தேடுதல்

தாக்கப்பட்ட கிறிஸ்தவ ஆலயம் தாக்கப்பட்ட கிறிஸ்தவ ஆலயம்  (AFP or licensors)

தாக்கப்படும் பாகிஸ்தான் கிறிஸ்தவ ஆலயங்கள்

வன்முறைச் செயல்கள், பாகிஸ்தான் கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் தீவிரவாத அச்சுறுத்தல்களை மீண்டும் எடுத்துக்காட்டுகின்றன.

மெரினா ராஜ் - வத்திக்கான்

பாகிஸ்தானின் ஜாரன்வாலா மாவட்டத்தில் உள்ள பைசலாபாத்தில் கிறிஸ்தவ ஆலயங்கள் அழிக்கப்படுவது, மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறைத் தாக்குதல்கள் தீவிரமடைவது குறித்து உலக கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு WCC அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் முனைவர் Jerry Pillay.

அண்மையில் பாகிஸ்தானில் ஒரு பிரஸ்பிட்டீரியன் ஆலயம், ஒரு கத்தோலிக்க ஆலயம், உட்பட 6 கிறிஸ்தவ ஆலயங்கள் எரிக்கப்பட்டும் அருள்பணியாளர்கள் மற்றும் போதகர்கள் அச்சுறுத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டும் வரும் நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளார் WCC எனப்படும் உலக கிறிஸ்தவ சபைகள் கூட்டமைப்பின் பொதுச்செயலர், முனைவர் Jerry Pillay.

இத்தகைய வன்முறைச் செயல்கள் பாகிஸ்தான் கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் தீவிரவாத அச்சுறுத்தல்களை மீண்டும் எடுத்துக்காட்டுகின்றன என்றும் கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் இத்தகைய வன்முறைத் தாக்குதல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களைத் தடுக்க பாகிஸ்தான் அதிகாரிகள் உடனடியாக தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்றும் WCC அதன் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.

கிறிஸ்தவர்கள் மற்றும் பிற மத சமூகங்களின் உறுப்பினர்கள் மீது பாகிஸ்தானின் நிந்தனைச் சட்டங்களின் தாக்கம் குறித்து WCC நீண்ட காலமாக கடுமையான கவலைகளை வெளிப்படுத்தி வரும் நிலையில், இந்த சம்பவங்கள் அனைத்து பாகிஸ்தானியர்களும் மதச் சார்பற்ற குடிமக்களாக தங்கள் சம உரிமைகளை மதிக்கவும் அங்கீகரிக்கவும் தகுதியுடையவர்கள் என்ற விருப்பம், கடமை மற்றும் நாட்டில் தற்போது நிலவும் எதார்த்தமான சூழல் இரண்டிற்கும் இடையே உள்ள இடைவெளியை மீண்டும் நிரூபிக்கின்றன என்றும் கூறியுள்ளார் பேராசிரியர் ஜெர்ரி.

அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து ஒருவரையொருவர் பாதுகாப்பதை உறுதிசெய்தல், அனைவரையும் பாதுகாக்கும் பொறுப்பை அரசும் அதிகாரிகளும் ஏற்றுக்கொள்ளுதல், மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் அச்சத்துடன் வாழ வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்துதல் போன்றவற்றைக் கொண்ட பரந்த சமுதாயத்தை எதிர்பார்ப்பதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் பேராசிரியர் ஜெர்ரி.

வன்முறை மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் எழுப்பவும், பாகிஸ்தானில் சமமான மனித உரிமை, நீதி மற்றும் அமைதிக்காக செபிக்கவும் வலியுறுத்தியுள்ள பேராசிரியர் ஜெர்ரி அவர்கள், உலகெங்கிலும் உள்ள அனைத்து WCC உறுப்பினர் ஆலயங்கள், கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் மதங்களுக்கு இடையிலான உடன்பணியாளர்களுக்கு இதன் வழியாக அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 August 2023, 12:58