நேர்காணல் – ஆற்றல் தரும் அமைதி
மெரினா ராஜ் – வத்திக்கான்
அமைதியின் ஆற்றல் அளவிடற்கரியது. அமைதி சில நேரம் வெல்லும், சில நேரம் கொல்லும். அமைதி காக்க வேண்டிய நேரத்தில் அமைதி காப்பதும், பேச வேண்டிய நேரத்தில் பேசுவதும் நலம். இதனைச் செய்யாமல் இருப்பதால் தான் சில பிரச்சனைகளே ஏற்படுகின்றன.!!!! இவ்வுலகிலுள்ள அனைத்துமே அமைதியின் வழியாகத்தான் உருவாகின்றன. பூக்கள் மலர்வது முதல் , மனிதன் உருவாவது வரை அனைத்துமே அமைதியில் தான் நிகழ்கின்றன. அமைதியின் வழியாக பல ஆற்றல்களை நாம் பெறுகின்றோம். சொல்லப் போனால் ஆற்றல்களின் பெட்டகமே நாம் தாம். சிலரது அமைதி கோபத்துடன் இருப்பது போல் தோன்றும். அமைதியாக இருப்பது கடினம் தான் என்றாலும், அதில் ஒருசுவை உள்ளது. இந்த அமைதி கிடைக்கப்பெற்ற ஒவ்வொருவருமே வெற்றியாளர் தான். இயேசு அமைதியை நம் வாழ்வில் எப்படி கடைபிடிக்க வேண்டும் என்பதை அப்பட்டமாக எடுத்துச் சொன்னவர். எந்த இடத்தில் பேச வேண்டுமோ அங்கு பேசி , எங்கு அமைதி காக்க வேண்டுமோ அங்கு அமைதி காத்து வாழ்வின் மதிப்பீடுகளை நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார். விபச்சார பெண் கல்லால் எறியப்பட்ட போது அமைதியாய் இருந்தவர், அவரைச் சிறைபிடித்து சென்று விசாரித்து அடிக்கும் போது நான் சொன்னது தவறானால் என்ன தவறு என்று சொல், சரியானால் ஏன் என்னை அடித்தாய்? என்று கேட்டு தன்னுடைய ஆளுமைத் தன்மையை அகிலத்திற்கு எடுத்துரைத்தவர்.
திருவருகைக் காலத்தின் இரண்டாம் வாரத்தில் கிறிஸ்து இவ்வுலகிற்குக் கொண்டு வந்த அமைதி பற்றி நம்மிடம் பகிர்ந்து கொள்ள இருப்பவர் அருள்சகோதரி ஃபபியோலா. அடைக்கல அன்னை சபையை சார்ந்த அருள்சகோதரி ஃபபியோலா அவர்கள், 1988ஆம் ஆண்டு முதல் துறவற வார்த்தைப்பாட்டை ஏற்று தமிழ் நாட்டில் ஆசிரியராகப் பணியாற்றியவர். 1998 ஆம் ஆண்டு முதல் இத்தாலியில் மறைப்பணியாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் அருள்சகோதரி அவர்கள், இல்லத்தலைவர், அடைக்கல அன்னை சபை ஐரோப்பிய மண்டலத்தின் ஆலோசகர் போன்ற பல பொறுப்புக்களைத் திறம்பட ஆற்றிவருபவர். கிறிஸ்தவ ஆன்மிக சிந்தனைகளைப் படைப்பாக, தமிழ் கிறிஸ்தவ பத்திரிக்கைகளில் வெளியிட்டு வரும் அருள்சகோதரி ஃபபியோலா அவர்களை திருவருகைக்காலத்தின் இரண்டாம் வாரம் பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
அதிகமாகக் கேள்; குறைவாகப் பேசு; என்பார்கள். நம்மில் சிலர் இதனை மாற்றிச் செய்வதனால் தான் வாழ்வில் ஏராளமான குளருபடிகள். இயேசுவைப் போல வாழ முயற்சிப்போம். கவலைகள் நம்மைச் சூழ்ந்தாலும் பிறருக்கு உதவுவோம். பிறரின் கவலைகளில் பங்கெடுப்போம். நமது கவலைகள் தானாக மாறும் மன அமைதி பிறக்கும். அமைதி பிறக்கும் மனதில் சந்தோசம் நிலைக்கும். மௌன மொழியை அமைதி மொழியை அன்பு மொழியைக் கற்று மகிழ்ச்சியாய் வாழ்வோம்; அப்போது, நம் உதடுகள் மட்டுமன்றி உள்ளமும் புன்னகை செய்யும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்