தேடுதல்

பேராயர்  Nguyen Nang பேராயர் Nguyen Nang 

திருப்பீட உறவு முன்னேற்றம் குறித்து வியட்நாம் திருஅவை மகிழ்ச்சி

திருப்பீட-வியட்நாம் உறவுகள் படிப்படியாக வளர்ந்து, திருத்தந்தை ஒரு நாள் வியட்நாம் நாட்டிற்கு திருப்பயணம் மேற்கொள்ளும் நிலைக்கு உயரவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

வத்திக்கானுக்கும் வியட்நாம் நாட்டிற்கும் இடையே அரசியல் உறவில் அண்மையில் நல்மாற்றம் ஒன்று இடம்பெற்றது குறித்து வியட்நாம் கத்தோலிக்கத் தலைவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர்.

வியட்நாம் தலைநகரில் திருப்பீடப் பிரதிநிதி தன் உறைவிடத்தைக் கொண்டுச் செயல்படுவார் என இரு நாடுகளுக்கும் இடையே ஜூலை மாதம் 27ஆம் தேதி கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்த வியட்நாம் ஆயர் பேரவைத் தலைவர், பேராயர்  Joseph Nguyen Nang அவர்கள், இதன் வழியாக திருத்தந்தையுடன் வியட்நாம் மக்கள் ஒரு நெருங்கிய உறவை உணர்வார்கள் எனவும் கூறியதோடு, இத்தகைய நல்மாற்றத்திற்காக இறைவனுக்கு அனைத்துக் கத்தோலிக்கர்களும் நன்றியுரைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இத்தகைய நல்முன்னேற்றங்கள் படிப்படியாக வளர்ந்து முழு அரசியல் உறவாக உருவாக வேண்டும் எனவும், திருத்தந்தை ஒரு நாள் வியட்நாம் நாட்டிற்கு திருப்பயணம் மேற்கொள்ளும் நிலைக்கு இது உயரவேண்டும் எனவும் தன் ஆவலை வெளியிட்டார் பேராயர் Nguyen Nang.

திருப்பீடத்தூதுவர் ஒருவர் வியட்நாமிற்குள்ளேயே தங்கியிருந்து செயல்பட தற்போது அனுமதிக்கப்பட்டிருப்பது, ஒரு முதல்படியாக எடுத்துக்கொள்ளப்பட்டு இருநாடுகளுக்கும் இடையேயான புரிந்துகொள்ளுதலில் நல்முன்னேற்றம் கண்டு, மதவிவகார பிரச்சனைகளுக்கு நல்தீர்வு காணப்படும் என பல திருஅவைத் தலைவர்கள் தங்கள் நம்பிக்கையை வெளியிட்டுள்ளனர்.

1975ஆம் ஆண்டில் வியட்நாம் நாடு ஒன்றாக இணைக்கப்பட்டதிலிருந்து திருஅவைச்சொத்துக்கள் அனைத்தும் அரசால் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 2011ஆம் ஆண்டிலிருந்துதான் திருப்பீடப் பிரதிநிதி, வேறு நாட்டில் தங்கிக்கொண்டு, அவ்வப்போது வியட்நாம் வந்து சென்று கொண்டிருந்தார்.

கடந்த ஜூலை 27ஆம் தேதி கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, வியட்நாமிலேயே தங்கிச் செயல்பட திருப்பீடத் தூதுவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 August 2023, 15:02