மங்கோலியாவில் இணக்க வாழ்வின் விதைகளை விதைத்த பயணம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணம், மங்கோலியா நாட்டில் இணக்க வாழ்வின் விதைகளை விதைத்துச் சென்றுள்ளதாக வத்திக்கான் செய்திகளுக்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்தார் அந்நாட்டு கர்தினால் ஜியார்ஜியோ மரெங்கோ.
மங்கோலியாவில் மிகச் சிறிய அளவில் வாழும் கத்தோலிக்க சமுதாயத்துடன் மட்டுமல்ல, முழு நாட்டுடனும் திருத்தந்தையின் இத்திருப்பயணம் நட்புணர்வுடன் கூடிய இணைப்பை உருவாக்கியுள்ளது என உரைத்த கர்தினால் மரெங்கோ அவர்கள், ஆசியாவின் இதயமாக இருக்கும் மங்கோலியாவில் உள்ள சிறிய கத்தோலிக்க சமுதாயத்துடன் அவரின் நெருக்கத்தையும் இது வெளிப்படுத்தியுள்ளது என்றார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதி, மகிழ்வு, நட்புணர்வு போன்றவைகளின் செய்தியை மங்கோலிய நாட்டிற்கு கொணர்ந்தார் என்பதில் மக்கள் உறுதியாக இருப்பதாகவும், சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதில் அனைத்து மதங்களுடனான ஒத்துழைப்பு அவசியம் என்பதை திருத்தந்தையின் செயல்பாடுகள் வழி மக்கள் உணர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார் கர்தினால் மரெங்கோ.
மங்கோலிய நாட்டிற்கும் திருப்பீடத்திற்கும் இடையேயான தொடர்பு நான்கு நூற்றாண்டுகளாக தொடர்கின்றபோதிலும், தற்போதுதான் அதனை உணர்வுபூர்வமாகக் காணமுடிந்தது என மேலும் எடுத்துரைத்தார் கர்தினால்.
மங்கோலிய நாட்டின் கத்தோலிக்கர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட திருப்பயணம், தன்னில் ஒரு நன்றியுணர்வை ஏற்படுத்தியுள்ளது எனவும் வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய நேர்முகத்தில் கூறினார் கர்தினால் மரெங்கோ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்