பொதுக் காலம் 19-ஆம் ஞாயிறு : இறைநம்பிக்கையை அழிக்கும் அச்சம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I. 1 அர 19: 9a, 11-13a II. உரோ 9: 1-5 III. மத் 14: 22-33)
அரண்மனைக்கு எதிரே திறந்த வெளியில் ஒரு பெரிய யானை துதிக்கையை ஆட்டிக்கொண்டு நின்றது. சுற்றிலும் அரண்மனை வீரர்கள் நின்று கொண்டிருந்தனர். யானையின் அருகே பாகன் கையில் அங்குசத்தோடு நின்றுக்கொண்டிருந்தான். பக்கத்திலிருந்த மேடைமேல் அமைச்சர்களுக்கும், அவர்தம் சுற்றத்தினருக்கும் நடுவில் ஒர் இருக்கை மீது அந்நாட்டு மன்னர் அமர்ந்திருந்தார். அங்கிருந்த மக்கள் அனைவரும் பெரும் வியப்போடு நின்றுகொண்டிருந்தனர். அவர்களின் ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை. அமைதியும் பயங்கரமும் அங்கே குடி கொண்டிருந்தன. “கொண்டு வாருங்கள் அந்த மதியற்றவனின் குழந்தைகளை!” என்று அம்மன்னர் இடி முழக்கம் போன்ற குரலில் ஏவலர்களுக்குக் கட்டளையிட்டார். காவலர்கள் ஓடினார்கள். கால் நாழிகையில் இரண்டு சிறுவர்களை அங்கே இழுத்துக்கொண்டு வந்தனர். சிறுவர்களுக்குப் பத்து வயதுக்குமேல் இராது. அவர்களுடைய தோற்றம் ஆதரவின்றி விடப்பட்டவர்கள் என்பதைக் கூறியது. அவர்கள் முற்றத்தில் யானைக்கு அருகில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டதும் அச்சிறுவர்கள் இருவரும் யானையைக் கண்டு பயந்து அழத் தொடங்கிவிட்டனர். கண்ணைக் கசக்கிக் கொண்டு அழுதபடியே திசைக்கொருவராக ஓடினர். பக்கத்திலிருந்த காவலர்கள் அவர்களை ஒடவிடாமல் மீண்டும் பிடித்துக் கொண்டுவந்து யானைக்குப் பக்கத்தில் நிறுத்தினர். சிறுவர்களைக் காவலர்கள் ஒடிவிடாமல் கையில் இறுக்கிப் பிடித்துக்கொண்டு நின்றதால் அவர்கள் முன்னிலும் பெரிய குரலில் வீறிட்டழுதனர். அவர்கள் காவலர் கைப்பிடிகளிலிருந்து திமிறி ஓட முயன்றனர். ஆனால், வெகுநேரம் அச்சிறுவர்கள் கதறியழுதும்கூட காவலர்களிடம் அவர்கள் முயற்சி பலிக்கவில்லை. இறுதியில் அழுகை நின்றது. அழுகையோடு பயமும் நின்று விட்டதோ என்னவோ, கண்களைக் கசக்கிக்கொண்டு மெல்ல விழித்து யானையை ஏறஇறங்கப் பார்த்தனர். பின்னர் அரசரையும் பார்த்தனர். இப்படியே சிலமணித்துளிகள் யானையையும் அரசரையும் மாறிமாறிப் பார்த்தனர் சிறிதுநேரத்தில் முற்றிலும் அழுகையையும் பயத்தையும் மறந்துவிட்ட சிறுவர்கள் தங்களுக்குள் சிரித்து விளையாடி மழலை மொழிகளால் யானையைப் பற்றிப் பேசிக் கொள்ளத் தொடங்கிவிட்டனர். உடனே அச்சிறுவர்களை தன்னிடம் அழைத்துவரச் சொன்ன மன்னர், “யானையைக் கண்டதும் முதலில் கதறியழுத நீங்கள், பின்னர் ஏன் உங்கள் அழுகையை நிறுத்திவிட்டு மகிழ்ந்தீர்கள்” எனக் கேட்டார். அதற்கு அச்சிறுவர்கள், அரசராகிய நீங்கள் எங்களோடு இருக்கிறீர்கள், அதனால் யானை எங்களைக் கொல்ல நேர்ந்தால் நீங்கள் எப்படியும் எங்களைக் காப்பாற்றிவிடுவீர்கள் என்ற நம்பிக்கைதான் எங்களின் பயத்தைப் போக்கியது” என்று கூறினார்கள். மன்னர் மகிழ்ந்து அவர்களுக்குப் பரிசளித்தார்.
இன்று நாம் பொதுக் காலத்தின் பத்தொன்பதாம் ஞாயிறைக் கொண்டாடுகிறோம். இன்றைய வாசகங்கள் அனைத்தும் இறைவன்மீதும் நாம் கொள்ளும் உண்மையான அன்பே நம்மிடம் துலங்கும் அச்சத்தைப் போக்கும் என்ற உன்னதமான கருத்தை நமக்கு வழங்குகின்றன. இன்றைய முதல் வாசகமும் நற்செய்தி வாசகமும் ஒன்றுக்கொன்று மிகவும் தொடர்புடையதாக இருக்கின்றன. இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய இறைவன்மீது ஆழமான நம்பிக்கைகொண்டிருந்த இறைவாக்கினர் எலியா பெரும் சுழற்காற்றைக் கண்டோ, நிலநடுக்கத்தைக் கண்டோ, தீயைக் கண்டோ சிறிதும் அச்சம் கொள்ளவில்லை. அதனால், அமைதியில் இறைவனைக் கண்டுகொள்கின்றார். ஆனால், நற்செய்தியில் இயேசுவின் சீடர்களிடம் விளங்கும் நம்பிக்கையற்ற நிலையைப் பார்க்கின்றோம். இன்றைய நற்செய்தியில், இயேசு அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்து வந்தார். அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி, “ஐயோ, பேய்” என அச்சத்தினால் அலறினர். உடனே இயேசு அவர்களிடம் பேசினார். “துணிவோடிருங்கள்: நான்தான், அஞ்சாதீர்கள்” என்று கூறுவதைப் பார்க்கின்றோம். மேலும், இந்நிகழ்வில், “துணிவோடிருங்கள்: நான்தான், அஞ்சாதீர்கள்” என்று இயேசு கூறியும்கூட, இன்னும் அதனை நம்ப முடியாதவராக, “ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்” என்கிறார் பேதுரு, அதேவேளையில், இப்படியொரு வாய்ப்பை இயேசு பேதுருவுக்கு வழங்கியும் கூட தன்னுள் நிலவும் அச்சத்தாலும் நம்பமுடியாத மந்த உள்ளத்தினாலும் அவர் கடலில் மூழ்கப்போகும் நிலையில் இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, “நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?” என்று கூறி அவரைக் காப்பாற்றுகின்றார்.
மேலும், பார்வையற்றிருந்த திமேயுவின் மகன் பர்த்திமேயு நாசரேத்து இயேசுதாம் அவ்வழியே போகிறார் என்பதைக் கேள்விப்பட்டு, “இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று கத்தத் தொடங்கினார். பேசாதிருக்குமாறு பலர் அவரை அதட்டினர்; ஆனால், அவர், “தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று இன்னும் உரக்கக் கத்தினார் (காண்க மாற் 10:46-52) என்றும், திருத்தூதர்கள் ஆண்டவரிடம், “எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்” என்று கேட்டார்கள். அதற்கு ஆண்டவர் கூறியது: “கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த காட்டு அத்தி மரத்தை நோக்கி, ‘நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்’ எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும் (காண்க லூக் 17:5-6) என்றும் நற்செய்தியில் வாசிக்கின்றோம். குறிப்பாக, இயேசு மார்த்தாவிடம், “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?” என்று கேட்டபோது, மார்த்தா அவரிடம், “ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்” (யோவா 11:25-27) என்று கூறுவதைப் பார்கின்றோம். இப்படயாக, இயேசுவுக்கு அறிமுகமாகதவர்கள், அவரை அறிந்திராதவர்கள், அவரோடு உரையாடியவர்கள், அவரோடு உறவாடியவர்கள் என எல்லா நிலைகளும் அவர்மீது நம்பிக்கைகொண்டு நலம்பெற்று திரும்பினார்கள். ஆனால் அவரை அறிந்து, அவருடன் உண்டு, அவருடன் பயணித்து, அவரது அன்பை சுவைத்து, அவரதுப் படிப்பினைகளைக் கேட்டு வாழ்ந்த சீடர்கள் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளாதது நமக்கு வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது. கடவுள்மீது அன்பும் நம்பிக்கையும் இல்லாத நிலையே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அடிப்படைக் காரணம் என்பதை நாம் அறிவோம். கடவுள்மீதான அன்பு குறையும்போது அவர்மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையும் சிறிது சிறிதாகக் குறையத் தொடங்குகிறது.
உண்மையான அன்பின் இலக்கணத்தை
உண்மையான அன்பின் இலக்கணத்தை சுவாமி விவேகானந்தர் இவ்வாறு விளக்குகிறார். ஓர் இளம் தாய் தெரு வழியாகச் சென்று கொண்டிருக்கிறாள். அவளைப் பார்த்து ஒரு நாய் குரைக்கிறது. அவள் பயந்து அருகிலுள்ள வீட்டில் தஞ்சம் புகுகிறாள். மறுநாள் அதே தாய் தன் குழந்தையுடன் சென்று கொண்டிருக்கிறாள். திடீரென ஒரு சிங்கம் அவள் குழந்தையின் மீது பாய்கிறது. அவள் அப்போது என்ன செய்வாள்? சிங்கத்தின் வாயில் தன்னை அர்ப்பணித்தாவது அவள் குழந்தையைக் காப்பாற்றுவாள் அல்லவா? அன்பு பயம் அறியாதது. பயத்திற்குக் காரணம் சுயநலநோக்கம் தான். சுயநலத்திற்கும், சிறுமைத்தனத்திற்கும் அடிமைப்படும் அளவிற்குப் பயம் அதிகரிக்கிறது. தான் ஒன்றுக்கும் உதவாதவன் என்று ஒருவன் நினைப்பானேயானால் பயம் அவனைப் பற்றிக் கொள்வது நிச்சயம். தான் அற்பன் என்ற எண்ணம் குறையக் குறைய பயமும் குறையும். துளியளவு பயம் இருந்தால்கூட அங்கே அன்பு இருக்க முடியாது. அன்பும், பயமும் இணைந்து இருக்க முடியாதவை. அவை ஒன்றுக்கொன்று முரணானவை. கடவுளை அன்புகூர்பவர் அவரிடம் அச்சம்கொள்ளக் கூடாது. பயத்தின் காரணமாக இறைவனை அன்புகூர்பவர்கள் மனிதர்களில் கடைப்பட்டவர்கள்; பக்குவப்படாதவர்கள். தண்டனை கிடைக்கும் என்ற பயத்தினால் இவர்கள் இறைவனை வழிபடுகிறார்கள். இப்படி தண்டனைக்குப் பயந்து இறைவனை வழிபடுவது, வழிபாடு என்பதையே தரம் தாழ்த்துவதாகும். அத்தகைய வழிபாடு சற்றும் பக்குவப்படாத தாழ்ந்தநிலை வழிபாடாகும். மனத்தில் பயம் இருக்கும்வரை அங்கே அன்பு எப்படி வர முடியும்? அன்பின் உருவமாக எண்ணி கடவுளை வழிபடுங்கள். எல்லையற்ற அன்பு என்பதே அவரது பெயர். தந்தை அல்லது தாய்க்குக் குழந்தையின்மீது உள்ள பாசம், கணவனுக்கு மனைவிமீதும், மனைவிக்குக் கணவன்மீதும் உள்ள காதல், நண்பர்களுக்கிடையே உள்ள நட்பு இவையனைத்தும் ஒன்றாகத் திரண்ட பேரன்பைக் கடவுள்மீது நாம் செலுத்தவேண்டும் என்கின்றார் விவேகானந்தர்.
நம்பிக்கையோடு வாழ்வோம்
வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார், “உலகில் இருக்கும் அனைத்தையும் படைத்தது கடவுளா?” என்று. அப்போது ஒரு மாணவன் “ஆமாம்”, எனப் பதில் அளிக்கிறான். அப்படியெனில், “சாத்தானை படைத்ததும் கடவுள் தானா?” என்று ஆசிரியர் கேட்க, அம்மாணவன் அமைதி காக்கிறான். சிறிது நேரம் கழித்து ஆசிரியரைப் பார்த்து அம்மாணவன், “ஐய்யா, நான் உங்களை சில கேள்விகள் கேட்கலாமா?” என்கிறான். அதற்கு ஆசிரியரும் அனுமதிக்கின்றார். அப்போது மாணவன், “குளிர்நிலை என்று ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்கின்றான். அதற்கு ஆசிரியர், “ஆமாம் இருக்கிறது. நீ குளிரை உணர்ந்தது இல்லையா?” என்று வினவுகின்றார். உடனே அம்மாணவன், மன்னிக்கவும் ஐய்யா. தங்கள் பதில் தவறு. குளிர் என்ற ஒன்று இல்லை. அது வெப்பத்தின் பற்றாக்குறை. சராசரி வெப்பம் குறைந்ததை தான் குளிர் என்கிறோம் என்கின்றான். மீண்டும் அம்மாணவன் ஆசிரியரைப் பார்த்து, “இருள் என்ற ஒன்று இருக்கிறதா?” என்று கேட்கின்றான். “ஆமாம், இருக்கிறது, என்கின்றார் ஆசிரியர். உடனே மாணவன், “மன்னிக்கவும். மீண்டும் தவறு. இருள் என்ற ஒன்று இல்லை. ஒளி பற்றாக்குறையைதான் இருள் என்கிறோம். உண்மையில் ஒளி, வெப்பம் இவற்றை தான் நாம் அதிகம் படிக்கிறோம். குளிரையும், இருளையும் அல்ல. அதேபோல், சாத்தான் என்று இவ்வுலகில் எதுவுமில்லை. உண்மையில் அது கடவுளின் மீது உள்ள நம்பிக்கையின் பற்றாக்குறை” என்றான். இதைக் கேட்டதும் திகைத்து நின்றார் ஆசிரியர். அந்த மாணவன் வேறு யாருமில்லை, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தான்...! ஆகவே கடவுமீதான நமது நம்பிக்கையும் குறையும்போது நாம் அலகைக்கு அடிமையாகின்றோம். பேதுரு தனது நம்பிக்கையின்மையாலேயே கடலில் மூழ்கத் தொடங்குகின்றார். அதனால்தான் “நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?” என்கின்றார் இயேசு. அவ்வாறே, உயிர்த்த ஆண்டவர் தோமாவுக்குக் காட்சியளித்தபோது, “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்” (யோவா 20:27) என்று கூறுவதைப் பார்க்கின்றோம். ஆண்டவராம் இயேசுவின்மீது அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்த புனித பவுலடியாரின் வாழ்வு நமக்கெல்லாம் மிகப்பெரும் பாடமாக அமைகின்றது. "நான் கிறிஸ்துவைப்போல் நடப்பதுபோன்று நீங்களும் என்னைப்போல் நடங்கள்" (1கொரி 11:1) என்று அறிவுறுத்துகின்றார். அவரது நம்பிக்கை நிறைந்த வாழ்வுக்கு இந்த வார்த்தைகளே சான்றாக அமைகின்றன.
குருவே, "கடவுள் நம்பிக்கை இல்லாமல் நம்மால் நேர்வழியில் செல்ல முடியாதா" என்று கேட்டார் ஒரு சீடர் ஒருவர். “நேரம் வரும்போது உனக்கு அதுபற்றி கூறுகின்றேன்” என்றார் குரு. சில நாட்கள் கழித்து ஆசிரமத்தில் இருந்த பசு ஒன்றை மேய்ச்சல் முடிந்து அதனைத் தொழுவத்தில் கட்டிவைப்பதற்காகக் கொண்டுசென்றார் அச்சீடர். அப்போது அங்கு வந்த குரு, “சீடனே, பசு உன்னுடன் வருகிறதா அல்லது நீ பசுவுடன் செல்கிறாயா? பசுவை நீ ஓட்டிச்செல்கிறாயா அல்லது பசு உன்னை ஓட்டிச் செல்கிறதா?” எண்டு கேட்டார். குழம்பிய சீடர், "குருவே நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? எனக்கு ஒன்றும் புரியவில்லை” என்றார். “இந்தப் பசுவை நீதானே பராமரித்து வருகிறாய்? அப்படியானால் அது உன் பேச்சைக் கேட்டுக்குமல்லவா? பின்னர் எதற்கு அதனைக் கையிறுகட்டி இழுத்துச் செல்கிறாய்” என்று கேட்டார். “கயிற்றை விட்டால் பசு ஓடிவிடும் குருவே” என்றார் அச்சீடர். “அப்படியானால் பசு உன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லையென்றுதானே அர்த்தம்” என்று எதிர்கேள்விகேட்டார் குரு. அதற்கு அச்சீடர், “இந்தப் பசுவை நான் 12 ஆண்டுகளாகப் பராமரித்து வருகின்றேன். அது எனக்கு நன்கு பழக்கமானதுதான். என்றாலும் அது எங்கும் ஓடிவிடக்கூடாது என்பதற்காக அதனைக் கையிறுகட்டி கொண்டுசெல்கின்றேன்” என்றார். உடனே குரு, “உன்னைபோலதான் இறைவனும். மனிதர்களாகிய நாம் அவருடைய அன்புப் பிள்ளைகள்தாம் என்றாலும், கட்டுப்பாடுகள் தளர்ந்து சீரழிந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இறைநம்பிக்கை என்னும் கயிற்றினைக்கொண்டு நம்மை நேர்வழியில் நடத்திசெல்கின்றார். உனது அன்றைய கேள்விக்கு இதுதான் எனது பதில்” என்று கூறினார். இறைநம்பிக்கையின் அவசியத்தை ஆழமாகப் புரிந்துகொண்ட அச்சீடர் அமைதியானார். இயேசுவின்மீது நான் கொண்டிருக்கும் நம்பிக்கை எப்படி இருக்கின்றது என்பதை இத்தருணத்தில் ஆழமாக சிந்திப்போம். கிறிஸ்தவ வாழ்வின் அச்சாணியே நம்பிக்கைதான். அச்சாணி இல்லாத எந்தயொரு வாகனமும் வலிமையுடன் நிலைத்து நிற்காது. அவ்வாறே நம்பிக்கையில்லா எந்தயொரு கிறிஸ்தவரின் வாழ்வும் நிலைபெறாது என்பதை உணர்வோம். ஆகவே, இயேசுவின்மீது உண்மையான அன்புகொண்டு இறைநம்பிக்கையில் நிலைத்துநிற்க இறையருள்வேண்டி இந்நாளில் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்