தேடுதல்

பெரு ஆயர்கள் பெரு ஆயர்கள்  (AFP or licensors)

நிகரகுவா இயேசு சபையினருடன் பெரு ஆயர்கள் ஒருமைப்பாடு

அதிகாரம் என்பது கண்மூடித்தனமானதாக இருக்கும்போது, அது வன்முறையானதாகவும் கொலைவெறியுடையதாகவும் மாறி, சுதந்திர குரல்களை அடக்கவும் செய்கிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

நிகரகுவா நாட்டில் அரசின் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுவரும் இயேசு சபையினருடன் தங்கள் ஒருமைப்பாட்டை அறிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர் பெரு நாட்டு கத்தோலிக்க ஆயர்கள்.

இயேசுசபையின் மத்திய அமெரிக்க மாநிலத்தலைவருக்கு தங்கள் ஒருமைப்பாட்டை வெளியிட்டு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள பெரு நாட்டு ஆயர்கள், நிகரகுவாவில் பல்வேறு அடக்குமுறைகளை சந்திக்கும் இயேசுசபையினரோடு ஒருமைப்பாட்டை அறிவிக்கும் அதேவேளை, அவர்களோடு நெருக்கத்தையும் உடன்பிறந்த உணர்வுடன்கூடிய செபத்தையும் தெரிவிப்பதாக அதில் உறுதி கூறியுள்ளனர்.

இயேசுவின் சீடர்களுக்குரிய விசுவாச உறுதிப்பாட்டின் பாதச்சுவடுகளை கிறிஸ்தவ வரலாற்றில் சிலுவையே அடையாளப்படுத்தியுள்ளது என தங்கள் கடிதத்தில் கூறும் பெரு நாட்டு ஆயர்கள்,  நிகரகுவா நாட்டில் பல நிறுவனங்களும் அமைப்புக்களும் சர்வாதிகார ஆட்சியால் துன்பங்களை அனுபவித்துவருவது குறித்தும் கவலையை வெளியிட்டுள்ளனர்.

அதிகாரம் என்பது கண்மூடித்தனமானதாக இருக்கும்போது, அது வன்முறையானதாகவும் கொலைவெறியுடையதாகவும் மாறி, சுதந்திர குரல்களை அடக்கவும், வாழ்வை வேரறுக்கவும், கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்தை மறுக்கவும் செய்கிறது எனக்கூறும் ஆயர்கள், நிகரகுவாவில் இயேசுசபைனர் அனுபவிக்கும் துன்பங்கள குறித்து கவலையை வெளியிட்டு, பாடுகளும் துயர்களும் நிச்சயமாக உயிர்ப்பை நோக்கியே இட்டுச்செல்லும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 August 2023, 15:04