தேடுதல்

வானிலிருந்து கடவுளின் ஒளி வானிலிருந்து கடவுளின் ஒளி   (AFP or licensors)

தடம் தந்த தகைமை : அஸ்தோத், காத்து நகர மக்களைத் தாக்கிய ஆண்டவர்!

கடவுளின் கை அவர்களை வன்மையாகத் தாக்கியதால், அந்நகர் எங்கும் மக்கள் இறந்தார்கள்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அக்காலத்தில் அஸ்தோதின் மக்களை அழிக்கும்படியாக ஆண்டவரின் கை அவர்களை வன்மையாகத் தாக்கியது. அஸ்தோதுவாழ் மக்களையும் அதன் எல்லைக்கு உட்பட்டவர்களையும் அவர் மூலக் கட்டிகளால் வாட்டி வைத்தனர். அஸ்தோதின் மக்கள் இவ்வாறு நிகழ்ந்ததைக் கண்டபோது, “இஸ்ரயேலின் கடவுளது பேழை நம்மிடையே இருக்கலாகாது. ஏனெனில், அவரது கை நம்மையும் நம் தெய்வம் தாகோனையும் வன்மையாகத் தாக்கியுள்ளது” என்று பேசிக் கொண்டனர். ஆகவே, அவர்கள் ஆளனுப்பி பெலிஸ்தியத் தலைவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களிடம், “இஸ்ரயேலரின் கடவுளது பேழையை நாம் என்ன செய்வோம்?” என்று கேட்டனர். அவர்கள், “இஸ்ரயேலரின் கடவுளது பேழையைக் காத்து நகருக்கு எடுத்துச் செல்ல வேண்டும்” என்று பதிலுரைத்தனர். அவ்வாறே, இஸ்ரயேலரின் கடவுளது பேழையை எடுத்துச் சென்றனர்.

அதை அங்கு எடுத்துச் சென்ற பின், ஆண்டவரின் கை அந்நகரை வன்மையாகத் தாக்கி, மாபெரும் அழிவை ஏற்படுத்தியது. அவர் அந்நகர் மக்களை, சிறியோர் முதல் பெரியோர் வரை மூலக் கட்டிகளால் வதைத்தார். அவர்கள் கடவுளின் பேழையை எக்ரோனுக்கு அனுப்பினார்கள். கடவுளின் பேழை எக்ரோனுக்கு வரவே, எக்ரோனியர், “எங்களையும் எங்கள் மக்களையும் அழிக்கவே இஸ்ரயேலரின் கடவுளது பேழையைக் கொண்டு வந்து விட்டார்கள்” என்று கத்தினார்கள். எனவே, அவர்கள் ஆளனுப்பி பெலிஸ்திய தலைவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களிடம், “இஸ்ரயேலின் கடவுளது பேழையைத் திருப்பி அதன் இடத்திற்கே அனுப்பி விடுங்கள். எங்களையும் எங்கள் மக்களையும் அவர் கொல்லாதிருக்கட்டும்” என்று கேட்டுக் கொண்டனர். கடவுளின் கை அவர்களை வன்மையாகத் தாக்கியதால், அந்நகர் எங்கும் மக்கள் இறந்தார்கள். இறவாமல் இருந்த மக்கள் மூலக் கட்டிகளால் வதைக்கப்பட்டார்கள். அந்நகரின் கூக்குரல்கள் வான் மட்டும் எழும்பியது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 August 2023, 12:29