தேடுதல்

வங்காளதேச கிறித்தவர்கள் வங்காளதேச கிறித்தவர்கள்   (AFP or licensors)

வங்காளதேசத்தில் அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

அண்மைய நாட்களில், வங்காளதேசத்திலுள்ள கத்தோலிக்க சகோதரத்துவ அமைப்பின் பொதுநிலையினர் உறுப்பினர்கள் சேரிகளுக்குச் சென்று, மிகவும் தேவையிலிருக்கும் 200 குடும்பங்களுக்குத் தாராளமாக உதவிப் பொருள்களை வழங்கியுள்ளனர்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

வங்காளதேசத்தின் தலைநகரான Dhaka-வின் இதயமாக விளங்கும் Tejgaon என்னும் கத்தோலிக்கப் பங்குத்தளம் தேவையில் இருப்போருக்கு ஒன்றிப்பையும் உதவியையும் வழங்குவதன் வழியாக, திருவருகைக் காலத்தின் உண்மையான உணர்வை வெளிப்படுத்துகிறது என்று கூறியுள்ளது Fides செய்தி நிறுவனம்.

திருவருகைக் காலம் மற்றும் கிறிஸ்து பிறப்பு விழாவை அர்த்தமுள்ள வகையில் கொண்டாட, Tejgaon-இல் உள்ள புனித வின்சென்ட் தே பவுல் சபையின் (SVP) புனித செபமாலை அன்னை சகோதரத்துவ அமைப்பு இந்தத் தேவையிலிருக்கும் குடும்பங்களுக்கு உதவி மற்றும் ஆதரவை வழங்க உறுதிபூண்டுள்ளதன் வழியாக அன்பு மற்றும் இரக்கத்தை வெளிப்படுத்தும் உண்மையான கிறிஸ்து பிறப்பு விழாவினைக் கொண்டாட முன்வந்துள்ளதாக அச்செய்தி நிறுவனம் மேலும் தெரிவிக்கிறது.

அண்மைய நாட்களில், வங்காளதேசத்திலுள்ள கத்தோலிக்க சகோதரத்துவ அமைப்பின் பொதுநிலையினர் உறுப்பினர்கள் சேரிகளுக்குச் சென்று, மிகவும் தேவையிலிருக்கும் 200 குடும்பங்களுக்குத் தாராளமாக உதவிப் பொருள்களை வழங்கியுள்ளனர் என்றும், இந்த உதவிப் பொருள்களில் பணம், உணவு, உடைகள் ஆகியவை அடங்கும் என்றும் அச்செய்தி நிறுவனம் மேலும் தெரிவிக்கிறது.

இதுகுறித்து இவ்வமைப்பின் தலைவர் Bruno Dias அவர்கள், புனித வின்சென்ட் தே பவுல் சபையின் அண்மைய செயல்பாடுகளை விவரித்துள்ள வேளை, இப்பங்குதள சமூகத்தில் விளங்கும் ஒன்றிப்பையும், அண்மைய வாரங்களில் SVP-இன் உறுப்பினர்கள் தங்கள் அண்டை நாடுகளிடையே நிதி திரட்டி வருகின்றனர் என்று தகவலையும் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

மேலும் நன்கொடையாளர்களின் தாராள மனப்பான்மைக்கு நன்றி தெரிவித்துள்ள Bruno Dias அவர்கள், பெரும்பாலும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்கள் மற்றும் வேலையில்லாதவர்களுக்கும் மிகவும் தேவையில் இருப்போருக்கும் இந்த நன்கொடையைக்கொண்டு தங்களால் உதவ முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதேவளை இவர்களின் அற்புதமான பணிகள் குறித்து மகிழ்வடைந்துள்ள இப்பங்குதளத்தின் பங்குத்தந்தை அருள்பணியாளர் Subrato Boniface Gomes அவர்கள், இச்சபையைச் சார்ந்த உறுப்பினர்கள் அனைவரும் மிகவும் தேவையில் இருக்கும் மக்களுக்கு உதவி வருகின்றனர் என்றும், எங்கள் பகுதியில் இவர்களின் உடனிருப்புக்கு நன்றி கூறுவதுடன் இவர்களுக்கு எங்களின் முழு ஆதரவையும் வழங்குகின்றோம் என்றும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 December 2023, 16:12