தேடுதல்

எலியா இறைவாக்கினர் பலிபீடத்தை தயாரித்தல் எலியா இறைவாக்கினர் பலிபீடத்தை தயாரித்தல் 

தடம் தந்த தகைமை – பாகாலை வணங்கிய பொய்வாக்கினர்கள்

நீங்கள் உங்கள் தெய்வத்தின் பெயரைச் சொல்லி அழையுங்கள். நானோ ஆண்டவரின் பெயரைச் சொல்லி அழைப்பேன். அதற்கு நெருப்பு மூலம் பதிலளிக்கும் கடவுளே உண்மைக் கடவுள்”

மெரினா ராஜ் - வத்திக்கான்

எலியா மக்களிடம், “ஆண்டவரின் திருவாக்கினருள் நான் ஒருவன்தான் எஞ்சியிருக்கிறேன்! பாகாலின் பொய்வாக்கினரோ நாநூற்றைம்பது பேர் இருக்கின்றனர். இரண்டு காளைகளை எங்களிடம் கொண்டு வாருங்கள். அவர்கள் ஒரு காளையைத் தேர்ந்தெடுத்து, அதைத் துண்டு துண்டாக வெட்டி, விறகின் மேல் வைக்கட்டும்; ஆனால், நெருப்பு வைக்கலாகாது. மற்றக் காளையை நான் தயார் செய்து விறகின் மேல் வைப்பேன்; நானும் நெருப்பு வைக்க மாட்டேன். நீங்கள் உங்கள் தெய்வத்தின் பெயரைச் சொல்லி அழையுங்கள். நானோ ஆண்டவரின் பெயரைச் சொல்லி அழைப்பேன். அதற்கு நெருப்பு மூலம் பதிலளிக்கும் கடவுளே உண்மைக் கடவுள்” என்றார். மக்கள் அனைவரும் பதில்மொழியாக, “நீர் சொல்வது சரியே” என்றனர். பிறகு எலியா பாகாலின் பொய்வாக்கினரிடம், “நீங்கள் அதிகம் பேராய் இருப்பதால் “முதலில் நீங்கள் ஒரு காளையைத் தேர்ந்தெடுத்துத் தயார் செய்யுங்கள்; ஆனால், நெருப்பு மூட்டாதீர்கள்” என்றார். அவ்வாறே, அவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையைக் கொண்டு வந்து தயார் செய்த பின், காலை முதல் நண்பகல் வரை பாகாலின் பெயரைக் கூப்பிட்டு, “பாகாலே! பதில் தாரும்” என்று கத்தினர்.

ஆனால், எக்குரலும் கேட்கவில்லை; எப்பதிலும் வரவில்லை. எனவே, அவர்கள் தாங்கள் கட்டிய பலிபீடத்தைச் சுற்றி ஆடலாயினர். நண்பகலாயிற்று. எலியா அவர்களைக் கேலி செய்து, “இன்னும் உரத்த குரலில் கத்துங்கள். அவன் ஒரு தெய்வம்! ஒரு வேளை அவன் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கலாம்! அல்லது ஒதுக்குப்புறம் போயிருக்கலாம்! அல்லது பயணம் செய்து கொண்டிருக்கலாம்! அல்லது தூங்கிக் கொண்டிருக்கலாம்; அவன் விழித்தெழ வேண்டியிருக்கும்!” என்றார். எனவே, அவர்கள் இன்னும் உரத்த குரலில் கத்தினர். தங்கள் வழக்கப்படி வாளினாலும் வேலினாலும், இரத்தம் கொட்டும் வரை, தங்களையே கீறிக் கிழித்துக் கொண்டார்கள், பிற்பகல் ஆயிற்று. அவர்கள் மாலைப் பலி செலுத்தும் நேரம்வரை தொடர்ந்து உளறிக் கொண்டிருந்தார்கள். ஆயினும், எக்குரலும் கேட்கவில்லை. எப்பதிலும் வரவில்லை. கவனிப்பார் யாருமில்லை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 December 2023, 07:55