தடம் தந்த தகைமை - மாமன்னர் அலக்சாண்டரின் ஆட்சி முடிவு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
மாசிடோனியராகிய பிலிப்புமகன் அலக்சாண்டர் முதலில் கிரேக்க நாட்டை ஆண்டுவந்தார்; பின்னர் கித்திம் நாட்டினின்று புறப்பட்டுப் பாரசீகருடையவும் மேதியருடையவும் மன்னரான தாரியுவை வென்று அவருக்குப் பதிலாக ஆட்சிபுரிந்தார். அவர் போர்கள் பல புரிந்து, கோட்டைகள் பல பிடித்து, மண்ணுலகின் மன்னர்களைக் கொலைசெய்தார். மண்ணுலகின் கடையெல்லைவரை முன்னேறிச் சென்று பல நாடுகளைக் கொள்ளையடித்தார்; மண்ணுலகு முழுவதும் அவரது ஆட்சியில் அமைதியாக இருந்தபோது அவர் தம்மையே உயர்வாகக் கருதினார்; அவரது உள்ளம் செருக்குற்றது. ஆகவே அவர் வலிமைமிக்க படையைத் திரட்டிப் பல மாநிலங்கள், நாடுகள், மன்னர்கள்மீது ஆட்சிசெலுத்திவந்தார். அவர்களும் அவருக்குத் திறை செலுத்தி வந்தார்கள்.
அதன்பிறகு அவர் கடின நோயுற்றுத் தாம் சாகவிருப்பதை உணர்ந்தார். ஆதலால் இளமைமுதல் தம்முடன் வளர்க்கப்பெற்றவர்களும் மதிப்புக்குரியவர்களுமான அலுவலர்களை அழைத்து, தாம் உயிரோடு இருந்தபோதே தம் பேரரசை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். அலக்சாண்டர் பன்னிரண்டு ஆண்டுகள் ஆட்சிசெய்த பின் இறந்தார்.
அலக்சாண்டருடைய அலுவலர்கள் தங்களுக்குரிய இடங்களில் ஆட்சி செலுத்தத் தொடங்கினார்கள். அவர் இறந்தபின் அவர்கள் எல்லாரும் முடி சூடிக்கொண்டார்கள். அவர்களுக்குப்பின் அவர்களின் மைந்தர்களும் பல ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள். அவர்களால் மண்ணுலகெங்கும் தீமைகள் பெருகின.
அவர்கள் நடுவிலிருந்து பொல்லாத வழிமரபினன் ஒருவன் தோன்றினான்; அவன் மன்னர் அந்தியோக்கின் மகன் அந்தியோக்கு எப்பிபான் ஆவான்; முன்பு உரோமையில் பிணைக் கைதியாக இருந்த அவன் கிரேக்கப் பேரரசின் நூற்று முப்பத்தேழாம் ஆண்டு ஆட்சி செய்யத் தொடங்கினான்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்