தேடுதல்

கோயம்புத்தூர் மறைமாவட்ட ஆயர்  மேதகு தாமஸ் அக்வினாஸ் கோயம்புத்தூர் மறைமாவட்ட ஆயர் மேதகு தாமஸ் அக்வினாஸ் 

நேர்காணல் – 2023ஆம் ஆண்டிற்காக இறைவனுக்கு நன்றி

2023 ஆண்டில் பல நன்மைகளை நாம் இறைக்கரத்தில் இருந்தும், இறைவனின் கரங்களாக செயல்பட்ட மனிதர்களிடமிருந்தும் பெற்றுக்கொண்டோம். அதற்காக நன்றி கூறூவோம்.

மெரினா ராஜ் - வத்திக்கான் 

நன்றி என்பது ஒரு வார்த்தையல்ல மாறாக அது ஒரு பழக்கம். நமக்கு நன்மையானதை, நல்லதை செய்பவர்கள், அல்லது கொடுப்பவர்களுக்கு கைம்மாறாக நமது உள்ளத்து உணர்வுகளை உதடுகளின் வழியாக வார்த்தையாக எடுத்துரைப்பதே நன்றி. நன்று என்ற வார்த்தையின் அடிப்படை ஆதாரமே நன்றி. நன்றியுணர்வினை கற்பிப்பது ஒரு கடினமான பணி. ஏனெனில் அது பழக்கமாக்கப்பட வேண்டிய வாழ்க்கை நெறிமுறை. நன்றியுணர்வு நம்மை நல்லவர்களாக உணர வைக்கிறது. "நன்றி" என்று பிறர் நம்மிடம் கூறும்போது, நமது செயல்களுக்கு மற்றவர்கள் மதிப்பளிப்பதை உறுதிப்படுத்துகிறது. நாம் பெற்றுக்கொண்ட நன்றியுணர்வு  நம்மை மேலும்  நல்லவர்களாக நடக்க ஊக்குவிக்கிறது, இதனால் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே ஒருவருக்கொருவர் உறவுகளை மேம்படுத்தவும் வாய்ப்பாக அமைகின்றது. ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு என்பார்கள் அதுபோல் நாம் பிறருக்குக் கூறும் நன்றியும் அதற்கு ஏற்ற நற்பலனை நமக்குக் கொண்டு வரும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான் பெற்ற அனைத்திற்கும் பெற இருக்கும் அனைத்திற்கும் நன்றியினைத் தெரிவிக்க வேண்டும்.

2023 ஆண்டில் பல நன்மைகளை நாம் இறைக்கரத்தில் இருந்தும், இறைவனின் கரங்களாக செயல்பட்ட மனிதர்களிடமிருந்தும் பெற்றுக்கொண்டோம். இயற்கைப் பேரிடர்கள், போர்கள், கால நிலை மாற்றங்கள், அரசியல் பொருளாதார நெருக்கடிகள் என்பன போன்றவற்றால் இழப்புக்கள் பல இருந்த போதிலும் இன்றைய நம் நிலைக்காக இறைவனுக்கு நாம் நன்றி கூறவேண்டும். அவ்வகையில் கடக்க இருக்கும் 2023 ஆம் ஆண்டில் இறைவன் நமக்கு செய்த எல்லாவிதமான நன்மைகளுக்கு நன்றியினையும், புதிய ஆண்டாம் 2024 ஆம் ஆண்டில் இறைவனின் அருள்கொடைகளை தாராளமாகப் பெற்றிடவும் வலியுறுத்தி தனது கருத்துக்களை இன்று நம்முடன் பகிர்ந்து கொள்பவர் கோயம்புத்தூர் மறைமாவட்ட ஆயர் மேதகு தாமஸ் அக்வினாஸ். 1953ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 நாள் கோட்டார் மறைமாவட்டத்தின் பிள்ளைத்தோப்பு என்ற ஊரில் லெபோன்ஸ் - எலிசபெத் எனும் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். 1980ஆம் ஆண்டு சென்னை தூய தோமா இளங்குருமடத்தில் சேர்ந்த ஆயர் தாமஸ் அக்வினாஸ் அவர்கள், பூவிருந்தவல்லி திருஇருதய குருத்துவக் கல்லூரியில் மெய்யியல் மற்றும் இறையியலைக் கற்று வேலூர் மறைமாவட்டத்திற்காக 1980 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். உதவிப்பங்குத்தந்தை, பங்குத்தந்தை, இளங்குருமட அதிபர், மறைமாவட்ட பொருளர் முதன்மை அருள்பணியாளர், கல்லூரி பேராசிரியர் என பல பணிகளைத் திறம்பட ஆற்றியவர். பெல்ஜியம் லூவேன் கல்லூரியில் திருஅவைச் சட்டங்களில் முனைவர் பட்டம் பெற்ற ஆயர் அவர்கள், 2002 ஆம் ஆண்டு திருத்தந்தை தூய இரண்டாம் ஜான் பால் அவர்களால் கோயம்புத்தூர் மறைமாவட்ட ஆயராக தேந்தெடுக்கப்பட்டு இன்று வரை ஏறக்குறைய 21 ஆண்டுகள் கோவை மறைமாவட்ட ஆயராக சீரும் சிறப்புமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார். ஆயர் அவர்களை 2023 ஆம் ஆண்டிற்காக இறைவனுக்கு நன்றி என்ற தலைப்பில் தனது கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்ப்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

நேர்காணல் - மேதகு ஆயர் தாமஸ் அக்வினாஸ்

நன்றி என்று கூறுவது நமது சுதந்திரமனம், இணக்கமான வாழ்வு, ஆரோக்கியமான மன நலனைக் கொடுக்கின்றது. வாழ்வில் அடிக்கடி நன்றி சொல்வது நல்வாழ்வைத் தருகிறது, சமூக உறவுகளை வலுப்படுத்துகிறது, மற்றவர்களுடனான உறவில் தன்னை வலுப்படுத்துகிறது, நம்பிக்கையையும் மரியாதையையும் ஒருவர் மற்றவரிடத்தில் தூண்டுகிறது, ஒரு நல்ல உறவுச்சூழலை உருவாக்குகின்றது என்று கூறுகின்றார்கள் உளவியலாளர்கள். நன்றியுணர்வினை சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதன் வழியாக உணர்வுப்பூர்வமாக தொடர்புகொள்ளுதல், சமூக விழுமியங்களில் முதலீடு செய்தல், சமுதாயத்தில் சிறந்த மனிதர்களாக வாழ்தல் போன்றவற்றிற்கு அவர்களை ஊக்குவிக்க முடிகின்றது. நன்றி சொல்வது மரியாதை மட்டுமல்ல, ஒரு சிறந்த சமூகத் திறமையாகக் கருதப்படுகின்றது.

காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது.

என்கிறார் திருவள்ளுவர். நன்மை செய்தல் நல்லவர் பண்பு. நல்லவர்களால் மட்டுமே இந்த உலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது. நன்மை செய்பவர்கள் மிகக் குறைவானவர்கள். எனவே பெற்ற நன்மைக்கு நன்றி கூறும் பழக்கத்தை வளர்க்கும் போது நாமும் மகிழ்வடைகின்றோம். அதனை செய்தவரும் இன்னும் அதிக நன்மையினை பிறருக்கு செய்ய வேண்டும் என்ற தூண்டுதலினைப் பெறுகின்றார். இதனால் அவரை சுற்றி உள்ள மக்கள், ஊர், மாநிலம், நகரம் என சிறிதளவில் தொடங்கிய நற்செயல், பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. அனைவரையும் நன்மை செய்யத் தூண்டுகின்றது. உலகம் முழுதும் நன்றியினாலும் நன்மையினாலும் நிரப்பப்படுகின்றது. நன்றி உணர்வு கொண்டவர்களாக நாம் இருப்பது மிகவும் நல்லது. நன்றி உணர்வு நம்மை வாழ்வின் உச்சத்திற்கு இட்டுச்செல்லும். தன் வாழ்வில் நடக்கும் அனைத்திற்கும் நன்றி சொல்பவர் அதிகப்படியான நன்மைகளை அடைகின்றார்கள் என்கிறது பிரபஞ்ச இரகசியம். நன்றியையும் பாராட்டையும் உடனடியாக தெரிவித்து விட வேண்டும். அவரவர்களுக்கு சொல்ல வேண்டிய நன்றியை சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லும் போது அதற்கான மதிப்பும் தன்மையும் கூடுகிறது. நாம் சொல்லும் நன்றி, தக்க சமயத்தில் நமக்கு இரட்டிப்பான நன்மையை திருப்பி தரக் கூடும். திருவிவிலியத்தில் பத்து தொழுநோயாளர்களில் ஒருவர் திரும்பி வந்து நன்றி கூற, மீதமுள்ளவர்கள் நலம் பெறவில்லையா? அவர்கள் எங்கே? என்று கேட்ட இயேசு, இன்று நாம் பெற்ற நன்மைகளுக்கு நன்றி கூற மறக்கும் போது நம்மையும் பார்த்து கேட்கிறார் என்னிடம் இருந்து நன்மைகள் எதுவும் பெறவில்லையா? என்று. பெற்ற நன்மைக்கு நன்றி கூற முயற்சிப்போம். பெற இருக்கும் நன்மைகளையும் பெற்று விட்டதாக எண்ணி நன்றி கூறும் போது அதனை பெற எளிமையான சூழல் ஏற்படுவதாக அனுபவம் வாய்ந்த அறிஞர்கள் கூறுகின்றனர். அதனால் நன்றி சொல்லும் பண்பை நம்மில் வளர்த்துக் கொள்ள முயல்வோம். நன்றியை உண்மையாக சொல்வோம்.

பொய்யான நன்றிகள் நம் மதிப்பைக் குறைத்து விடக் கூடும். முணுமுணுக்காமல் வார்த்தைகளை விழுங்காமல் தெளிவாக திருத்தமாக இருக்க வேண்டும் நாம் கூறும் நன்றி. நாம் நன்றி கூறுவதால் அடையும் மகிழ்ச்சியை நம்முடைய செயலில் வெளிப்படுத்த வேண்டும் அதற்கு மலர்ந்த முகத்தில் நம்முடைய நன்றி சொல்லப்பட வேண்டும். நன்றி சொல்பவரை நேருக்கு நேர் பார்த்து கண்களைப் பார்த்து சொல்ல வேண்டும். நாம் சொல்லும் நன்றி அவர் கண்கள் வழியே இதயத்திற்குள் எடுத்துச் செல்லப்பட வேண்டும். தனிப்பட்ட நபருக்கு நன்றி சொல்லும் போது அவரது பெயரை உச்சரித்து சொல்லுதல் மிகுந்த பலனளிக்கும். சரியான நேரத்தை தெரிவு செய்து நன்றி சொல்லுதல் வேண்டும். சரியான இடத்தில் முறையாக சொல்லும் நன்றி நமக்கு வாழ்நாள் முழுவதற்குமான ஒரு சொத்தாக இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக நாம் பிறந்தது முதல் இந்த ஆண்டின் இந்நாள் வரை நம்மை நன்மைகளால் நிரப்பிய இறைவனுக்கு உளமார நன்றி கூறுவோம். இன்னும் ஏராளமான நன்மைகளால் வரவிருக்கும் புத்தாண்டிலும் நாம் நிரப்பப்படுவோம். நன்றி என்னும் அருளினை நாமும் பெறுவோம் பிறரும் பெற வழிவகை செய்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 December 2023, 09:01