தடம் தந்த தகைமை - அடக்கம் செய்யப்பட்ட இறையடியார்
மெரினா ராஜ் - வத்திக்கான்
தம் வழியே சென்ற இறையடியாரைத் திரும்பி வரச் செய்த இறைவாக்கினர் அதைக் கேட்டபோது, “இந்த இறையடியார் ஆண்டவரின் சொல்லை மீறியவர். எனவே, ஆண்டவர் அவருக்குச் சொல்லியிருந்தபடியே அவரைச் சிங்கத்துக்கு இரையாக்கினார். அது அவரைப் பீறிக் கொன்றுவிட்டது” என்றார். பின்னர், தம் மைந்தரை நோக்கி, “எனக்காகக் கழுதைக்குச் சேணம் பூட்டுங்கள்” என்றார். அவர்களும் சேணம் பூட்டினார்கள். அவர் புறப்பட்டுச்சென்று வழியில் அந்த இறையடியாரின் சடலம் கிடப்பதையும் அதனருகில் கழுதை, அந்தச் சிங்கமும் நிற்பதையும் கண்டார். அந்தச் சிங்கமோ சடலத்தைத் தின்னவுமில்லை; கழுதையைப் பீறிப் போடவுமில்லை. அப்பொழுது அந்த முதிய இறைவாக்கினர் இறையடியாரின் சடலத்தை எடுத்துக் கழுதையின்மேல் ஏற்றி, துக்கம் கொண்டாடவும் அதை அடக்கம் செய்யவும் தம் ஊருக்குக் கொண்டு வந்தார். அவர் அவரது சடலத்தைத் தம் கல்லறையில் அடக்கம் செய்தார். பிறகு அவர்கள், “ஐயோ! என் சகோதரனே!” என்று அவருக்காகப் புலம்பித் துக்கம் கொண்டாடினார்கள். அவர் அவரை அடக்கம் செய்தபின் தம் மைந்தரை நோக்கி, “நான் இறந்த பின் இறையடியாராகிய இவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையிலேயே என்னையும் அடக்கம் செய்யுங்கள். அவர் எலும்புகள் அருகே என் எலும்புகளையும் வையுங்கள். பெத்தேலில் இருக்கும் பலிபீடத்தையும் சமாரியாவின் நகர்களிலிருக்கும் எல்லாத் தொழுகை மேட்டுக் கோவில்களைப் பற்றியும் அவர் கூறிய ஆண்டவரின் வாக்கு திண்ணமாக நிறைவேறும்” என்றார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்