வாரம் ஓர் அலசல் – விண்ணேற்பு அன்னை பெருவிழா
மெரினா ராஜ் - வத்திக்கான்
வானளவு உயர்ந்த உள்ளம், கடலளவு அளந்த கருணை, வெறுப்பைக் காட்டாது அன்பை மட்டுமே அள்ளிக் கொடுக்கும் அமுத சுரபி- தாய். அத்தகைய தாயாம் அன்னை விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பெருவிழாவை ஆகஸ்ட் 15 அன்று நாம் சிறப்பிக்கின்றோம். தனயனின் கனவை நனவாக்க, தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற, தன்னையே அர்ப்பணித்த தாய் அன்னை மரியா. கவிஞர் திருவிக. அவர்கள் தாய்மையைக் குறித்துப் பாடுகையில், உலகெல்லாம் உதுப்பிடம் தாய்மை, உதித்து தங்கி ஓங்குமிடம் தாய்மை, கலையின் மூலம் கமழுமிடம் தாய்மை, என்று பாடியிருக்கிறார். வீரமாமுனிவரோ, உருவிலான் உருவாகி உலகில் ஓர் மகன் உதிப்ப, கருவிலான் கருத்தாங்கி கன்னித்தாய் ஆயினயே என்று அன்னை மரியின் தாய்மையைப் பற்றி பாடுகிறார். இத்தகைய தாய்மையின் பிறப்பிடமான அன்னையின் விண்ணகப்பிறப்பைக் கொண்டாடி மகிழும் வேளையில் இப்பெருவிழா பற்றியக் கருத்துக்களை இன்று நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்பணி ஜெரோசின் ஏ கத்தார் ஆவார். 1978 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 நாள் குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட இவர், உரோமில் உள்ள இலாத்தரன் பல்கலைக்கழகத்தில் இறையியல் பயின்றவர். தூத்துக்குடி மறைமாவட்ட அருள்பணியாளரான ஜெரோசின் அவர்கள், இந்தியாவிலும் இத்தாலியிலும் பங்குபணியாளராக திறம்பட செயலாற்றியவர். கத்தோலிக்க இளையோர் இயக்கம், Ycs, Ysm ஆகிய தமிழ்நாடு கத்தோலிக்க இளையோர் இயக்கங்களின் இயக்குநராக துடிப்புடன் பணியாற்றியவர். மேலும் கத்தோலிக்க கிராமப்புற இளைஞர் இயக்கத்திற்கான ஆசியாவின் அருள்பணியாளராக ஆலயப்பணியாற்றியவர். (MIJARC ASIA) தற்போது தூத்துக்குடி தூய அன்னை வேளாங்கண்ணி ஆலயப் பங்குத்தளாத்தில் பங்குப் பணியாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார் தந்தை அவர்களை விண்ணேற்பு அன்னை பெருவிழா பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
வார்த்தையிலும் வாழ்க்கையிலும் மிகச்சிறந்த சொல் அம்மா. எதிர்பார்ப்பில்லா உறவின் அடையாளம் அம்மா. அம்மா என்பது வெறும் வார்த்தை அல்ல வாழ்வின் சாரம். அன்னை மரியாள் மேல் பக்தி கொண்டு நீடித்து நிலைத்து வாழ்வோம். இறைவனை அன்பு செய்து, இறை விருப்பத்தை நிறைவு செய்து, இறைவனுக்கு பணி செய்தவர் நம் தாய். அவர் அன்று கற்பித்ததை இன்று நம் வாழ்வில் பயிற்சிக்கின்றோம். அன்னை மரி மேல் அளவற்ற பக்தி கொண்டு அவரின் பாதுகாப்பில் நம் வாழ்வை ஒப்படைப்போம். இறைவனை எவ்வாறு முழுமையாக அன்பு செய்வது என்பதை தன் வாழ்வால் எண்பித்த அன்னை மரியாள் போல நாமும் செயல்படுவோம். ஆகட்டும் என்ற ஒற்றை சொல்லால் அகிலத்தை அரவணத்த நம் தாய் போல நம் வாழ்வாலும் பணியாலும் அன்னை மரியின் பக்தியை அகிலமெங்கும் பரப்புவோம். அனைவருக்கும் இனிய விண்ணேற்பு அன்னை பெருவிழா நல்வாழ்த்துக்கள்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்