தேடுதல்

அமெரிக்க ஐக்கிய நாட்டில் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு அமெரிக்க ஐக்கிய நாட்டில் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு  (AFP or licensors)

2023ஆம் ஆண்டின் காலநிலை மாற்ற இயற்கைப் பேரிடர்கள்

Freddy புயல் இடம்பெற்ற 45 நாட்களுக்குள்ளாகவே 2500 வீடுகளுக்கு நேரடியாகச் சென்று அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கியுள்ளது Christian Aid அமைப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

2023ஆம் ஆண்டில் காலநிலை மாற்றம் தொடர்புடைய இயற்கைப் பேரிடர்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது Christian Aid என்ற கிறிஸ்தவ பிறரன்பு அமைப்பு.

2023ல் மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்புக்களை கொணர்ந்த 20 இயற்கைப் பேரிடர்கள் குறித்து எடுத்துரைக்கும் இவ்வமைப்பு, இதனால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளோர் ஏழைகளே எனவும் தெரிவிக்கிறது.

இயற்கைப் பேரழிவுகளை முதலிலேயே கண்டுணர்ந்து அவைகளைத் தடுப்பதற்கும், அவைகளின் பின்விளைவுகளை எதிர்கொள்ள தயாரிப்பதற்கும் மேலும் நிதியுதவிகள் தேவைப்படுவதாகக் கூறும் இப்பிறரன்பு அமைப்பு, பேரிடர்களால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுள் 14 நாடுகள் இத்தகைய பேரிடர் அடிக்கடி இடம்பெறும் நாடுகளாக உள்ளன எனவும் தெரிவிக்கிறது.

ஆகஸ்ட் மாதத்தில் ஹவாய் தீவில் இடம்பெற்ற காட்டுத்தீ, மே மாதத்தில் குவாம் பகுதியில் இடம்பெற்ற பெரும்புயல் ஆகியவைகளே, இவ்வாண்டில் இடம்பெற்ற பேரிடர்களுள் மிகப் பெரிய இழப்பைக் கொணர்ந்தவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டில் மலாவி நாட்டை மிகப் பெரிய அளவில் பாதித்த Freddy புயல் பற்றி எடுத்துரைக்கும் Christian Aid அமைப்பு, இது இடம்பெற்ற 45 நாட்களுக்குள்ளாகவே 2500 வீடுகளுக்கு நேரடியாகச் சென்று அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கிறது.

10 கோடிக்கு மேல் மக்கள் தொகையைக் கொண்டுள்ள சீனா, அமரிக்கை ஐக்கிய நாடு, மெக்சிகோ போன்றவைகளும் இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டன என்பதைச் சுட்டிக்காட்டும் இவ்வமைப்பு, அண்மை மனித வரலாற்றிலேயே மிகவும் வெப்பம் நிறைந்ததாக இருந்த 2023ஆம் ஆண்டு, காலநிலை மாற்றத்தின் விளைவுகளைக் கண்கூடாகக் காட்டும் ஆண்டாக இருந்தது எனவும் தெரிவிக்கிறது.

வெள்ளப் பெருக்கினால் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதால் பெருமளவில் மக்கள் உயிரிழந்துள்ளதாகவும், வறட்சியின் காரணமாக பயிர்களும் கால்நடைகளும் மடிந்துள்ளதாகவும் மேலும் கவலையை வெளியிட்டுள்ளது Christian Aid என்ற அனைத்துலக வளர்ச்சிக்கான பிறரன்பு அமைப்பு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 December 2023, 15:14