நேர்காணல் – இயேசுவின் வருகைக்காக காத்திருக்கும் திருவருகைக்காலம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
"கொன்னூர்த் துஞ்சினும் யாந்துஞ்சலமே" என்பது குறுந்தொகை பாடல் வரிகளில் ஒன்று. தலைவனுக்காக காத்திருக்கும் தலைவியோடு சேர்ந்து வருந்தும் தோழியின் கூற்று இது. ஊரே தூங்கியிருந்தாலும் நாம் மட்டும் தூங்காது தலைவனுக்காக காத்திருக்கிறோம் என்பதே இப்பாடலின் பொருள். நாமும் நமது தலைவன் இயேசுவுக்காக காத்திருக்கும் தருணம் தான் இத்திருவருகைக்காலம். இக்காலம் முழுதும் அனைவர் மனதிலும் ஓர் இனம் புரியாத மகிழ்ச்சி. காரணம் கிறிஸ்து பிறப்பு பெருவிழா. நான்கு வாரத்தயாரிப்பில் குடில் தயார் செய்தல், வீட்டிற்கு வர்ணம் பூசி புதுப்பித்தல், பலகாரம் செய்தல், புதுத்துணி எடுத்தல் என்று பல முன்னேற்பாடுகளை நாம் செய்வோம். இத்தகைய செயல்பாடுகளும் காத்திருப்புக்களும் வெளிப்புறத் தயாரிப்புக்களாக மட்டுமே இருந்துவிடக் கூடாது. அதையும் தாண்டி நமது காத்திருப்பு தனிப்பட்டதாக, உள்ளம் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று அழைக்கிறார் இறைவன்.
இப்போதெல்லாம் காத்திருப்பு என்பது அடியோடு இல்லாமல் போய்விட்டது. பசித்த பின் சமைத்து உண்ட காலம் போய், துரித உணவு கடைகளில் வரிசையில் நிற்கும் காலமாகிவிட்டது. பேருந்திற்கு காத்திருந்த காலம் போய், மகிழுந்து வண்டிகளை நாடும் காலம் வந்துவிட்டது. சிலர் பொழுதை போக்குவதற்காக பார்க்கும் காணொளிகளைக் கூட நிதானமாக காத்திருந்து பார்ப்பது கிடையாது. எவ்வளவு நேரம், கடைசியில் எப்படி இக்காணொளி முடிகிறது என்பதை முன்கூட்டியே அறிய, சிகப்பு வரியை கடைசி வரை இழுத்து பார்த்துவிடுவது. ஏனெனில் எல்லாமே நமக்கு உடனடியாக நடக்க வேண்டும். பிறப்பு வளர்ப்பு, உணவு, படிப்பு, வேலை, வருமானம் சொத்து என எல்லாமே துரிதமாக இருக்க வேண்டும் என நினைத்தால் இறப்பும் துரிதமாக வந்துவிடும் அபாயம் இருக்கிறது. எனவே காத்திருப்போம். காத்திருக்க பழகுவோம். காத்திருப்பு அருமையானது.
இத்தகைய மனநிலையோடு இயேசுவின் வருகைக்காகக் காத்திருக்கும் இத்திருவருகைக் காலம் பற்றியக் கருத்துக்களை இன்று நம்முடன் பகிர்ந்து கொள்ள இருப்பவர் அருள்பணி A. ஜோசப் விக்டர். குணமளிக்கும் இயேசுவின் பக்த சபை என்பது தமிழகத்தின் திண்டுக்கல் மறைமாவட்டத்தில் உள்ள தவசிமடை பங்குத்தளத்தில் தோன்றியது. 2007ஆம் ஆண்டு திருத்தந்தையின் அனுமதியின் படி உருவான இச்சபையானது திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி அவர்களின் வழிகாட்டுதலின்படி அம்மறைமாவட்டத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்குகின்றது. நற்செய்தி அறிவிப்பு, கத்தோலிக்க படிப்பினை மக்களை நம்பிக்கையில் ஆழப்படுத்துதல் உள்மனகாயங்களால் துன்புறும் மக்களைக் குணப்படுத்துதல் போன்றவற்றை தங்களது பணியாகச் செய்து கொண்டிருக்கும் குணமளிக்கும் இயேசுவின் பக்த சபை அருள்பணியாளரான A. ஜோசப் விக்டர் அவர்களை திருவருகைக்காலம் பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்