தேடுதல்

திருநங்கையர்களுடன் அருள்சகோதரி Amitha Polimetla திருநங்கையர்களுடன் அருள்சகோதரி Amitha Polimetla  

திருநங்கையர்களின் மேம்பாட்டிற்காக உழைக்கும் அருள்சகோதரி!

குடும்பத்தால் நிராகரிக்கப்பட்டு, அண்டைவீட்டாரால் முறைகேடுகளுக்கு உள்ளாக்கப்படும் திருநங்கைகள் தங்கள் அடையாளத்தைத் தேடி நகர்ப்புறங்களுக்கு ஓடுகின்றனர் : அருள்சகோதரி Amitha Polimetla

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திருநங்கைகள் சமூகத்தில் மிகவும் பாகுபாடுகளைச் சந்தித்து வருகின்றனர் என்று இச்சமூகத்தினருக்காகப் பல ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் Salvatorian சபையைச் சார்ந்த அருள்சகோதரி Amitha Polimetla அவர்கள் கூறியுள்ளார்.

தங்கள் சொந்த பெற்றோரால் ஒதுக்கப்பட்டு, உடன்பிறந்தவர்களால் கேலி செய்யப்பட்டு, அண்டை வீட்டாரால் முறைகேடுகளுக்கு ஆளாக்கப்படுவதுடன், இவர்கள் தங்கள் குடும்பத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள் என்றும் கவலை தெரிவித்துள்ளார் அருள்சகோதரி Amitha.

குடும்பத்தால் நிராகரிக்கப்பட்டு, இவர்கள் தங்கள் அடையாளத்தைத் தேடி ஓடுகிறார்கள் என்றும், முக்கியமாக நகரங்களுக்குப் புலம்பெயர்ந்து சென்று பிச்சை எடுப்பதிலும் பாலியல் தொழிலிலும் ஈடுபடுகிறார்கள் என்றும், வேதனையை வெளிப்படுத்திய அருள்சகோதரி Amitha அவர்கள், நம் இந்தியச் சமூகத்தில் திருநங்கைகளின் கலாச்சாரம் இப்படி இருப்பதால்தான் அவர்கள் இத்தகையதொரு நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

கிறிஸ்து எப்போதும் சமூகத்தின் ஓரங்கட்டப்பட்டவர்களான பாவிகள், வரிதண்டுவோர், விபச்சாரம் செய்வோர், தீண்டத்தகாதவர்கள் மற்றும் ஏழைகள் பக்கம் நின்றார் என்று எடுத்துரைத்துள்ள அருள்சகோதரி Amitha அவர்கள், Salvatorian சபையின் சகோதரியாக, இம்மக்களை எவ்வாறு குணப்படுத்துவது மற்றும் மேம்படுத்துவது என்று தான் சிந்திக்கப் பழகிக்கொண்டதாவும் உரைத்துள்ளார்.

99 விழுக்காடு திருநங்கைகளுக்குப் பள்ளிக் கல்விச் சான்றிதழ் இல்லை, ஏனென்றால் அவர்கள் முன்பே கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்று எடுத்துரைத்துள்ள அருள்சகோதரி Amitha அவர்கள், இவர்களில் பலர் கல்வியறிவு மற்றும் குடி உரிமைகள் பற்றி அறியாத நிலையில், அவர்களின் அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பிக்க நாங்கள் அவர்களுக்கு உதவுகிறோம் என்றும் கூறியுயள்ளார்.

திருநங்கைகளின் நடத்தைக்காக அவர்களைக் கண்டனம் செய்வது தவறான அணுகுமுறை என்றும், அவர்களாகவே இந்நிலையைத் தேர்ந்தெடுக்கவில்லை, ஆனால், அதற்காகக் கடுமையான சமூக இழிவை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளனர் என்றும் கூறியுள்ளார் அருள்சகோதரி Amitha

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 July 2023, 14:56