஜான்பாலின் திருப்பயணங்கள் மிகவும் பிரபலமானவை. 104 முறை இத்தாலிக்கு வெளியே திருப்பயணம் மேற்கொண்டுள்ளார். இருமுறை இந்தியாவுக்கும் சென்றுள்ளார். இத்தாலிக்கு உள்ளே இவர் மேற்கொண்ட திருப்பயணங்கள் 146. உரோம் நகரின் ஆயர் என்ற முறையில் அந்நகரின் 333 பங்குதளங்களுள் 317க்கு மேய்ப்புப் பணிசார்ந்த சந்திப்பை மேற்கொண்டு மக்களை சந்தித்து உரையாடியுள்ளார். இவருக்கு முன்னால் வந்த எந்த திருத்தந்தையையும் விட இவர் சந்தித்த மக்களும் சரி, தலைவர்களும் சரி மிகவும் அதிகம். இவரின் புதன் மறைபோதகங்களில் பங்குபெற்ற திருப்பயணிகளின் எண்ணிக்கை 1 கோடியே 76 இலட்சத்துக்கு மேல். உலக அரசு தலைவர்களுடன் 738 சந்திப்புகள், பிரதமர்களுடன் 246 சந்திப்புகள் என அடுக்கிக் கொண்டேப் போகலாம். இவையெல்லாம் வெறும் எண்களல்ல, மாறாக மக்கள் சமூகத்தின்மீது அவருக்கிருந்த ஆர்வத்தின் வெளிப்பாடு எனலாம்.

   திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே அர்ஜென்டீனாவும் சிலேயும் அவரை அணுகின. தங்களுக்கிடையேயிருந்த முரண்பாடுகளைக் களைய திருப்பீடம் தலையிட வேண்டும் என வேண்டின. திருத்தந்தையும் அவ்விண்ணப்பத்தை ஏற்று சுமுகமான ஒரு தீர்வைக் காண உதவினார். 1978ல் பொறுப்பேற்ற இவர் 1979 ஜனவரியிலேயே தன் வெளிநாட்டுத் திருப்பயணத்தைத் துவக்கிவிட்டார். இவரின் முதல் வெளிநாட்டுத் திருப்பயணம் தொமினிக்கன் குடியரசிலும் மெக்சிகோவிலும் இடம் பெற்றது. ஜூன் மாதத்தில் இடம் பெற்ற இரண்டாவது திருப்பயணம் தன் தாய்நாடான போலந்துக்கானதாக இருந்தது. அதே ஆண்டு ஐ.நா. நிறுவனத்திலும் உரையாற்றினார். இவர் பதவியேற்றபின் முதலில் சோவியத் வெளியுறவு அமைச்சர் திருப்பீடத்தில் சந்தித்து உரையாடியது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஐக்கியநாடு, பிரிட்டன் உட்பட பல நாடுகளின் தலைவர்கள் அவரை சந்தித்து உரையாடினர். இத்தகைய காலக்கட்டத்தில்தான் 1981ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் தேதி உரோம் நகர் புனித பேதுரு வளாகத்தில் Mehmet Ali Ağca என்ற துருக்கியரால் சுடப்பட்டார் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால். 6மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின் பிழைத்துக் கொண்ட திருத்தந்தை உரோம்நகர் ஜெமல்லி மருத்துவமனையிலிருந்து 4 நாட்களுக்குப்பின் வழங்கிய மூவேளை ஜெப உரையில் “என்னைச் சுட்ட சகோதரருக்காக ஜெபியுங்கள். நான் அவரை உண்மையாகவே மன்னித்து விட்டேன்” என அழைப்பு விடுத்தார். அதே 1981ஆம் ஆண்டு நவம்பர் 25ந்தேதி கர்தினால் ஜோசப் இராட்சிங்கரை விசுவாசக் கோட்பாட்டு திருப்பேராயத்தின் தலைவராக நியமித்தார் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால். 

   திருஅவையின் பல்வேறு காலக்கட்டங்களில் முந்தைய நாட்களில் இடம் பெற்ற தவறுகளுக்கு பொதுவில் மன்னிப்பு கேட்டார் இத்திருத்தந்தை. 1983ஆம் ஆண்டு மார்ட்டின் லூத்தரின் 500வது பிறந்த நாளையொட்டி லூத்ரன் பிரிந்த சபையினருக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதே ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி உரோம் நகரின் சிறைக்குச் சென்று தன்னைச்சுட்ட Mehmet Ali Ağcaவைச் சந்தித்து உரையாடினார். 1986 ஜனவரி 31ல் இந்தியாவிற்கான தன் 10 நாள் பயணத்தை மேற்கொண்டு, சென்னைக்கும் சென்றார். தன் இத்திருப்பயணத்தின்போது கேரளாவில் இறையடியார்கள் அல்போன்சா மற்றும் குரியாக்கோஸை அருளாளர்களாக அறிவித்தார். அதே ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி உரோம்நகரின் யூதக்கோவிலுக்குச் சென்று யூதப்பிரதிநிதிகளைச் சந்தித்தார் பாப்பிறை. 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி அமெரிக்க ஐக்கியநாட்டின் பேராலயத்தில் எயிட்ஸ் நோயாளிகளைச் சந்தித்த பாப்பிறை, எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனை அப்படியே ஆரத்தழுவிக் கொண்டார். தொட்டாலே ஒட்டிக் கொள்ளும் என எயிட்ஸ் நோய் குறித்த பல தப்பெண்ணங்கள் பரவி வந்த அந்த காலத்திலேயே இவர் அந்த சிறுவனை வாரியணைத்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவருடைய உண்மையான அன்பின் வெளிப்பாடாக அது இருந்தது.

   இவர் காலத்தில்தான், அதாவது 1988ல்தான் முதன்முறையாக திருப்பீடத்தின் வரவு செலவு கணக்கு வெளியிடப்பட்டது. இவர் காலத்தில்தான் பல நாடுகளுடன், குறிப்பாக கிழக்கு ஐரொப்பிய நாடுகளுடன் திருப்பீட உறவு மீண்டும் உருவாக்கப்பட்டது. 1989 ஜூலை 17ல் போலந்துடன் உருவாக்கப்பட்ட அரசியல் உறவுடன் இது தொடர்ந்தது. 1993ல் இத்தாலியின் சிசிலி தீவில் மாஃபியா கும்பலுக்கு எதிராக இவர் விடுத்த அறைகூவல் மிகவும் துணிகரமானதாகவும், பிரபலமானதாகவும் இருந்தது. 1998ல் கம்யூனிச நாடான கியூபாவுக்கு பயணம் மேற்கொண்டு அரசுத்தலைவர் பிதெல் காஸ்ட்ரோவுடன் உரையாடியதும் குறிப்பிடத்தக்கது. 1999 நவம்பர் மாதம் இந்தியாவின் புதுடெல்லியில் தனது இரண்டாவது இந்தியப்பயணத்தை மேற்கொண்டார் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால். 2002ம் ஆண்டில் அனைத்து மதபிரதிநிதிகளுடன் இணைந்து இத்தாலி அசிசியில் அமைதிக்கான ஜெபவழிபாட்டை நடத்தினார். 2003 அக்டோபர் 19ந்தேதி அன்னை திரேசாவை அருளாளராக அறிவித்தார். 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி இரவு, இறைஇரக்க ஞாயிறுக்கு முந்தைய நாள் இத்தாலி நேரம் இரவு 9 மணி 37 நிமிடங்களுக்கு இறைபதம் சேர்ந்தார் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால். ஏப்ரல் 8ஆம் தேதி புனித பேதுரு பெருங்கோவில் அடிநிலக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். 2011ஆம் ஆண்டு மே முதல்தேதி இறை இரக்கத்தின் ஞாயிறன்று திருத்தந்தை இரண்டாம் ஜான்பாலை அருளாளராக அறிவித்தார் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட். இதுபோல் இறை இரக்க ஞாயிறன்று 2014ஆம் ஆண்டு எப்ரல் 27ஆம் தேதி அருளாளர் இரண்டாம் ஜான் பாலை புனிதராக அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இதுவரை பணியாற்றிய திருத்தந்தையர்களில் போலந்து நாட்டைச் சேர்ந்த முதலாவது திருத்தந்தையாகவும், 1520க்கு பின்னர் இத்தாலியர் அல்லாத ஒரு திருத்தந்தையாகவும், வரலாற்றில் நீண்ட காலம் திருத்தந்தையாக வழிநடத்தியவர்களுள் மூன்றாம் இடத்தைப் பிடித்தவருமான நம் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் குறித்த மேலும் சில சிறப்புக்களை வரும் வாரத்தில் காண்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 July 2023, 10:48