நேர்காணல் - உலக ஆயர்கள் மாமன்றத்தில் பெண்களின் பங்கேற்பு
மெரினா ராஜ் – வத்திக்கான்
“மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா ” என்று பெண்ணின் பிறப்பைப் பெரும் பேறாய் கருதி கவிபாடினார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. இந்த உலகில் மனிதனைப் படைக்கும் சக்தி பெற்றவராகவும், கண்ணில் காணும் தெய்வமாகவும், வாழும் கடவுளாகவும் பெண்கள் இருக்கின்றார்கள். தனது இரத்தத்தைப் பாலாகக் பச்சிளம் குழந்தைக்குக் கொடுக்கும் தாய் பாலோடு சேர்த்து, தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, விடாமுயற்சி, என எல்லாவற்றையும் தன் குழந்தைக்கு அளிக்கின்றார். நாம் வாழ்கின்ற சமுதாயம் முன்னேற பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானது. சங்க இலக்கியத்தில் பெண்கள் மிகச்சிறப்புற்று விளங்கினர். ஒளவையார், காக்கை பாடினியார் போன்ற பெண்பாற் புலவர்கள் மிகுந்த பேறும் புகழும் பெற்று வாழ்ந்தனர் என்பதற்கு வரலாறுமுண்டு.
இறைவனால் படைக்கப்பட்ட நாம் அனைவரும் சமமே. ஆண்கள் உயர்ந்தவர்கள் என்றும் பெண்கள் தாழ்ந்தவர்கள் என்று கூறுவது மடமையின் உச்சம். பெண்ணை மதிக்கத் தெரிந்தவன் நல்ல தாயினால் வளர்க்கப்பட்டவன் என்ற கூற்றும் நம்மிடம் உண்டு. சாதாரண குடும்பம் நல்ல படியாக செழித்தோங்க அவ்வில்லத்தின் ஆணும் பெண்ணும் சிறந்தவர்களாக ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பவர்களாக இருக்கவேண்டும். குடும்பத்திற்கே இப்படி என்றால் ஒரு சமூகமும், உலகமும் சிறந்து விளங்க பெண்களும் ஆண்களும் சரிசமமாக மதிக்கப்பட வேண்டும். அவ்வகையில் திருஅவையிலும் சிறந்த பல செயல்பாடுகள் நடைபெற இவ்வாண்டு அக்டோபர் மாதம் வத்திக்கானில் நடைபெற்ற 16ஆவது உலக ஆயர்கள் மாமன்றத்தில் ஆயர்கள் மட்டுமல்லாது அருள்சகோதரிகளும், பொதுநிலையினரும் கலந்து கொண்டனர். திருஅவையில் பெண்களுக்கு தலைமைத்துவப் பங்கு அதிகமாக வழங்கப்படுவதற்காக இறைவனை மன்றாடுமாறு 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாத செபக்கருத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உலக மக்களுக்கு அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.
திருஅவையின் திருத்தூதுப் பணியில், பொதுநிலையினரே முக்கியமானவர்கள். திருஅவையின் பொறுப்பான பகுதிகளில் பெண்கள் ஓரங்கட்டப்படுகின்றனர் என்ற காரணத்தால், அவர்களுக்கு தலைமைத்துவப் பங்கு அதிகம் வழங்கப்படவேண்டும் என்றும் திருத்தந்தை வலியுறுத்தியுள்ளார். திருமுழுக்கு அருளடையாளத்தைப் பெறுகையில், அருள்பணியாளராகவோ, ஆயராகவோ அவர் அதனைப் பெறவில்லை. மாறாக நாம் அனைவரும் பொதுநிலையினராகவே திருமுழுக்கு என்னும் அருளடையாளத்தைப் பெற்றுள்ளோம். பொதுநிலையினர், திருஅவையின் முக்கிய கதாநாயகர்கள். இன்று, திருஅவையில் பெண்களின் பங்கு அதிகரிக்கப்பட, பரந்துபட்ட அளவில் வாய்ப்புக்கள் உருவாக்கப்படவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. பொதுநிலைப் பெண்களின் பங்கு வலியுறுத்தப்படவேண்டும். திருஅவையில், குறிப்பாக, தீர்மானம் எடுக்கும் நடவடிக்கைகளில் பெண்கள் இணைக்கப்படவேண்டும் என்பதே திருத்தந்தையின் அக்டோபர் மாத செபக்கருத்து வலியுறுத்தியதாகும்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தலைமைப்பணியை ஏற்றதிலிருந்து, திருஅவையில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் என்பதை, பல்வேறு தருணங்களில் வலியுறுத்தி வருகிறார். எடுத்துக்காட்டாக, 2013ம் ஆண்டு கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று திருத்தந்தை வெளியிட்ட, நற்செய்தின் மகிழ்வு என்ற திருத்தூது அறிவுரை மடலில், ஆண்களும், பெண்களும் சம மாண்புகொண்டவர்கள் என்ற உறுதியான நம்பிக்கையின் அடிப்படையில், பெண்களின் நியாயமான உரிமைகள் மதிக்கப்படவேண்டும், இந்தச் சவாலை நாம் சாதாரணமாக ஒதுக்கிவிடமுடியாது (104) என்று கூறியுள்ளார்.
பெண்களின் சிறப்பும் முக்கியத்துவமும் நாம் வாழ்கின்ற சமூகத்தில் அங்கீகரிக்கப்பட வலியுறுத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 16ஆவது உலக ஆயர்கள் மாமன்றத்திலும் பெண்களின் பங்கேற்பை அதிகப்படுத்தியுள்ளார். அவ்வகையில் நமது தமிழக்த்தில் இருந்து பெண் துறவற பங்கேற்பாளராக உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்கேற்ற அருள்சகோதரி லலிதா தாமஸ் அவர்கள் தனது ஒருங்கிணைந்த பயணப்பேரவை பற்றிய அனுபவங்களை இன்று நம்முடன் பகிர்ந்து கொள்ள இருக்கின்றார். சகோதரி அவர்களை எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்