தேடுதல்

அரசால் கைப்பற்றப்பட்ட இயேசுசபையினரின் கல்லூரி அரசால் கைப்பற்றப்பட்ட இயேசுசபையினரின் கல்லூரி 

நிகராகுவாவில் இயேசுசபையினருக்கு எதிராக அரசின் நடவடிக்கை

நிகராகுவா நாட்டில் உண்மைக்கும் மனித உரிமைகளுக்கும் எதிராக அரசு நடத்திவரும் அத்துமீறல் நடவடிக்கைகளை கண்டித்துள்ளன உலக கத்தோலிக்க துறவுசபைகள்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

நிகராகுவா அரசு தலத்திருஅவைக்கு எதிராக எடுத்துவரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, அந்நாட்டு தலைநகரிலுள்ள தங்கள் தனியார் இல்லத்தைவிட்டு இயேசுசபை அருள்பணியாளர்கள் வெளியேற வேண்டும் என கட்டளையிட்டுள்ளது.

ஆகஸ்ட் மாத மத்தியில் இயேசுசபையினரால் தலைநகர் மனாகுவாவில்  நடத்தப்படும் மத்திய அமெரிக்கப் பல்கலைக்கழகத்தை மூடிய அரசு, தற்போது அதன் அருகிலுள்ள தனியார் இல்லத்திலிருந்து இயேசுசபை அருள்பணியாளர்களும் வெளியேறவேண்டும் என கட்டளையிட்டுள்ளது.

பல்கலைக்கழகத்துக்கு அருகே பல்கலைக்கழகத்திற்கு தொடர்பில்லாத தனியார் நிலத்தில் இருக்கும் இயேசுசபையினரின் Villa Carmen என்ற இல்லம் குறித்த அனைத்து ஆவணங்களும் காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டபோதிலும், அவர்களை வெளியேற்றுவதில் மும்முரமாகச் செயல்பட்டுள்ளது அரசு.

பல்கலைக்கழகத்தைக் கைப்பற்றிய அரசு, அதன் அருகிலிருந்த இயேசுசபை இல்லத்தையும் தற்போது மூடியுள்ளதால் இயேசுசபை அருள்பணியாளர்கள், தலைநகரிலுள்ள புனித இக்னேசியஸ் மையத்தில் குடியேறியுள்ளனர்.

2018ஆம் ஆண்டு நிகாராகுவா அரசுக்கு எதிரான போராட்டம் மத்திய அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்பட்டதால், இயேசுசபையினர் நடத்தும் புகழ்பெற்ற அந்த பல்கலைக்கழகத்தை ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி கைப்பற்றியுள்ளது அந்நாட்டு அரசு.

நிகராகுவா நாட்டில் உண்மைக்கும் மனித உரிமைகளுக்கும் எதிராக அரசு நடத்திவரும் அத்துமீறல் நடவடிக்கைகளை கண்டித்துள்ள உலக கத்தோலிக்க துறவுசபைகள், கத்தோலிக்க பல்கலைக்கழகத்தையும் இயேசு சபையினரையும் தீவிரவாதிகள்போல் நடத்தியுள்ளது குறித்து கண்டனத்தை வெளியிட்டுள்ளன.

மனாகுவா துணை ஆயர் Silvio José Báez அவர்கள் மறைமாவட்டத்திலிருந்து வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டு அமெரிக்க ஐக்கிய நாட்டில் தற்போது வாழ்ந்துவருவதும், 2022ஆம் ஆண்டு நிகராகுவாவிற்கான திருப்பீடத்தூதர் பேராயர் Waldemar Stanislaw Sommertag அவர்கள் அரசால் வெளியேற்றப்பட்டதும், அதே ஆண்டு ஆயர் Rolando Álvarez அவர்கள் கைது செய்யப்பட்டு இன்னும் சிறையில் வாடிவருவதும் குறிப்பிடும்படியானவை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 August 2023, 13:44