தேடுதல்

சாலமோன் அரசர் சாலமோன் அரசர் 

தடம் தந்த தகைமை – கடவுள் சாலமோனுக்கு இரண்டாம் முறை தோன்றல்

ஆண்டவர் கிபயோனில் சாலமோனுக்குக் காட்சியளித்தது போல், மீண்டும் அவருக்குக் காட்சியளித்தார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

சாலமோன் ஆண்டவரின் இல்லத்தையும் அரச மாளிகையையும் இன்னும் கட்ட விரும்பிய, எல்லாவற்றையும் கட்டி முடித்த பின், ஆண்டவர் கிபயோனில் சாலமோனுக்குக் காட்சியளித்தது போல், மீண்டும் அவருக்குக் காட்சியளித்தார். ஆண்டவர் அவரிடம் சொன்னது: “என் முன்னிலையில் நீர் செய்த வேண்டுதலையும் விண்ணப்பத்தையும் கேட்டேன். நீ கட்டின இக்கோவிலில் எனது பெயர் என்றென்றும் விளங்கும்படி அதைப் புனிதமாக்கினேன். என் கண்களும் என் இதயமும் எந்நாளும் அங்கே இருக்கும். உன் தந்தை தாவீதைப் போல் மனத்தூய்மையுடனும், நேர்மையுடனும் நான் கட்டளையிட்ட அனைத்தையும் கடைப்பிடித்து, நான் கொடுத்த நியமங்களுக்கும் நீதிச் சட்டங்களுக்கும் ஏற்ப என் முன்னிலையில் நீ நடப்பாயாகில், ‘இஸ்ரயேலின் அரியணையில் வீற்றிருக்க ஒருவன் இல்லாமல் போகமாட்டான்’ என்று உன் தந்தை தாவீதுக்கு நான் சொன்னபடி, இஸ்ரயேலின் மீது உன் ஆட்சி என்றென்றும் நிலைக்குமாறு செய்வேன். ஆனால், நீயோ உன் பிள்ளைகளோ என்னைவிட்டு விலகி, நான் உங்களுக்கு இட்ட விதிமுறைகளையும் நியமங்களையும் பின்பற்றாமல், வேறு வழியில் சென்று, வேற்றுத் தெய்வங்களை வணங்கி, அவற்றுக்கு ஊழியம் செய்தால்,நான் இஸ்ரயேலருக்கு அளித்துள்ள நாட்டிலிருந்து அவர்களை விரட்டி விடுவேன். என் பெயர் விளங்க நான் புனிதமாக்கின இக்கோவிலை என் பார்வையில் இராதபடி தகர்த்து விடுவேன். அப்பொழுது ‘இஸ்ரயேல்’ மற்றெல்லா மக்களினங்களிடையே பழமொழியாகவும் இழுக்குச் சொல்லாகவும் அமையும். இக்கோவில் இடிந்த கற்குவியல் ஆகும். அதைக் கடந்து செல்லும் எவனும் திகிலடைவான்; சீழ்க்கையடித்து இகழ்ச்சியாய்ப்பேசி ‘ஆண்டவர் இந்நாட்டுக்கும் இக்கோவிலுக்கும் இப்படிச் செய்தது ஏன்?’ என்று கேட்பான். அதற்கு மற்றவர்கள், ‘இவ்வினத்தார் தங்கள் மூதாதையரை எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்த தங்கள் கடவுளாகிய ஆண்டவரை விட்டு விலகி வேற்றுத் தெய்வங்களை வழிபட்டு வணங்கி அவற்றுக்கு ஊழியம் செய்தனர். எனவே, ஆண்டவர் இத்துன்பமெல்லாம் அவர்களுக்கு வரச் செய்திருக்கிறார்’ என்பார்கள்.”

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 August 2023, 11:34