இலங்கையில் புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு பட்டியலிடப்பட்டுள்ள இலங்கை அரசின் ‘ஆன்லைன் பாதுகாப்பு சட்டமூலத்தின் சட்டப்பூர்வ தன்மையை’ ஊடக அமைப்புகள், அரசியல் கட்சிகள் தலத் திருஅவை மற்றும் உரிமைகள் குழுக்கள் சவாலுக்கு உட்படுத்தியுள்ளதாக யூகான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள், ஆன்லைன் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க அல்லது நீக்க தன்னிச்சையான மற்றும் நியாயமற்ற பரந்த அளவிலான அதிகாரங்கள் இதன் வழியாக அந்நாட்டின் அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளன என்று தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
மேலும் இந்த விவகாரத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்றும், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றத்தில் இம்மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளார் கர்தினால் இரஞ்சித். அக்டோபர் 3-ஆம் தேதி முதல் வாசிப்புக்காக இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளை, ஆபாசப் படங்கள் மற்றும் ஆன்லைன் மோசடி போன்ற எதிர்மறையான தாக்கங்களிலிருந்து குழந்தைகள் மற்றும் பெண்களைப் பாதுகாப்பதே இம்மசோதாவின் நோக்கம் என்று அந்நாட்டின் அரசு கூறியுள்ளது.
இம்மசோதாவை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்களை அக்டோபர் 10-ஆம் தேதி அந்நாட்டின் உச்சநீதி மன்றம் விசாரிக்கத் தொடங்கிய நிலையில், இது அக்டோபர் 20-ஆம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியின் உச்சக்கட்டத்தில் கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து அந்நாட்டின் அதிபர் விக்கிரமசிங்கே அவர்கள் கருத்து வேறுபாடுகளை ஒடுக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு வருகிறார். (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்