வாரம் ஓர் அலசல் – இறந்தோரை நினைவுகூர்வோம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
மரணம் நிகழாத நாளில்லை, மரணம் நிகழாத வீடில்லை என்றே சொல்ல வேண்டும். இயற்கையாக ஏற்படும் மரணம் முதல், விபத்து மற்றும் தற்கொலை வரை ஏற்படும் மரணச் செய்திகள், பத்திரிகைகளில் நாளும் வந்துகொண்டேயிருக்கின்றன. மண்ணில் பிறக்கும் ஒவ்வோர் உயிரும் இறப்பைச் சந்தித்தே ஆகவேண்டும். அனைத்து உயிர்களும், அதிலும் குறிப்பாக ஒவ்வொரு மனிதரும் சந்தித்தே ஆகவேண்டிய இது வாழ்வின் எதார்த்தம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழி பற்றி நமக்குத் தெரியும். ஏறக்குறைய 3500 ஆண்டுகளுக்கு முன்பே தாழியினுள் இறந்த உறவினர்களின் உடலைப் பாதுகாப்பாக வைத்துள்ளதைக் காண்கிறோம்.
இதுபோன்று எகிப்து மக்கள் ஏறக்குறைய 4500 ஆண்டுகளுக்கு முன்னரே வலிமையான பிரமிடை அமைத்துப் பதப்படுத்தப்பட்ட இறந்த உடலைப் பாதுகாத்து வைத்துள்ளனர். இத்தோடு விட்டார்கள் என்றால் அதுதான் இல்லை. நம் ஊர் தாழிகளிலும் சரி, பிரமிடுகளிலும் சரி, இறந்தவர்கள் உடலுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் சேர்த்துவைத்துள்ளனர்.
பண்டையகால மக்கள் ஏன் இப்படி இறந்தவர்கள் உடலையும், அந்த உடலுடன், அவர்கள் பயன்படுத்தியப் பொருட்களையும் சேர்த்து பாதுகாக்க வேண்டும்? ஏனெனில், அவர்கள் மறுபிறவியில் நம்பிக்கை உடையவர்களாக இருந்துள்ளனர் என்பதைத் தவிர வேறில்லை.
இறந்தவர்கள் மறுபடியும் பிறப்பார்கள், அல்லது இறப்பிற்குப் பின்னும் வாழ்வார்கள், அவர்களின் ஆன்மா அவர்கள் உடலுடன் பாதுகாக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தும் என்பதுதான் பண்டைய மக்களின் எண்ணமாக இருந்திருக்க வேண்டும்.
இதை நாம் இயேசுவின் வார்த்தைகளில் பார்த்தோமானால், “அவர் என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் நான் அழிய விடாமல் இறுதி நாளில் அனைவரையும் உயிர்த்தெழச் செய்ய வேண்டும். இதுவே என்னை அனுப்பியவரின் திருவுளம். மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன்” (யோவா 6:39,40) என்று கூறுவதைக் காண்கிறோம்.
கிறிஸ்தவனின் சாவு, அழிவாகப் பார்க்கப்படுவதில்லை; அது வாழ்வுக்குச் செல்லும் வழியாகவே பார்க்கப்படுகிறது. வாழ்வின் முடிவு மரணமாக இருந்தாலும், அதுதான் நிலையான வாழ்வின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. இயேசுவிடம் நம்பிக்கைக் கொள்பவர்கள் என்றென்றும் வாழ்வார்கள்.
இதைத்தான் நாம் நவம்பர் மாதம் 2ஆம் தேதி அனைத்து ஆன்மாக்களின் நினைவு நாளாக, அதாவது மரித்தோர் தினமாக சிறப்பிக்கின்றோம். சிலர் இதைக் கல்லறைத் திருநாள் என்றும் அழைக்கின்றனர். இந்த நாளில், இறந்த நம் முன்னோர்களை சிறப்பான விதத்தில் நினைவுகூர்கின்றோம். இறந்த நம் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, உடன்பிறப்புக்கள், நண்பர்கள் ஆகியோரோடு நாம் இணைந்திருக்கின்றோம். நமக்கும் அவர்களுக்கும் உள்ள இணைப்பைக் கொண்டாடுகிறோம். நாம் எல்லாரும் பிறக்கிறோமே தவிர, இறப்பதில்லை. ஏனெனில், எங்கோ, எப்படியோ வாழ்கிறோம். வாழ்வை வாழ்ந்து முடித்த அவர்கள், வாழும் நமக்கு வழிகாட்டிகள். ஆகவே, நவம்பர் 2 ஆம் தேதி நாம் கல்லறைகளில் ஏற்றும் மெழுகுதிரி, இறந்தோரின் இருப்பை நாம் கண்டுகொள்ளும் ஒளிக்கீற்றாக இருக்கின்றது.
கல்லறைத் தோட்டங்களில் உயர்ந்தவன் – தாழ்ந்தவன், ஏழை – பணக்காரன், ஆண் – பெண் போன்ற எந்தவிதமான வேறுபாடுகளும் கிடையாது. `மனிதனின் பிறப்பிலும் சமத்துவம், இறப்பிலும் சமத்துவம். ஏனெனில், இவை இரண்டும் கடவுளின் கையில்! அனைத்து வேறுபாடுகளும் இவை இரண்டுக்கும் இடையில் இருப்பதைத்தான் நாம் காண்கிறோம். சமத்துவத்தில் பிறந்து, சமத்துவத்தில் இறக்கும் நாம், ஏன் வேறுபாடுகளை ஏற்படுத்துகிறோம்?. இந்த கேள்வியை நாம் ஒவ்வொருவரும் நம்மைப் பார்த்துக் கேட்க வேண்டும். முரண்பாடுகளைக் களைந்து வேறுபாடுகளைக் கொண்டாட அழைக்கும் இடம் எது தெரியுமா, அதுதான் கல்லறைத் தோட்டம். வாழப் பொருள் தேவை. அதே வேளையில் வாழ்வதற்கும் ஒரு பொருள் தேவையில்லையா என மனிதனை நோக்கி கேள்வி எழுப்பி, சிந்திக்கத் தூண்டுகின்றன கல்லறைத் தோட்டங்கள். நவம்பர் மாதத்தில் நாம் இறந்தோரைக் குறித்து, குறிப்பாக இரண்டாம் தேதி அதிகம் அதிகமாக சிந்திக்கிறோம், செபிக்கின்றோம்.
கத்தோலிக்கத் திருஅவை உள்பட சில கிறிஸ்தவ சபைகளால் ஆண்டுதோறும் நவம்பர் 2ஆம் தேதி கொண்டாடப்படும் இந்தத் திருவிழா, `நமது வாழ்வு முடிவற்ற ஒரு திருப்பயணம்' என்பதை இந்த உலகத்துக்கு எடுத்துக்காட்டும் விதமாக அமைந்துள்ளது. அதாவது, இறைவன் நமக்கு வழங்கியுள்ள வாழ்வு என்னும் அருட்கொடை, மயானத்துடன் முடிந்துவிடும் ஒரு மாயை அல்ல, என்பதை நினைவுபடுத்தி நிற்கின்றது.
கல்லறைத் திருநாளன்று இறந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளைச் சென்று தரிசித்து, அலங்காரம் செய்து, இறந்துபோன சொந்தங்களை நினைத்து அவர்களுக்காகக் கண்ணீர்விட்டு ஜெபம் செய்வதுண்டு. அதாவது, `நீங்கள் இறந்துவிட்டாலும், உடலளவில் நீங்கள் எங்களோடு இல்லாவிட்டாலும், நாங்கள் உங்களை ஒருபோதும் மறப்பதில்லை. உங்களை, உங்கள் செயல்களை நினைத்துப் பார்க்கிறோம். இறப்பு, ஒருபோதும் நம்மைப் பிரித்துவிட முடியாது. நமது உறவு என்றென்றும் தொடரும்' என்கிற செய்தியையே இந்தக் கல்லறைத் திருநாள் வெளிப்படுத்துகிறது. "வாழ்வு மாறுபடுகிறதே அன்றி, அழிந்து போவதில்லை" என்பதை சொல்லித் தரும் இடம் கல்லறைத் தோட்டம். நம்முடைய மண்ணுலக வாழ்க்கை சாவோடு முடிந்துபோகின்ற ஒன்று அல்ல, மாறாக, நாம் இறந்தபின்னும் உயிர்வாழ்வோம் என்பதே அது தரும் செய்தி. மேலும், இவ்விழா உணர்த்தும் செய்தி, நாமும் ஒருநாள் உயிர்த்தெழுவோம் என்ற நம்பிக்கையைத் தருவதாக இருக்கின்றது. இரண்டாவதாக, இவ்விழா இறந்த ஆன்மாக்களுக்காக, குறிப்பாக உத்தரிக்க தலத்தில் உள்ள ஆன்மாக்களுக்காக ஜெபிக்க அழைப்புத் தருகின்றது. அவர்களுக்கான நம்முடைய ஜெபம், அவர்களுடைய தண்டனையைக் குறைத்து அவர்கள் விண்ணக வாழ்வில் இணைந்துகொள்ள உதவும்.
நம் வாழ்வுக்கு அர்த்தம் கொடுப்பது இறப்பு. இறுதி நாளில் இறப்பை எப்படி சந்திக்கிறோமோ அப்படி வாழ்ந்துள்ளோம் என்று பொருள். எவ்வாறு இறக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அவ்வாறு வாழ வேண்டும். அமைதியாக, நிம்மதியாக, வேதனையின்றி, தனிமையின்றி சாக வேண்டுமென்றால், வாழும்போதும் அவ்வாறே வாழ வேண்டும். வாழ்க்கை எப்படியோ அப்படியே மரணமும்.
இறந்துபோன நம் உறவினர்களுக்காக, உத்தரிக்கிற ஸ்தல ஆன்மாக்களுக்காக செபம், தவம், தர்மம் என்ற மூன்று வழிகளால் உதவி செய்கிறோம். இறந்த நம் உறவினர் குறித்த நினைவுகள் அவர் இறந்தவுடன் முடிந்துவிடுவது கிடையாது, மாறாக தொடர்கின்றன என்பதன் அடையாளமே, இந்த அனைத்து ஆன்மாக்கள் தினம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்