விவிலியத் தேடல்: திருப்பாடல் 44-4, இறைவனின் துணை இனிதாகட்டும்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘மனம் தளராதிருப்போம்!’ என்ற தலைப்பில் 44-வது திருப்பாடலில் 15 முதல் 22 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 23 முதல் 26 வரையுள்ள இறைவார்தைகள் குறித்து தியானித்து இத்திருப்பாடலை நிறைவுக்குக் கொணர்வோம். இப்போது அவ்வார்தைகளை இறையொளியில் வாசிப்போம். “என் தலைவா! கிளர்ந்தெழும், ஏன் உறங்குகின்றீர்? விழித்தெழும்; எங்களை ஒருபோதும் ஒதுக்கித் தள்ளிவிடாதேயும். நீர் உமது முகத்தை ஏன் மறைத்துக் கொள்கின்றீர்? எங்கள் சிறுமையையும் துன்பத்தையும் ஏன் மறந்து விடுகின்றீர்? நாங்கள் தரைமட்டும் தாழ்ந்துவிட்டோம்; எங்கள் உடல் மண்ணோடு ஒட்டிக்கொண்டுள்ளது. எழுந்து வாரும்; எங்களுக்குத் துணை புரியும்; உமது பேரன்பை முன்னிட்டு எங்களை மீட்டருளும்” (வசனம் 23-26)
கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதியன்று, அட்லாண்டிக் கடலில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 36 புலம்பெயர்ந்தோர் ஸ்பெயின் நாட்டுக் கடற்படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டு க்ரான் கேனரி தீவுப்பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஆப்பிரிக்க பகுதிகளில் இருந்து அட்லாண்டிக் கடலில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு மக்கள் புலம்பெயர்வது அண்மைய ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள்ளாகவே ஏறத்தாழ 13 ஆயிரத்து 100-க்கும் அதிகமானோர் புலம்பெயர்ந்தோராக கெனரி தீவுகளுக்கு வந்தடைந்ததுக் குறிப்பிடத்தக்கது. அவ்வாறே, கடலில் மூழ்கும் நிலையில் இருந்த படகு ஒன்றில் இருந்து புலம்பெயர்ந்தோர் என சந்தேகிக்கப்பட்ட ஏறத்தாழ 300 பேர் சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்தது. அவர்கள் பயணித்த படகில் இருந்த இலங்கை நாட்டைச் சேர்ந்த ஒருவர், இலங்கை கடற்படையினரைத் தொடர்பு கொண்டு, தாங்கள் ஆபத்தில் இருப்பதாகவும், கொழும்பில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளின் உதவியை நாடியதாகவும் இந்தநிலையில் படகில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு வியட்நாம் நோக்கி அழைத்துச் செல்லப்படுவதாக சிங்கப்பூர் அதிகாரிகள் இலங்கைக்கு அறிவித்துள்ளதாகவும் இலங்கை கடற்படை அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இந்த இரண்டு நிகழ்வுகள் மட்டுமல்ல, இதுபோன்று இன்னும் எத்தனையோ நிகழ்வுகள் நடந்து வருகின்றன.
நாம் தியானிக்கும் இத்திருப்பாடலின் தலைப்பே ‘பாதுகாப்புக்காக வேண்டல்’ என்றுதான் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று நாம் தியானிக்கும் இறைவார்த்தைகளில் இரண்டு விதமான சிந்தனைகளை நாம் உள்வாங்கிக்கொள்வோம். முதலாவதாக, “என் தலைவா! கிளர்ந்தெழும், ஏன் உறங்குகின்றீர்? விழித்தெழும்; எங்களை ஒருபோதும் ஒதுக்கித் தள்ளிவிடாதேயும். நீர் உமது முகத்தை ஏன் மறைத்துக் கொள்கின்றீர்? எங்கள் சிறுமையையும் துன்பத்தையும் ஏன் மறந்து விடுகின்றீர்?” என்று தாவீது உரைக்கின்றார். அதாவது, அனைவராலும் கைவிடப்பட்டு துயரத்தில் இருக்கும் மனிதர், தாங்கள் நம்பியிருக்கும் கடவுளிடம் தங்களின் கையறுநிலையினை எடுத்துக்காட்டுவதாகத் தாவீதின் இந்த வரிகள் அமைந்துள்ளன. மேலும் 'கிளர்ந்தெழும்' என்று வார்த்தை அவர்கள் எவ்வளவு பெரிய அநீதியான சூழல் அல்லது அநியாயக்காரர்களிடம் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதை நமக்கு உணர்த்துகிறது, அநீதிக்கு எதிராகக் கிளர்ந்தெழும், அநியாயச் செயல்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழும், அக்கிரமக்காரர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழும், மனித உரிமைகளை அழித்தொழிக்கும் தீமையின் சக்திக்கு எதிராகக் கிளர்ந்தெழும், பெண்களை ஒடுக்கும் ஆணாதிக்கத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழும், சாதி, மத, இன, வேறுபாடுகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழும் என்றெல்லாம் இன்றையச் சூழலில் இந்தக் ‘கிளர்ந்தெழு’ என்ற வார்த்தை அதிகம் பயன்பாட்டில் இருப்பதைப் பார்க்கின்றோம்.
மேலும், “உறங்க வேண்டாம் விழித்தெழும்” என்று கடவுளிடம் முறையிடுகிறார் தாவீது, விழித்தெழு, விழிப்பாயிரு என்ற வார்த்தைகளும் நம் மத்தியில் அதிகப் பயன்பாட்டில் உள்ளன என்பதையும் நாம் அறிவோம். நம்மைச் சுற்றி என்ன நிகழ்கிறது, நாம் எப்படி ஏமாற்றப்படுகிறோம், வஞ்சிக்கப்படுகிறோம், சுரண்டப்படுகிறோம், முறைகேடாகப் பயன்படுத்தப்படுகிறோம், அடக்கியாளப்படுகிறோம், அடிமைப்படுத்தப்படுகிறோம், அல்லல்களுக்கு ஆளாக்கப்படுகிறோம், உதாசீனப்படுத்தப்படுகிறோம் என்பதையெல்லாம் குறித்து நாம் மிகவும் விழிப்பாக இருக்கவேண்டும் என்றெல்லாம் இன்றையக் காலச் சூழல்களில் நாம் அடிக்கடி அறிவுறுத்தப்படுகிறோம். ஆகவே, ‘நாங்கள் படும் கொடுந்துயர்கள் குறித்தும் சொல்லொண்ணா வேதனைகள் குறித்தும் கடவுளாகிய நீர் விழிப்பாயிரும்’ என்று கடவுளுக்கே அறிவுறுத்துகின்றார் தாவீது. இதனால் கடவுளுக்கே அவர் அறிவுரைக் கூறுகின்றார் என்று நாம் தவறாகப் பொருள்கொள்ளக் கூடாது, மாறாக, உரிமையுடன் தங்கள் மட்டில் அக்கறைகொள்ளுமாறு கடவுளிடம் வேண்டுதல் எழுப்புகின்றார் தாவீது என்றே நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
அடுத்ததாக, “ஏன் உன் முகத்தை மறைத்துக்கொள்கின்றீர்” என்று கடவுளை நோக்கிக் கேள்வி எழுப்புகின்றார் தாவீது. இன்றைய நம் சமூகத்தில் ஏழைகள், எளியோர், துன்புறுவோர், துயரத்தில் மூழ்கியுள்ளோர், கைவிடப்பட்டோர், நிர்கதியற்றோர், இடப்பெயர்ந்தோர், புலம்பெயர்ந்தோர் ஆகியோர் தங்களை ஆளும் தலைவர்களைப் பார்த்து குரலெழுப்பிக் கூறுவதெல்லாம், ‘எங்களின் இந்தத் துயரமான தருணங்களில் தயவுகூர்ந்து எங்களிடமிருந்து உங்கள் முகத்தைத் திருப்பிக்கொள்ளாதீர்கள் அல்லது மறைத்துக்கொள்ளாதீர்கள்’ என்பதுதான். குறிப்பாக, இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறை சம்பவங்களால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ள வேளை, குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் நல்லுள்ளம் படைத்தோரைப் பார்த்து அவர்கள் குரல் எழுப்பிக் கூறுவதெல்லாம், “உங்களைக் கெஞ்சிக் கேட்கின்றோம், தயவுகூர்ந்து உங்கள் முகத்தை எங்களிடமிருந்து மறைத்துக்கொள்ளாதீர்கள், எங்கள் அழுகுரலுக்குச் செவிகொடுங்கள்” என்பதுதான். இரண்டு கிறிஸ்தவப் பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டுக் கூட்டாக வன்புணர்வு செய்யப்பட்ட நிலையில், ‘காந்தி பிறந்த நாட்டில்தான் நாம் வாழ்கின்றோமா, இதுவொரு மக்களாட்சி நாடா, இப்படியே போனால் நம் எதிர்காலம் என்னவாகும்’ என்ற கேள்விகளுடன் அம்மாநில மக்கள் பேரச்சத்தின் பிடியில் வாழ்கின்றனர். இந்தக் கேள்விகள் மணிப்பூர் மக்களிடமிருந்து மட்டுமல்ல, மாறாக, ஒட்டுமொத்த இந்திய மக்களிடமிருந்தும் எழுகின்றன என்பதை நாடுமுழுக்க நடைபெற்று வரும் பல்வேறு போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் வழியாக அறிய வருகின்றோம்.. ஆனால் அதேவேளை, இப்படிப்பட்ட அநீதியான, கொடூரமான, மனிதன்மையற்ற செயல்களுக்குக் கடவுள் எப்போதும் ஒரு முடிவு வைத்திருப்பார், அவருடைய பார்வையிலிருந்து எந்தயொரு அநீதியான மனிதரும் தப்பவே முடியாது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. இதனை மனதில் கொண்டுதான் நம் முன்னவர்கள், ‘அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ என்று கூறினர். மனிதர் நினைப்பதுபோன்று கடவுள் நினைப்பது இல்லை. காரணம், கடவுளின் எண்ணங்களும், திட்டங்களும், செயல்பாடுகளும் எப்போதுமே உயர்ந்தவை. மனிதரின் எண்ணங்களில் சுயநலமும், சூதும், வஞ்சகமும், குள்ளநரித்தனமும், மறுதலித்தலும், காட்டிக்கொடுத்தலும், கேடும், கொடிய திட்டமும், கொடுஞ்செயலும் குடிகொண்டிருக்கும். ஆனால், கடவுளின் எண்ணங்களில் அன்பும், பரிவிரக்கமும், நீதியும், நேர்மையும், சமத்துவமும், அமைதியும் எப்போதும் நிறைந்திருக்கும். அதனால்தான், என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல, என்கிறார் ஆண்டவர். மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன என்று உரைக்கும் இறைவன், மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன; அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை (காண்க எசா 55:8-11) என்று அதற்கொரு அருமையான எடுத்துக்காட்டையும் கூறுகின்றார்.
இரண்டாவதாக, "நாங்கள் தரைமட்டும் தாழ்ந்துவிட்டோம்; எங்கள் உடல் மண்ணோடு ஒட்டிக்கொண்டுள்ளது. எழுந்து வாரும்; எங்களுக்குத் துணை புரியும்; உமது பேரன்பை முன்னிட்டு எங்களை மீட்டருளும்” என்று கூறி இத்திருப்பாடலை நிறைவு செய்கின்றார் தாவீது அரசர். அதாவது, தன்னுடைய ஆதங்கங்களையும், அழுகுரல்களையும், புலம்பல்களையும் அவர் கடவுளிடம் கொட்டித்தீர்த்த போதிலும், இறுதியில், ‘உம்மால் எல்லாம் கூடும், நீர் மட்டுமே எங்களை மீட்க முடியும், எங்கள் எதிரிகளை வீழ்த்த முடியும், எங்களுக்கு நிலைவாழ்வை அருளமுடியும்’ என்று கூறித் தனது தளராத நம்பிக்கை என்னும் நங்கூரத்தை, கடவுளின் இதயத்தில் ஆழப் பாய்ச்சியவராக அவரிடம் முழுதுமாக சரணடைகின்றார். ஆகவே, துன்பங்களால் துவண்டுபோனாலும் தூயவரிடம் கொண்டிருந்த அன்பும் நம்பிக்கையும் சிதையாமல் பார்த்துக்கொண்ட தாவீதின் வழியை நாமும் பின்பற்றுவோம். இவ்வருளுக்காக இறைவனிடம் இந்நாளில் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்