தடம் தந்த தகைமை – குணமளிக்கும் மீனை தோபியா பிடித்தல்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
தோபியா தன் தந்தை இட்டப் பணியைச் செய்வதற்காக புறப்பட்டுச் செல்ல, வானதூதரும் உடன் சென்றார். அவர்களது நாயும் வெளியேறி அவர்களைத் தொடர்ந்து சென்றது. பொழுது சாயும்வரை அவர்கள் இருவரும் பயணம் செய்து, திக்ரீசு ஆற்றோரமாய்த் தங்கினார்கள். தோபியா தம் பாதங்களைக் கழுவத் திக்ரீசு ஆற்றில் இறங்கினார். பெரும் மீன் ஒன்று திடீரென்று நீரிலிருந்து துள்ளிக் குதித்து அவரது காலைக் கவ்வ முயன்றது. எனவே அவர் கதறினார். வானதூதர் அவரிடம், “பிடியும், மீனை உறுதியாகப் பிடியும்” என்றார். இளைஞர் மீனைப் பற்றியிழுத்து அதைக் கரைக்குக் கொண்டுவந்தார். வானதூதர் அவரிடம், “மீனைக் கீறி அதன் பித்தப்பை, இதயம், ஈரல் ஆகியவற்றை எடுத்து வைத்துக்கொள்ளும் ஏனெனில் அவை மருந்தாகப் பயன்படும். ஆனால் குடலை எறிந்துவிடும்” என்றார். அவ்வாறே இளைஞர் மீனைக் கீறி அதன் பித்தப்பை, இதயம், ஈரல் ஆகியவற்றை எடுத்து வைத்துக்கொண்டார். மீனின் ஒருபகுதியைச் சுட்டுச் சாப்பிட்டார். மீதியை உப்பிட்டு வைத்துக்கொண்டார். மேதியாவை நெருங்கும்வரை அவர்கள் இருவரும் சேர்ந்து பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
பின் இளைஞர் வானதூதரிடம், “சகோதரர் அசரியா, மீனின் இதயம், ஈரல், பித்தப்பை ஆகியவை எதற்கு மருந்தாகப் பயன்படும்?” என்று வினவினார். அதற்குத் தூதர் அவரிடம், “பேயாவது தீய ஆவியாவது பிடித்திருக்கும் ஒருவர்முன் மீனின் இதயத்தையும் ஈரலையும் புகையச் செய்தால், அவர்கள் முற்றிலும் நலம் பெறுவார்கள். இனி ஒருபோதும் அது அவர்களை அண்டாது. வெண்புள்ளிகள் உள்ள மனிதரின் கண்களில் பித்தப்பையைத் தடவி ஊதினால் அவர்கள் பார்வை பெறுவார்கள்” என்றார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்