தடம் தந்த தகைமை - இஸ்ரயேல் அரசனான பாசா
மெரினா ராஜ் - வத்திக்கான்
யூதாவின் அரசன் ஆசா ஆட்சியேற்ற மூன்றாம்ஆண்டில் அகியாவின் மகன் பாசா இஸ்ரயேல் முழுவதின்மீதும் தீர்சாவில் இருந்து கொண்டு இருபத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவனும் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான். எரொபவாமின் வழியிலேயே நடந்து, அவனைப் போல் இஸ்ரயேலர் பாவம் செய்யக் காரணமாயிருந்தான். பாசாவுக்கு எதிராக அனானியின் மகனான ஏகூவுக்கு ஆண்டவரின் வாக்கு உரைக்கப்பட்டது: “தூசிக்கு நிகரான உன்னை நான் உயர்த்தி என் மக்களாகிய இஸ்ரயேலுக்குத் தலைவனாக ஏற்படுத்தினேன். நீயோ எரொபவாமின் வழிநடந்து என் மக்களாகிய இஸ்ரயேலர் பாவம் செய்யக் காரணமாய் இருந்து, அவர்களுடைய பாவங்களால் எனக்குச் சினமூட்டினாய். எனவே, இதோ! நான் பாசாவையும் அவன் வீட்டையும் முற்றிலும் அழிக்கப்போகிறேன். நெபாற்றின் மகனான எரொபவாமின் வீட்டுக்குச் செய்ததைப் போல, உன் வீட்டுக்கும் செய்வேன். பாசாவைச் சார்ந்தவருள் நகரில் மடிபவர் நாய்களுக்கு இரையாவர்; வயல்வெளியில் இறப்பவர் வானத்துப் பறவைகளுக்கு இரையாவர்.”
பாசா தன் மூதாதையரோடு துயில் கொண்டபின் திர்சாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பின் அவன் மகன் ஏலா அரசன் ஆனான். ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைப் பாசா செய்ததாலும், எரொபவாமின் வீட்டை அடியோடு அழித்ததாலும் அவன் அவருக்குச் சினமூட்டினான். ஆகையால், அவர்களுக்கு நேர்ந்தது போலவே பாசாவுக்கும் அவன் குடும்பத்துக்கும் நேரும் என்று அனானியின் மகன் ஏகூ என்ற இறைவாக்கினர் மூலம் ஆண்டவரின் வாக்கு உரைக்கபட்டது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்