தடம் தந்த தகைமை - ஆண்டவரே பேசும் அடியவன் கேட்கிறேன்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
குழந்தைப் பேறு இல்லாத அன்னா, “எனக்கு ஒரு குழந்தையைத் தாருங்கள். அவனை உமக்கே அர்ப்பணிப்பேன்”, என மனம் கசிய, கண்ணீர் வழிய ஆலயத்தில் கடவுளின் சந்நிதியில் அழுது புலம்பினார். கடவுள் மனமிரங்கினார், சாமுவேல் பிறந்தார்.
சாமுவேல் பால் குடி மறந்த சிறுவனாய் மாறிய காலத்தில் ஆண்டவரின் ஆலயத்தில் அவனைக் கொண்டு வந்து குரு ஏலியிடம் ஒப்படைத்தார் தாய் அன்னா. அவன் ஆலய பணிகளில் ஏலிக்கு உதவியாய் இருந்தான்.
ஒரு நாள் இரவில் தூங்கிக்கொண்டிருந்த சாமுவேலின் காதுகளில், “சாமுவேல் சாமுவேல்” என அழைப்பது கேட்டது.
ஓடிப் போய் ஏலியின் முன்னால் நின்று, “ஐயா.. அழைத்தீர்களா?” எனக் கேட்டான் சிறுவன் சாமுவேல். தூக்கம் கலைந்த ஏலி சாமுவேலைப் பார்த்துக் குழம்பியவராக, “இல்லையே.. நீ போய் படுத்துக் கொள்” என்றார்.
“சாமுவேல்.. சாமுவேல்” என மீண்டும் குரல் அழைத்தது. மீண்டும் சாமுவேல் ஏலியின் முன்னால் போய் நின்றார். கண்களைக் கசக்கிய ஏலி குழம்பினார். “நான் உன்னை அழைக்கவில்லை. ஒருவேளை மீண்டும் உனக்குக் குரல் கேட்டால், ஆண்டவரே பேசும் அடியவன் கேட்கிறேன் என்று சொல்” என்றார். சிறுவன் சாமுவேல் மீண்டும் சென்று படுத்துக் கொண்டான்.
“சாமுவேல் சாமுவேல்” என மூன்றாம் முறையாக குரல் அழைத்தது.
“ஆண்டவரே பேசும் அடியவன் கேட்கிறேன்”, என சிறுவன் சாமுவேல் சொன்னான். கடவுள் சாமுவேலிடம் பேசினார்.
சாமுவேல் வளர்ந்தார். கடவுள் அவரோடு இருந்தார். அவர் ஒரு இறைவாக்கினராக மாறி, மக்கள் அனைவரையும் இறைவன் பால் திருப்பினார்.
கடவுள் சாமுவேல் வழியாக சவுல் என்னும் பென்யமின் குல மனிதரை அரசராக நியமித்தார். அவர் தான் இஸ்ரயேல் குலத்தின் முதல் மன்னர்.
காலங்கள் கடந்தன. சவுல் கடவுளின் வழியை விட்டு விலகினான். எனவே கடவுளின் அருகாமையும் அவரை விட்டு விலகியது. சாமுவேல் வயதாகி இறந்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்