தடம் தந்த தகைமை - யூதாவின் அரசன் ரெகபெயாம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
சாலமோனின் மகன் ரெகபெயாம் யூதாவில் ஆட்சி செய்து வந்தான். ரெகபெயாம் அரசனான போது, அவனுக்கு வயது நாற்பத்தொன்று. ஆண்டவர் தமது திருப்பெயரை நிலைநாட்டும் பொருட்டு இஸ்ரயேலின் குலங்கள் அனைத்திலிருந்தும், தேர்ந்து கொண்ட நகராகிய எருசலேமில் அவன் பதினேழு ஆண்டுகள் அரசாண்டான். அம்மோனிய நாட்டினளான நாமா என்பவளே அவன் தாய். யூதா நாட்டு மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தார்கள். அவர்கள் தம் மூதாதையர் செய்த எல்லாவற்றையும் விட, மிகுதியான பாவம் செய்து அவருக்குப் பொறாத சினத்தைக் கிளப்பினர். அவர்கள் தொழுகைமேடுகள் எழுப்பி, ஒவ்வோர் உயர் குன்றிலும், பசுமரத்தின் அடியிலும், கல்தூண்களையும் அசேராக் கம்பங்களையும் நிறுத்தினர். நாட்டில் விலைஆடவர் இருந்தனர். இஸ்ரயேல் மக்கள்முன் இராதபடி ஆண்டவர் விரட்டியத்த வேற்றினத்தாரின் அருவருப்பான செயல்கள் அனைத்தையும் அவர்கள் செய்தார்கள்.
ரெகபெயாம் ஆட்சி செய்த ஐந்தாம் ஆண்டில் எகிப்தின் மன்னனாகிய சீசாக்கு எருசலேமின் மீது படையெடுத்து வந்தான். ஆண்டவரது இல்லத்தின் செல்வங்களையும் அரசனது அரண்மனையின் செல்வங்களையும் சாலமோன் செய்து வைத்த பொற்கேடயங்கள் எல்லாவற்றையும் கொள்ளையடித்துக் கொண்டு போனான். அக்கேடயங்களுக்குப் பதிலாக, அரசன் ரெகபெயாம் வெண்கலக் கேடயங்களைச் செய்து, அவற்றை அரண்மனை வாயிற்காப்போரின் தலைவர்களிடம் கொடுத்தான். அரசன் ஆண்டவரது இல்லத்திற்குள் நுழையும் போதெல்லாம் அரண்மனைக் காவலர்கள் அவற்றைத் தூக்கிக் கொண்டு போய்த் திரும்பி வந்து அவற்றைக் காவலறையில் வைப்பார்கள். ரெகபெயாம் தன் மூதாதையரோடு துயில் கொண்டு, அவர்களோடு தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அம்மோனியா நாட்டினளான நாமா என்பவளே அவன் தாய். அவனுக்குப் பின் அவனுடைய மகன் அபியாம் அரசன் ஆனான்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்