தேடுதல்

அருள்பணி வின்சென்ட் சின்னதுரை அருள்பணி வின்சென்ட் சின்னதுரை  

மரியன்னை மாநாட்டின் கனிகளாக விளைந்த செயல்பாடுகள்

மாற்றுத்திறனுடையோர்க்குக் கரம் கொடுப்பதும், உடன் பயணிப்பதும் அன்னையின் பிள்ளைகளாகிய நம் அனைவரின் கடமை.

மெரினா ராஜ் – வத்திக்கான்

தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார் என்ற மரியன்னையின் பாடலுக்கு ஏற்ப, மரியன்னை மாநாட்டின் கனிகளாக மணிப்பூர் மக்களுக்கு உதவியையும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆறுதலையும், அவர்களைப் பாதுகாப்போருக்கு உற்சாகத்தையும் அளித்து வருகின்றோம் என்று கூறினார் சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல அதிபரும் பங்குத் தந்தையுமான அருள்பணி வின்சென்ட் சின்னதுரை.

செப்டம்பர் 8 வெள்ளிக்கிழமை அன்னை மரியாவின் பிறப்பு பெருவிழா சிறப்புத் திருப்பலியில் நடைபெற்ற செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்த போது இவ்வாறு கூறிய சென்னை மயிலை உயர்மறைமாட்ட அருள்பணியாளரான அருள்தந்தை வின்சென்ட் சின்னதுரை அவர்கள் அன்னையின் கரிசனையான வார்த்தைகள் நமது செயல்களில் வெளிப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மணிப்பூர் வன்முறை காரணமாக தமிழகத்தின் சென்னைக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களில் ஏறக்குறைய 10 மணிப்பூர் குடும்பங்களை பெசண்ட் நகர் பங்குத்தளம் ஆதரித்து அவர்களுக்கு உணவு, உடை, உறைவிடம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை வழங்கி வருவதாக எடுத்துரைத்த அருள்பணி வின்சென்ட் அவர்கள், தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார், பசித்தோரை நலன்களால் நிரப்புகின்றார் என்ற அன்னை மரியின் வார்த்தை இங்கு வாழ்வாகின்றது என்றும் கூறினார்.

வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டு, சமூகத்தால் மறக்கப்பட்டு உறவினர்களால் தவிர்க்கப்பட்டு தங்களுக்குரிய மாண்பைப் பெற இயலாமல் தவிக்கும் மாற்றுத்திறனுடையோர்க்குக் கரம் கொடுப்பதும், உடன் பயணிப்பதும் அன்னையின் பிள்ளைகளாகிய நம் அனைவரின் கடமை, மாற்றுத்திறனாளிகளும் கடவுளின் மக்கள் என்பதனை வலியுறுத்தும் விதமாக அத்தகைய மக்களுக்கு ஆறுதலையும் அரவணைப்பையும் வழங்கி வருவதாகவும், அத்தகையவர்களைப் பாதுகாத்து பராமரிப்பவர்களை ஊக்குவிக்கும் செயல்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் எடுத்துரைத்தார் அருள்பணி வின்சென்ட்.

அன்னை மரியாவின் பிறப்பு பெருவிழா திருப்பலியில், இடம்பெயர்ந்த மணிப்பூர் குடும்பத்தார் அன்னைக்கு சூட்டப்பட இருந்த மணிமகுடத்தினை கையில் ஏந்தி அர்பணித்த நிகழ்வும், அன்னையின் திருக்கொடியினை மாற்றுத்திறனாளிகளைக் கவனிக்கும் பொறுப்பாளர்கள் ஏந்தி வந்ததும் அனைவர் மனதையும் உணர்ச்சிப்பெருக்கால் நிறைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 September 2023, 12:59