தேடுதல்

யூதாவின் தலைமையில் போர் யூதாவின் தலைமையில் போர் 

தடம் தந்த தகைமை - ‘யூதாவின் முடிவு’

“புறமுதுகு காட்டி ஓடுவது என்பது நாம் செய்யக்கூடாத செயல். நம் உறவின் முறையினருக்காக ஆண்மையுடன் இறப்போம். நமது பெருமைக்கு இழுக்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம்” என்றார் யூதா.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

எலாசாவில் யூதா பாசறை அமைத்தார். தேர்ந்தெடுத்த வீரர்கள் மூவாயிரம் பேர் அவரோடு இருந்தனர். அவர்கள், எதிரிப்படைகளின் பெரும் கூட்டத்தைக் கண்டு பெரிதும் அஞ்சினார்கள்; பலர் பாசறையினின்று ஓடிவிட்டனர்; அவர்களுள் எண்ணூறு பேரே எஞ்சியிருந்தனர். தம் படை சிதறியோடியதையும் போர் உடனடியாக நடக்கவிருந்ததையும் யூதா கண்டு, அவர்களை ஒன்றுசேர்ப்பதற்கு நேரம் இல்லாததால் மனமுடைந்துபோனார். அவர் மனம் தளர்ந்திருந்தபோதிலும் தம்முடன் எஞ்சியிருந்தவர்களை நோக்கி, “எழுவோம்; நம் பகைவரை எதிர்த்துச் செல்வோம். ஒருவேளை நம்மால் அவர்களை எதிர்த்துப் போரிட முடியும்!” என்று முழங்கினார்.

ஆனால் அவர்கள், “நாம் மிகச் சிலராய் இருப்பதால் இப்போது போரிட முடியாது. முதலில் நம் உயிரைக் காப்பாற்றிக்கொள்வோம்; பின்னர் நம் சகோதரர்களுடன் திரும்பி வந்து அவர்களோடு போரிடுவோம்” என்று சொல்லி அவரது மனத்தை மாற்ற முயன்றார்கள்.

அதற்கு யூதா, “அவர்களுக்குப் புறமுதுகு காட்டி ஓடுவது என்பது நாம் செய்யக்கூடாத செயல். நமது காலம் வந்திருக்குமானால் நம் உறவின் முறையினருக்காக ஆண்மையுடன் இறப்போம். நமது பெருமைக்கு இழுக்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம்” என்றார்.

பாக்கீதின் படையினர் பாசறையை விட்டுப் புறப்பட்டுத் தாக்குதலுக்கு ஆயத்தமாக நின்றார்கள்; குதிரை வீரர்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்தார்கள்; கவணெறிவோரும் வில்லாளரும் படைக்குமுன் சென்றார்கள்; அவ்வாறே முன்னணி வீரர்கள் எல்லாரும் சென்றார்கள். பாக்கீது வலப்படைப் பிரிவில் இருந்தான். குதிரைப்படையின் இரு பிரிவுகளுக்கு நடுவே காலாட்படை முன்னேறிச் செல்ல எக்காளங்கள் முழங்கின. யூதாவின் பக்கம் இருந்தவர்களும் தங்களின் எக்காளங்களை முழங்கினார்கள். படைகளின் இரைச்சலால் நிலம் நடுங்கியது; காலைமுதல் மாலைவரை போர் நடந்தது.

பாக்கீதும் அவனது வலிமை மிகு படையும் வலப்பக்கத்தில் இருக்க யூதா கண்டார். மனவுறுதி கொண்ட அனைவரும் யூதாவோடு சேர்ந்து கொண்டார்கள். வலப்படைப்பிரிவை முறியடித்து அதை அசோத்து மலைவரை துரத்திச் சென்றார்கள். வலப்படைப் பிரிவு முறியடிக்கப்பட்டதைக் கண்ட இடப்படைப் பிரிவு, திரும்பி யூதாவையும் அவருடன் இருந்தவர்களையும் நெருங்கிப் பின்தொடர்ந்து சென்றது. போர் கடுமையாகவே, இரு தரப்பிலும் பலர் காயப்பட்டு மடிந்தனர். யூதாவும் மடிந்தார்; மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டார்கள்.

யோனத்தானும் சீமோனும் தங்கள் சகோதரரான யூதாவைத் தூக்கிக் கொண்டுபோய் மோதயின் நகரில் தங்கள் மூதாதையரின் கல்லறையில் அடக்கம் செய்தார்கள். அவருக்காக அழுதார்கள்; இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் அவருக்காகப் பெரிதும் துயரம் கொண்டாடினார்கள்; பல நாள் அழுது புலம்பினார்கள்; “இஸ்ரயேலின் மீட்பராகிய மாவீரர் வீழ்ந்தது எவ்வாறு?” என்று ஓலமிட்டார்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 December 2023, 12:08