தேடுதல்

அதிதூதர்கள் மிக்கேல், கபிரியேல் மற்றும் ரபேல் அதிதூதர்கள் மிக்கேல், கபிரியேல் மற்றும் ரபேல்  

தடம் தந்த தகைமை – தோபியாவும் வானதூதர் இரபேலும்

நான் பார்வையற்ற மனிதன். விண்ணக ஒளியை என்னால் காணமுடியாது. ஒளியை ஒருபோதும் காண இயலாத இறந்தோர்போன்று இருளில் கிடக்கின்றேன், என்றார் தோபித்து

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

தோபித்து தம் மகன் தோபியாவை ஒரு பணியாக மேதியாவுக்கு அனுப்ப விரும்பினார். தம்முடன் மேதியாவுக்குச் செல்ல வழி தெரிந்த ஒருவரைத் தேடித் தோபியா வெளியே சென்றார். சென்று, தம்முன் நின்ற வானதூதர் இரபேலைக் கண்டார். ஆனால் அவர் கடவுளின் தூதர் என்பது அவருக்குத் தெரியாது. வானதூதர் இரபேலும் அவருடன் பயணிக்க இசைவு அளித்ததால், முதலில் தந்தையிடம் சென்று அறிவித்துவிட்டு, பிறகு அவரை தந்தையிடம் அழைத்துச் சென்றார். இரபேல் என்ற இளைஞர் உள்ளே நுழைந்தவுடன், தோபித்து முதலில் அவருக்கு வணக்கம் தெரிவித்தார். அதற்கு இரபேல், “வணக்கம். எல்லா மங்கலமும் உரித்தாகுக” என்று வாழ்த்தினார். “எனக்கு இனி என்ன மங்கலம் உண்டு? நான் பார்வையற்ற மனிதன். விண்ணக ஒளியை என்னால் காணமுடியாது. ஒளியை ஒருபோதும் காண இயலாத இறந்தோர்போன்று இருளில் கிடக்கின்றேன்; நான் உயிர்வாழும்போதே இறந்தவர்களுடன் இருக்கிறேன். மனிதரின் குரலைக் கேட்கிறேன்; ஆனால் அவர்களைக் காணமுடிவதில்லை” என்று கூறினார். அதற்கு அவர், “அஞ்ச வேண்டாம். விரைவில் கடவுள் உமக்கு நலம் அருள்வார். துணிவுகொள்ளும்” என்றார். பின்பு தோபித்து அவரிடம், “என் மகன் தோபியா மேதியாவுக்குச் செல்ல விரும்புகிறான். நீ வழிகாட்டியாக அவனோடு போக முடியுமா? தம்பி, உனக்கு உரிய சம்பளத்தைக் கொடுப்பேன்” என்றார். இரபேல் அவரிடம், “சரி, நான் அவருடன் போகிறேன். எனக்கு வழியெல்லாம் தெரியும். பன்முறை மேதியாவுக்குச் சென்றுள்ளேன். அதன் சமவெளிகள், மலைகளெங்கும் பயணம் செய்துள்ளேன். அவையெல்லாம் எனக்கு நன்கு பழக்கம்” என்றார். அதற்குத் தோபித்து இளைஞரிடம், “தம்பி, உன் குடும்பம் எது? குலம் எது? சொல்” என்றார். அவர், “குலத்தைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய தேவை என்ன?” என்றார். அதற்கு அவர், “தம்பி, நீ உண்மையாகவே யாருடைய மகன் எனத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். உன் பெயர் என்ன?” என்று வினவினார். இரபேல் அவரிடம், “நான் உம் உறவினர்களுள் ஒருவரான பெரிய அனனியாவின் மகன் அசரியா” என்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 September 2023, 14:43