தேடுதல்

பாதிக்கப்பட்ட பாலஸ்தீனம் பகுதி பாதிக்கப்பட்ட பாலஸ்தீனம் பகுதி  (AFP or licensors)

புனித பூமியில் அமைதி நிலவ அயர்லாந்து பேராயர்கள் கோரிக்கை

Armagh உயர்மறைமாவட்ட பேராயர் Eamon Martin, Dublin உயர்மறைமாவட்ட பேராயர் Dermot Farrell, Cashel & Emly உயர்மறைமாவட்ட பேராயர் Kieran O’Reilly SMA, Tuam உயர்மறைமாவட்ட பேராயர் Francis Duffy ஆகியோர் இச்செய்தியினை வெளியிட்டுள்ளனர்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

புனித பூமியில் வன்முறை நிறுத்தப்பட வேண்டும், பொதுமக்களின் மாண்பு மற்றும் மரியாதைக் காக்கப்பட வேண்டும் என்றும், பணயக்கைதிகளை விடுவித்து அவர்களது எதிர்காலத்தைக் காக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர் அயர்லாந்து பேராயர்கள்.

புனித பூமியில் நடைபெறும் மோதல் மற்றும் வன்முறை குறித்து அக்டோபர் 11 புதன்கிழமை இவ்வாறு கருத்து தெரிவித்து செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளனர் Armagh, Dublin, Cashel மற்றும் Emly, Tuam எனும் நான்கு அயர்லாந்து உயர்மறைமாவட்டங்களின் கத்தோலிக்கப் பேராயர்கள்.  

இறைவன் பிறந்த மண்ணில் நடக்கும் நிகழ்வுகள் அதிர்ச்சியையும், திகைப்பையும் ஏற்படுத்தியுள்ளதாகவும்,  மோதல் மற்றும் போரினால் தற்போதைய நிலைமை அனைத்து தரப்பிலும் உள்ள பல மக்களுக்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளனர் பேராயர்கள்.

ஏராளமான மக்கள் காயமடைவதுடன், ஒரு நிலையான அமைதிக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி வரும் இத்தகைய சூழல், எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்றும்,  அழிவையும் மரணத்தையும் விளைவிக்கும் இந்த வன்முறை மற்றும் மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

மேலும் ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் மூவேளை செப உரையின்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்திய “தாக்குதல்கள் மற்றும் ஆயுதங்கள் நிறுத்தப்படட்டும். பயங்கரவாதமும், போரும் எந்தத் தீர்மானங்களுக்கும் வழிவகுக்காது மாறாக, பல அப்பாவி மக்களின் மரணத்துக்கும் துன்பத்துக்கும் வழிவகுக்கின்றன என்பதை புரிந்து கொள்ளட்டும்“ என்ற கருத்துக்களையும் வலியுறுத்தியுள்ளனர்.

"புனித பூமியை 5 வது நற்செய்தியாக நேசிக்கும் நாங்கள், வன்முறையை நிறுத்துவதற்கும், பொதுமக்கள் மதிக்கப்படுவதையும், பணயக்கைதிகள் அனைவரும் பாதிப்பின்றி விடுவிக்கப்படுவதையும் உறுதிசெய்யும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைத்து மக்களையும் கேட்டுக்கொள்கிறோம் என்றும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

“திருத்தந்தை பிரான்சிஸ், எருசலேமின் முதுபெரும்தந்தை கர்தினால் பிஸ்ஸாபால்லா ஆகியோருடன் இணைந்து அமைதிக்கான செபத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள பேராயர்கள், வன்முறையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் மக்களுக்காக சிறப்பாக செபிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Armagh உயர்மறைமாவட்ட பேராயர் Eamon Martin, Dublin உயர்மறைமாவட்ட பேராயர் Dermot Farrell, Cashel & Emly உயர்மறைமாவட்ட பேராயர் Kieran O’Reilly SMA, Tuam உயர்மறைமாவட்ட பேராயர் Francis Duffy ஆகியோர் இச்செய்தியினை வெளியிட்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 October 2023, 10:59