தேடுதல்

சவுல் அம்மோனியரைத் தோற்கடித்தல் சவுல் அம்மோனியரைத் தோற்கடித்தல் 

தடம் தந்த தகைமை : சவுல் அம்மோனியரைத் தோற்கடித்தல்!

கில்காலுக்குச் சென்ற மக்கள் அனைவரும் அங்கே ஆண்டவர் திருமுன் சவுலை அரசராக்கி, நல்லுறவுப் பலிகளைச் செலுத்தி பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சவுல் தன்னிடம் ஒன்றுதிரண்டு வந்த மக்களைப் பெசேக்கில் கணக்கெடுத்தபோது இஸ்ரயேலின் மக்கள் மூன்று இலட்சம் பேரும் யூதாவினர் முப்பதாயிரம் பேரும் இருந்தனர். வந்திருந்த தூதர்களிடம், “நாளை வெயில் ஏறும்முன் உங்களுக்கு மீட்பு கிடைக்கும் என்று கிலயாதிலுள்ள யாபேசின் மக்களுக்குத் தெரிவியுங்கள்” என்று அறிவிக்கப்பட்டது. தூதரும் அவ்வாறே யாபேசின் மக்களிடம் சொல்ல, அவர்கள் மகிழ்ச்சியுற்றனர். ஆகவே, யாபோசின் ஆட்கள் “நாளை நாங்கள் உம்மிடம் சரணடைவோம். உம் விருப்பப்படியே எங்களுக்குச் செய்யும்” என்றனர்.

மறுநாள் சவுல் மக்களை மூன்று படைகளாகப் பிரித்தார். கீழ்வானம் வெளுத்தபோதே அவர்கள் பாளையத்தினுள் வந்து, வெயில் ஏறுவதற்குள் அம்மோனியரை வெட்டி வீழ்த்தினர். இருவர் கூட இணையாதபடி எஞ்சி இருந்தவர்கள் சிதறடிக்கப்பட்டார்கள்.

பிறகு, மக்கள் சாமுவேலை நோக்கி, “சவுலா எங்களை ஆள்வது? என்று கேட்டவர்களை கொண்டு வாருங்கள். அவர்களைக் கொன்று போடுவோம்” என்றனர். ஆனால், சவுல், “இன்று யாரையும் கொல்லக் கூடாது. ஏனெனில், ஆண்டவர் இஸ்ரயேலுக்கு மீட்பு அளித்துள்ளார்” என்றார். சாமுவேல் மக்களை நோக்கி, “வாருங்கள் கில்காலுக்குச் சென்று, அங்கே அரசாட்சியை உறுதிப்படுத்துவோம்” என்றார். மக்கள் அனைவரும் கில்காலுக்குச் சென்று, அங்கே ஆண்டவர் திருமுன் சவுலை அரசராக்கி, நல்லுறவுப் பலிகளைச் செலுத்தினார்கள். சவுலும் இஸ்ரயேலரும் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 December 2023, 14:21