தேடுதல்

ஆண்டவரின் திருப்பேழைக்கு முன் மகிழ்வுடன் நடனமாடிச் செல்லும் தாவீது அரசர் ஆண்டவரின் திருப்பேழைக்கு முன் மகிழ்வுடன் நடனமாடிச் செல்லும் தாவீது அரசர்  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 42-2, என் நெஞ்சே கடவுளையே நம்பியிரு!

இறைவன் எல்லா நலன்களையும் நமக்கு வாரிவழங்கும்போது கேள்வி எழுப்பாத நாம், துயரவேளை நம்மைச் சொல்லும்போதும் கேள்வியெழுப்பாமல் அதனை இறைதிருவுளமென ஏற்றுக்கொள்வோம்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 42-2, என் நெஞ்சே கடவுளையே நம்பியிரு!

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், 'இறைவன்மீது தாகம்கொள்வோம்!' என்ற தலைப்பில் 42-வது திருப்பாடலில் 01 முதல் 04 வரையுள்ள இறைவசனங்களை நமது சிந்தனைக்கு எடுத்துக்கொண்டோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும்  05 முதல் 08 வரையுள்ள இறைவார்த்தைகளை நமது தியானச் சிந்தனைகளுக்கு எடுத்துக்கொள்வோம். இப்போது இறையொளியில் அவ்வார்த்தைகளை அமைந்த மனதுடன் வாசிப்போம். “என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்? நீ கலக்கமுறுவது ஏன்? கடவுளையே நம்பியிரு; என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு இன்னும் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன். என் நெஞ்சம் மிகவும்  தளர்ந்துள்ளது; ஆகவே யோர்தான் நிலப்பகுதியிலும், எர்மோன், மீசார் மலைப்பகுதிகளிலும் உம்மை நான் நினைத்துக் கொண்டேன். உம் அருவிகள் இடியென முழங்கிட ஆழ்கடல் ஆழ்கடலை அழைக்கின்றது; உம் சிற்றலைகளும் பேரலைகளும் என்மீது புரண்டோடுகின்றன. நாள்தோறும் ஆண்டவர் தமது பேரன்பைப் பொழிகின்றார்; இரவுதோறும் நான் அவரைப் பாடுவேன்; எனக்கு வாழ்வளிக்கும் இறைவனை நோக்கி மன்றாடுவேன்” (வசனம் 05-08)

பொதுவாக நமக்கு சோதனைகள், துயரங்கள், துன்பங்கள் வரும்வேளை, "கடவுளே! ஏன் எனக்கு மட்டும் இப்படி செய்கிறாய்?" என்றுதான் கேட்கின்றோம். இந்த கேள்விக்கு ஒரு டென்னிஸ் வீரர் மிக அழகாகப் பதில் தந்திருக்கிறார். அந்த டென்னிஸ் வீரரின் பெயர் ஆர்தர் இராபர்ட் ஆஷ். ஜூனியர் விம்பிள்டன் ஓப்பன், யூ எஸ் ஓப்பன், ஆஸ்திரேலியா ஓப்பன் ஆகிய மூன்று கிராண்ட்ஸ்லாம் டைட்டில்களையும் வென்றே ஒரே மனிதர். தொழில் முறை போட்டியில் இருந்து 1980-ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற இவ்வீரர், 1983-ஆம் ஆண்டில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டபொழுது இரத்தம் தானமாகப் பெற்றுக் கொண்டதன் வழியாக அவருக்கு எய்ட்ஸ் நோய் பற்றிக்கொண்டது. இதனால் அவரது இரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைந்தனர். அப்பொழுது பலரும் அவருக்கு எழுதிய கடிதத்தில் கேட்டது: "உங்களுக்கு கடவுள் ஏன் இப்படி செய்கிறார்?" என்பதுதான்.

இந்தக் கேள்வியின் அடிப்படையில் அவர்  செய்தித்தாளில் ஒரு கட்டுரை எழுதினார். அந்த கட்டுரையின் தலைப்பு: "WHY ME?" "ஏன் எனக்கு மட்டும்?" அந்தக் கட்டுரையில் அவர் இவ்வாறு எழுதியிருந்தார். உலகில் எத்தனையோ மனிதர்கள் இருக்கும்பொழுது ஏன் எனக்கு மட்டும் எய்ட்ஸ் நோய் தந்தாய்? குடி பழக்கம் உள்ளவர்கள் எத்தனையோ பேர் இருக்கும்பொழுது அந்த பழக்கம் இல்லாத எனக்கு மட்டும் ஏன் எய்ட்ஸ் நோய் தந்தாய்? புகை பிடிப்பவர்கள் எத்தனையோ பேர் இருக்கும்பொழுது அந்தப் பழக்கம் இல்லாத எனக்கு மட்டும் ஏன் எய்ட்ஸ் நோய் தந்தாய்? பல பெண்களிடம் தொடர்பு உடையவர்கள் பலர் இருக்கும்பொழுது அந்தப் பழக்கம் இல்லாத எனக்கு மட்டும் ஏன் எய்ட்ஸ் தந்தாய்? இப்படியாக கேள்விகளை அடுக்கிக்கொண்டே போன அவர், இதனது தொடர்ச்சி அடுத்த வாரம் வரும் என்று கூறியிருந்தார். இதைப் படித்த மக்கள் அனைவரும் மிகவும் வருந்தினார்கள். அவர் என்னதான் பதில் தரப்போகிறார் என்று காத்திருந்தார்கள்.

அதற்கு அடுத்த வாரம் அந்தக் கட்டுரையின் இரண்டாம் பாகம் வெளிவந்தது. அதில் அவர் இவ்வாறு தொடர்ந்து எழுதியிருந்தார். உலகில் 500 இலட்சம் பேர் டென்னிஸ் விளையாடத் தொடங்குகிறார்கள். அதில் 50 லட்சம் பேர் தான் டென்னிஸ் கற்றுக் கொள்கிறார்கள். அதில் 5 லட்சம் பேர் தான் தொழில்முறை டென்னிஸ்க்கு வருகிறார்கள். அதில் 50,000 பேர் தான் சர்க்யூட் லெவல் டென்னிஸ்க்கு முன்னேறுகிறார்கள். அதில் 5000 பேர் தான் கிராண்ட்ஸ்லாம் லெவல் டென்னிஸ்க்கு முன்னேறுகிறார்கள். அதில் 50 பேர் தான் விம்பிள்டன் விளையாடுகிறார்கள்.  அதில் 4 பேர் தான் அரையிறுதிக்கு வருகிறார்கள். அதில் 2 பேர் தான் இறுதிப் போட்டிக்கு வருகிறார்கள். அதில் ஒருவர்தான் வெற்றி பெறுகிறார். அந்த வெற்றி பெற்ற ஒருவராக, அந்த வெற்றிக் கோப்பையைக் கையில் மகிழ்ச்சியோடுத் தாங்குபவராக என்னைக் கடவுள் ஆக்கியபொழுது நான் கேட்கவில்லை "ஏன் எனக்கு மட்டும் இப்படி என்று?" அவர் எனக்கு வெற்றி மேல் வெற்றி தந்தபொழுது நான் கடவுளிடம் கேட்கவில்லை "ஏன் எனக்கு மட்டும் இப்படி என்று?" எனக்குப் பேரும் புகழும் குவிந்தன. அப்போது நான் கடவுளிடம் கேட்கவில்லை "ஏன் எனக்கு மட்டும் இப்படி என்று?" பணம் மழைபோல எனக்குக் கொட்டியது. அப்பொழுது கேட்கவில்லை "ஏன் எனக்கு மட்டும் இப்படி என்று?" அப்போதெல்லாம் கேட்காத நான் இப்பொழுது கேட்பதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது? இன்பம் வந்தபோது ஏனென்று கேட்காத நான் துன்பம் வரும்போது மட்டும் ஏன் என்று கேட்பது எப்படி சரியாக இருக்க முடியும்? நான் கேட்க மாட்டேன். கடவுள் இதுவரை தந்ததை  எப்படி மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டேனோ அது போல இதையும் நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன். இதுவரை எனக்காக வாழ்ந்த நான் இனி பிறருக்காக வாழப் போகிறேன். என்னுடைய பணம், புகழ், செல்வம், மீதமுள்ள வாழ்நாள் அனைத்தையும் இந்த நோய் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இதற்கான மருந்து தயாரிக்கும் ஆராய்ச்சிகளிலும் நான் செலவு செய்யப் போகிறேன். கடவுள் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும். நன்றி என்று முடித்திருந்தார்.  

கடந்தவார நமது விவிலியத்தேடலில், ‘துயரவேளைகளில், கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல் நமது உள்ளங்களும் இறைவனுக்காக ஏங்கித் தவிக்கட்டும். உயிருள்ள இறைவன்மீது நமது நெஞ்சங்கள் தாகம் கொள்ளட்டும்’ என்ற சிந்தனையுடன் நிறைவு செய்திருந்தோம். இவ்வாரம் அதன் தொடர்ச்சியாகத்தான் அமைகின்றன நமது தியானச் சிந்தனைகள். அதாவது, எதிரிகளின் நக்கல்களுக்கும் நையாண்டிகளுக்கும், சீண்டல்களுக்கும், கேலிப்பேச்சுகளுக்கும், மனம்தளர்ந்த நிலைக்கும்  ஆளாகிய வேளையிலும், ‘என் ஆண்டவராம் உயிருள்ள இறைவன்மீதும் என் நெஞ்சம் தாகம் கொண்டுள்ளது, அவரையே நாடித்தேடுகிறது’ என்று தாவீது தனது இறைநம்பிக்கையில் சற்றும் அடிப்பிறலாமல் இருந்ததைக் கண்டு வியந்தோம். மேலும் சந்தர்ப்பச் சூழ்நிலையால் அவர் துயரங்களைச் சந்தித்தபோதிலும், அதாவது, நாடு கடத்தலுக்கும், எதிரிகளின் ஏச்சுப்பேச்சுகளுக்கும் ஆளான வேளையிலும், "என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்? நீ கலக்கமுறுவது ஏன்? கடவுளையே நம்பியிரு; என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு இன்னும் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்" என்றுரைக்கும் தாவீது அரசர், "நாள்தோறும் ஆண்டவர் தமது பேரன்பைப் பொழிகின்றார்; இரவுதோறும் நான் அவரைப் பாடுவேன்; எனக்கு வாழ்வளிக்கும் இறைவனை நோக்கி மன்றாடுவேன்" என்று கூறி தனது தளராத நம்பிக்கையை கடவுள்மீது மட்டுமே வைக்கின்றார்.

கடந்த 41-வது திருப்பாடலில், “நானோ நேர்மையில் உறுதியாய் இருக்கின்றேன்; நீர் எனக்கு ஆதரவளிக்கின்றீர்; உமது முன்னிலையில் என்னை என்றும் நிலைநிற்கச் செய்கின்றீர்” (வசனம் 12) என்று தாவீது அரசர் கூறியதைக் கண்டோம். ஆக, நேர்மையாளர்கள் தங்கள் வாழ்வில் வரும் அனைத்தையும் இறைவனின் திருவுளம் என ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவர்கள். அவர்களது இறைநம்பிக்கையை யாராலும் அசைத்துகூடப் பார்க்க முடியாது. அவர்கள் எந்த நேரத்தில் எதையும் இறைவனுக்காக விட்டுக்கொடுப்பதில் தயாராக இருப்பார்கள். எடுத்துக்காட்டாக ஆபிரகாம் வாழ்வைப் பார்க்கின்றோம். ஆண்டவர் ஆபிராமை நோக்கி, “உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல். உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய். உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்; உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்” என்று கூறியபோது, அவர் ஆண்டவர் கூறியவாறே புறப்பட்டுச் சென்றார் (தொநூ 12:1-4) என்று வாசிக்கின்றோம். மேலும் வயதான காலத்தில் அவருக்கு ஒரு குழந்தையைக் கொடுத்து, அதனைத் தனக்குப் பலியிட வேண்டுமென கேட்டபோது, எந்தக் கேள்வியுமே கேட்காமல் அதைச் செய்ய முன்வந்தார் நம் முதுபெரும்தந்தை ஆபிரகாம். அவ்வாறே, எல்லா செல்வ வளங்களையும் கொடுத்த கடவுள் அவற்றையெல்லாம் திரும்ப எடுத்துக்கொண்டபோது, “என் தாயின் கருப்பையினின்று பிறந்த மேனியனாய் யான் வந்தேன்; அங்கே திரும்புகையில் பிறந்த மேனியனாய் யான் செல்வேன்; ஆண்டவர் அளித்தார்; ஆண்டவர் எடுத்துக்கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப்பெறுக!” (யோபு 1:21) என்றார் யோபு. இதே மனநிலையைத்தான் நமது தாவீது அரசரிடமும் பார்க்கின்றோம். “என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே! என் தாயின் கருவில் எனக்கு உருதந்தவர் நீரே! அஞ்சத்தகு, வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்; உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை என் மனம் முற்றிலும் அறியும்” (திபா 139: 13-14) என்கின்றார். ஆகவே, இறைவன் எல்லா நலன்களையும் நமக்கு வாரி வழங்கும்போது கேள்வி எழுப்பாத நாம், துயரவேளை நம்மைச் சூழும்போதும் கேள்வியெழுப்பாது அதனை இறைதிருவுளமென ஏற்போம். அதற்கான அருள்வரங்களுக்காக இறைவனிடம் இந்நாளில் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 August 2023, 13:54