தடம் தந்த தகைமை – இறைவாக்கினர் எலிசாவின் அழைப்பு
மெரினா ராஜ் - வத்திக்கான்
ஆண்டவர் எலியாவிடம், “நீ வந்த வழியே திரும்பித் தமஸ்குப் பாலைநிலம் நோக்கிச் செல். அவ்விடத்தை அடைந்தவுடன் அசாவேலைச் சிரியாவுக்கு மன்னனாகத் திருப்பொழிவு செய். நிம்சியின் மகன் ஏகூவை இஸ்ரயேலுக்கு அரசனாக திருப்பொழிவு செய். ஆபேல் மெகோலாவைச் சார்ந்த சாபாற்றின் மகன் எலிசாவை உனக்குப் பதிலாக இறைவாக்கினராக அருள்பொழிவு செய். அசாவேலின் வாளுக்குத் தப்பினவனை ஏகூ கொல்லட்டும், ஏகூவின் வாளுக்குத் தப்பினவனை எலிசா கொல்லட்டும். ஆயினும், பாகாலுக்கு மண்டியிடாமலும் அவனை முத்தி செய்யாதவர்களுமான ஏழாயிரம் பேரை மட்டும் நான் இஸ்ரயேலில் விட்டுவைப்பேன்” என்றார்.
எலியா அங்கிருந்து சென்று, சாபாற்றின் மகன் எலிசாவைக் கண்டார். அப்பொழுது அவர் ஏர் பூட்டி உழுதுகொண்டிருந்தார். அவருக்கு முன்னே பதினோர் ஏர்கள் இருந்தன. பன்னிரண்டாம் ஏரைத் தாமே ஓட்டிக் கொண்டிருந்தார். எலியா அவரிடம் சென்று, தம் மேலாடையை அவர் மீது தூக்கிப் போட்டார். எலிசா அவரைக் கடந்து செல்கையில் ஏர் மாடுகளை விட்டுவிட்டு எலியாவிடம் ஓடிவந்து, “நான் என் தாய் தந்தையிடம் விடைபெற்று வர அனுமதி தாரும். அதன்பின் உம்மைப் பின்செல்வேன்” என்றார். அதற்கு அவர், “சென்று வா, உனக்கு நான் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டேன்!” என்றார். எலிசா எலியாவை விட்டுத் திரும்பி வந்து, ஏர் மாடுகளைப் பிடித்து, அடித்துத் தாம் உழுத கலப்பைக்கு நெருப்பு மூட்டி, அம்மாட்டு இறைச்சியைச் சமைத்து, மக்களுக்குப் பரிமாற அவர்களும் அதை உண்டனர். பின்பு அவர் புறப்பட்டுப் போய் எலியாவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்யலானார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்