தேடுதல்

அரசர் சாலமோன் அரசர் சாலமோன் 

தடம் தந்த தகைமை - சாலமோன் வேற்றுத் தெய்வங்களை வழிபடல்

சாலமோன் சீதோனியரின் தேவதையான அஸ்தரேத்தையும் அம்மோனியரின் அருவருப்பான மில்க்கோமையும் வழிபடலானார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

அரசர் சாலமோன் அயல்நாட்டுப் பெண்கள் பலர்மேல் மோகம் கொண்டார். பார்வோனின் மகளை மணந்ததுமின்றி மோவாபியர், அம்மோனியர், ஏதோமியர், சீதோனியர், இத்தியர் ஆகிய பல நாட்டுப் பெண்களையும் மணந்தார். அவ்வேற்றினத்தாரைக் குறித்து ஆண்டவர் இஸ்ரயேல் மக்களிடம், “நீங்கள் அயல்நாடுகளிலிருந்து பெண் கொள்ளவும் வேண்டாம்; கொடுக்கவும் வேண்டாம்; ஏனெனில், அவர்கள் தம் தெய்வங்களை வணங்கும்படி உங்கள் உள்ளங்களை மயக்கி விடுவார்கள்” என்று கூறியிருந்தார். அப்படிக் கூறியிருந்தும் அந்நாட்டுப் பெண்கள்மேல் சாலமோன் மையல் கொண்டிருந்தார். சாலமோனுக்கு எழுநூறு அரசகுலப் பெண்கள் மனைவியராகவும் முந்நூறு பெண்கள் வைப்பாட்டிகளாகவும் இருந்தார்கள். அப்பெண்கள் அவரது இதயத்தைத் தவறான வழியில் திருப்பி விட்டார்கள். சாலமோன் முதுமை அடைந்தபோது, அவருடைய மனைவியர் அவர் இதயத்தை வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றும்படி மாற்றிவிட்டனர். அதனால் அவர் உள்ளம் தம் தந்தை தாவீதின் உள்ளத்தைப் போல் கடவுளாகிய ஆண்டவருக்கு முற்றிலும் பணிந்திருக்கவில்லை. சாலமோன் சீதோனியரின் தேவதையான அஸ்தரேத்தையும் அம்மோனியரின் அருவருப்பான மில்க்கோமையும் வழிபடலானார். இவ்வாறு, சாலமோன் ஆண்டவர் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்தார். தம் தந்தை தாவீது ஆண்டவரை முழுமையாகப் பின்பற்றியது போன்று அவர் செய்யவில்லை. சாலமோன் எருசலேமுக்கு எதிரில் இருந்த மலையில் மோவாபியரின் அருவருப்பான கெமோசுக்கும் அம்மோனியரின் அருவருப்பான மோலேக்குக்கும் தொழுகைமேடுகளைக் கட்டினார். இப்படியே, தங்கள் தெய்வங்களுக்குத் தூபம் காட்டிப் பலியிடுவதற்காக, வேற்றினத்தாரான தம் மனைவியர் எல்லோருக்கும் சாலமோன் இவ்வாறு செய்து கொடுத்தார்.

ஆண்டவர் சாலமோன்மீது சினமுற்றார். ஏனெனில், தமக்கு இருமுறை காட்சியளித்திருந்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரிடமிருந்து அவர் இதயம் விலகிச் சென்றது. 10வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்ற வேண்டாம் என்று ஆண்டவர் அவருக்குக் கட்டளையிட்டிருந்தும், அக்கட்டளையை அவர் கடைப்பிடிக்கவில்லை. ஆகையால், ஆண்டவர் சாலமோனை நோக்கி, “நான் உன்னோடு செய்த உடன்படிக்கையையும், நான் உனக்கு விதித்த நியமங்களையும் மீறி, நீ இவ்வாறு நடந்துகொண்டதால் உன் அரசை உன்னிடமிருந்து பறித்து அதை உன் பணியாளனுக்குக் கொடுக்கப்போவது உறுதி. ஆயினும், உன் தந்தை தாவீதின் பொருட்டு, உன் காலத்தில் நான் இதைச் செய்யமாட்டேன். உன் மகன் கையினின்று அதைப் பறித்து விடுவேன். ஆயினும், அரசு முழுவதையும் பறித்துவிடாமல், என் அடியான் தாவீதின் பொருட்டும் நான் தேர்ந்து கொண்ட எருசலேமின் பொருட்டும் ஒரு குலத்தை உன் மகனிடம் விட்டுவைப்பேன்” என்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 August 2023, 13:20