தேடுதல்

துபாயில் COP 28 கூட்ட அலங்காரங்கள் துபாயில் COP 28 கூட்ட அலங்காரங்கள் 

இப்புவியும் நாமும் இறைவனின் உயரிய கொடை!

துபாயில் தொடர்ந்து நடைபெற்று வரும் COP-28 காலநிலை குறித்த உச்சிமாநாட்டில் காலநிலை நெருக்கடியை நிவர்த்தி செய்வதில் மதம் மற்றும் மதங்களுக்கு இடையிலான உரையாடலின் பங்களிப்பை எடுத்துக்காட்டினார் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் திருத்தந்தையின் தூதர் பேராயர் Christophe Zakhia El-Kassis.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் மதம் முக்கிய பங்காற்றுகிறது என்று கூறினார் ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான திருப்பீடத் தூதர் பேராயர் Christophe Zakhia El-Kassis.

துபாயில் நடைபெற்று வரும் COP-28 காலநிலை மாற்ற உச்சிமாநாட்டின் ஒரு சிறிய இடைவேளையின்போது வத்திக்கான் செய்திக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு உரைத்த பேராயர் El-Kassis அவர்கள், மக்களை வழிநடத்துவதில் மதம் பெரியதொரு பங்காற்றுகிறது என்றும், அவர்களின் மனநிலையை மாற்ற அவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கின்றது என்றும் உரைத்தார்.

இந்தக் காரணத்திற்காக, COP-28-இன் அமைப்பாளர்கள் உலகளாவிய காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் முயற்சியில் மதத் தலைவர்களை ஈடுபடுத்த முயன்றுள்ளனர் என்று கூறிய பேராயர் El-Kassis அவர்கள், இந்த விதத்தில் மதத் தலைவர்கள் மனிதகுலத்தையும் அவர்தம் வாழ்க்கையையும் கடவுளின் உயர்ந்த கொடையாகச் சிந்திக்க தங்களின் நம்பிக்கையாளர்களுக்கு வழிகாட்டி உதவிட முடியும் என்றும் குறிப்பிட்டார்.

இறைவன் நமக்கு வழங்கியுள்ள பூமி என்னும் இந்தக் கொடையைப் பாதுகாப்பதில் நாம் அதிக அக்கறைக் காட்டவேண்டும் என்று எடுத்துக்காட்டிய பேராயர் El-Kassis அவர்கள், நாமும் கடவுளின் சிறந்ததொரு கொடையாகக் கடவுளால் படைக்கப்பட்டுள்ளோம் என்றும், அவரின் இந்தக் கொடைக்காக அவருக்கு நன்றி செலுத்துவதுடன், அவர் நமக்கு கொடுத்துள்ள பொதுவான இல்லமாகிய இப்புவியைப் போற்றிப் பாதுகாத்திடல் வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

உடல்நிலை காரணமாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இங்கே வரமுடியாதது நம் அனைவருக்கும் வருத்தமளித்துள்ள போதிலும், அதற்கான காரணத்தையும் நாம் அறிந்து அதனை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டுள்ளோம் என்றும் எடுத்துரைத்தார் பேராயர் El-Kassis.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடலளவிலான பிரசன்னம் இங்கே இல்லையென்றாலும், மனதளவில் அவர் நம்முடன் இருக்கின்றார் என்றும், திருத்தந்தையின் செய்தியைப் படித்த, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் இம்மாநாட்டில் திருத்தந்தையின் சார்பாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டதையும் சுட்டிக்காட்டினார் பேராயர் El-Kassis.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 December 2023, 14:38