தேடுதல்

விசுவாசக் கோட்பாட்டுத் திருப்பீடத்துறையின் தலைமையகம் விசுவாசக் கோட்பாட்டுத் திருப்பீடத்துறையின் தலைமையகம் 

fiducia supplicans என்ற திருஅவைக் கோட்பாட்டிற்கு வரவேற்பு!

ஒரே பாலினத் தம்பதியருக்கு ஆசீர் வழங்குவது குறித்த திருஅவைக் கோட்பாட்டு அறிக்கை என்பது அடுத்த கட்ட முன்னற்றத்தையே காட்டுகிறது : கர்தினால் Cupich

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஒரே பாலினத் தம்பதியருக்கு ஆசீர் வழங்குவது இயலக்கூடிய ஒன்றே என்று திருத்தந்தை கூறியது குறித்து அவரின் அங்கீகாரத்துடன் Fiducia supplicans என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள திருஅவைக் கோட்பாட்டு அறிக்கையை பாராட்டி வரவேற்றுள்ளார் சிக்காகோவின் பேராயர் கர்தினால் Blase Cupich.

இதுகுறித்த அறிக்கை ஒன்றை அவ்வுயர்மறைமாவட்டத்தின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள கரத்தினால் Cupich அவர்கள், தங்களுடைய குறிப்பிட்ட அந்தஸ்தின் சட்டப்பூர்வ உரிமையைக் கோராமல், தங்கள் வாழ்க்கையில் கடவுளின் உதவி மற்றும் இருப்பின் அவசியத்தை உணர விரும்பும் ஒரே பாலினத் தம்பதியருக்கு மேய்ப்புப் பணிக்குரிய அணுகுமுறையை மேற்கொள்ள மேய்ப்புப் பணியாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இவ்விதத்தில் பார்க்கும்போது, ஒரே பாலினத் தம்பதியர் குறித்த இந்த அறிவிப்பு முன்னேற்றத்தை நோக்கிய அடுத்தபடி என்று விளக்கியுள்ள கர்தினால் Cupich அவர்கள், மேய்ப்புப்பணி சார்ந்து மக்களுடன் உடன் பயணித்தல் மற்றும் இறையருளையும் ஆதரவையும் விரும்பும் அனைத்துவகையான மக்களோடும் உடன் இருக்கவேண்டும் என்ற இயேசுவின் விருப்பத்தைப் போற்றும் திருத்தந்தையின் ஆசையையும் இது இணைக்கின்றது என்றும் உரைத்துள்ளார்.

திருமணம் குறித்த திருஅவையின் பாரம்பரிய படிப்பினைகளை இக்கோட்பாட்டு அறிக்கை பராமரிக்கிறது என்று குறிப்பிட்டுள்ள கர்தினால் Cupich அவர்கள், இது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முந்தைய அறிக்கைகளுக்கு ஒத்திருக்கிறது என்றும், திருஅவை அதிகாரிகள் தொடர்ந்து மற்றும் அதிகாரப்பூர்வமாக நடைமுறைகள் அல்லது சடங்குகளை நிறுவுவது, எந்தச் சூழ்நிலையிலும் பொருத்தமானதல்ல என்பதைக் குறிக்கிறது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

ஒழுங்குமுறைகளை மீறி வாழும் தம்பதியரின் ஒன்றிப்புக்கு வழங்கப்படும் ஆசீர்வாதங்கள் பதிவுத் திருமணங்களுடன் தொடர்புடைய சடங்குகளிலோ திருஅவைக்குப் புறம்பான திருமணத்தை ஒத்த நடவடிக்கைகளிலோ ஒருபோது வழங்கப்படக்கூடாது என்று கூறும் திருஅவைக் கோட்பாட்டு அறிக்கையை வலியுறுத்தியுள்ள கர்தினால் Cupich அவர்கள், இது ஒழுங்குமுறைகளை மீறி வாழும் தனிநபர்களுக்கும் ஒரே பாலின உறவுகளில் உள்ளவர்களுக்கும் பொருந்தும் என்றும் விளக்கியுள்ளார்.

மேலும் இத்தகைய ஆசீர்வாதம் மற்ற சூழல்களில் நடைபெற வேண்டும், அந்த சூழ்நிலைகளில் ஓர் ஆசி வழங்குவதன் வழியாக, எதையும் சட்டப்பூர்வமாக்கும் எண்ணம் இல்லை, மாறாக ஒருவரின் வாழ்க்கையை கடவுளிடம் திறந்து, அவருடைய உதவியை கேட்டுப் பெறுவதே இதன் நோக்கம் என்று கூறியுள்ள கர்தினால் Cupich அவர்கள், இதன்வழியாக,  அவர்கள் சிறப்பாக வாழ்வதற்கும், தூய ஆவியானவரை அழைப்பதற்கும், நற்செய்தியின் விழுமியங்களை அதிக நம்பிக்கையுடன் வாழ்வதற்கும் இது உதவியாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 December 2023, 14:15