ஆபிரிக்க கண்டத்திற்குப் புதிய நம்பிக்கைதரும் கலந்துரையாடல்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கென்யாவின் நைரோபியில் கத்தோலிக்கர்கள் மற்றும் பல்வேறு மத நம்பிக்கைகளின் வல்லுநர்கள் ஒன்றிணைந்து நிலையான வளர்ச்சியை அடைவதற்கும், ஆப்பிரிக்காவின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கும் உறுதியான திட்டங்களையும் ஒத்துழைப்புகளையும் ஏற்படுத்தியுள்ளதாக அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.
ஆகஸ்ட் 7, 8, ஆகிய தேதிகளில், நைரோபியில் உள்ள எலிசியன் விடுமுறை ஓய்வகத்தில் காரித்தாஸ், இயேசு சபையினர் மற்றும் யூபிலி USA ஆகியவை இணைந்து நடத்திய இரண்டு நாள் கருத்தரங்கில் ஆப்பிரிக்காவை பாதிக்கும் அம்சங்கள் குறித்து விவாதித்த வேளை, இம்முடிவுகள் எடுக்கப்பட்டதாக அவ்வறிக்கைக் கூறுகின்றது.
கோவிட்-19 பெருந்தொற்று, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின்மை, காலநிலை மாற்றம், பல்லுயிர் இழப்பு, நீர் பற்றாக்குறை, பலவீனமான நல அமைப்புகள், மோதல்கள், பயங்கரவாதம், கடன்களின் தாக்கங்கள் ஆகியவை இந்நிகழ்வின் இறுதியில் தனித்தனியாக அறிக்கையில் இணைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்காவின் சவாலான சூழலில், கத்தோலிக்கத் திருஅவை எவ்வாறு சமூக நீதி மற்றும் மனித மாண்பை மேம்படுத்துவதில் அதன் நீண்டகால அர்ப்பணிப்பைக் கருத்தில் கொண்டு ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கத்தோலிக்க மற்றும் பிற கிறிஸ்தவ நம்பிக்கை அமைப்புகள், முஸ்லீம் மற்றும் பூர்வீக மதங்களின் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ள இவ்வறிக்கையில் உலகளாவிய நிலையான வளர்ச்சி மற்றும் காலநிலை இலக்குகளை அடைவதற்கான சமூகத் துறை செலவினங்களைப் பாதிக்கும் ஒரு முக்கியமான கடன் நெருக்கடியும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எங்கள் புனித நூல்கள் மற்றும் நம்பிக்கைகள் வழியாக நாங்கள் அறிந்துள்ளபடி, ஆப்பிரிக்கக் கண்டத்தை ஆட்டிப்படைக்கும் கடன், நிர்வாகம் மற்றும் சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றின் அழுத்தமான பிரச்சனைகளை நாங்கள் தீர்க்கமாகத் தீர்ப்பதற்கு முனைந்துள்ளோம் என்ற இச்சமயத் தலைவர்களின் நம்பிக்கை வார்த்தைகளுடன் இவ்வறிக்கை நிறைவடைகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்