தேடுதல்

அன்னை மரியா அன்னை மரியா  (©CURAphotography - stock.adobe.com)

இறைவனின் தாய் மரியா புத்தாண்டு 2024

வானளவு உயர்ந்த உள்ளம் கொண்டவராகவும், கடலளவு அளவற்ற கருணை கொண்டவராகவும், வெறுப்பைக் காட்டாது அன்பை மட்டுமே அள்ளிக் கொடுக்கும் அமுத சுரபியாகவும் திகழ்பவர் நம் அன்னை மரியா.
இறைவனின் தாய் மரியா - பெருவிழா - அருள்பணி அமல்ராஜ் ம.ஊ.ச.

மெரினா ராஜ் – வத்திக்கான்

புதிய ஆண்டு என்றாலே மனதிற்குள் புத்துணர்ச்சி. புதியது என்று சொன்னாலே பலருக்கும் மனதிற்குள் மகிழ்ச்சி பொங்கும் புதிய உடை புதிய உணவு, புதிய வீடு வாகனம் என புதியவை அனைத்துமே மனதிற்கு நிறைவினையும் மகிழ்ச்சியினையும் தரும். 2023 ஆம் ஆண்டு பல விதமான நல் உறவுகளையும் உணர்வுகளையும் நமக்கு வழங்கியுள்ளது. நன்மை மட்டுமன்றி ஏராளமான இடர்ப்பாடுகளையும் இன்னல்களையும் கொண்டதாக இவ்வாண்டு இருந்தது. உக்ரைன், இரஷ்யா, இஸ்ரயேல், பாலஸ்தீனம் சூடான் என போரினாலும் மோதலினாலும் பல்வேறு மக்கள் துன்புற்றனர், இன்றும் துன்புற்று வருகின்றனர். துன்பம் ஒருபோதும் முடிவாகாது. இன்பமே வாழ்வின் நிறைவாக இருக்கும். வாழ்வில் நமக்கு ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் ஒரு சூழலே தவிர அதுமட்டுமே வாழ்க்கையல்ல என்பதை வாழ்வின் சூழல்கள் நமக்கு உணர்த்துகின்றன. தான் பெற்று வளர்த்த குஞ்சுகளையே  ஒரு பருவம் வந்ததும் தன்கூட்டிலிருந்து கீழே தள்ளி பறக்கவைக்கும் பறவைகள் போல நம்மையும் ஒரு சூழலுக்குள் அனுப்பி அதிலிருந்து வாழ்க்கை என்றால் என்னவென்று கற்றுக்கொள்ள அழைக்கின்றார் இறைவன்.

பறவைக்குஞ்சுகளை கூட்டிலிருந்து தள்ளிவிட்டு பறக்க பழக்கப்படுத்தும் தாய்ப்பறவை ஒருபோதும் தனது குஞ்சுகளை மறந்து விடாது. அது முழுதாக பறக்கக் கற்றுக்கொள்ளும் வரை அதனோடு அதன் அருகில் இருந்து ஊக்கப்படுத்தும். ஐந்தறிவு கொண்ட பறவையினத்திற்கே தன் பிள்ளைமேல் இவ்வளவு பாசமும் அக்கறையும் இருக்கும் போது அன்னைக்கெல்லாம் அன்னையான நம் தாய் மரியா சிலுவை அடியில் நம் அனைவருக்கும் தாயாகும் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர். நமது வாழ்வின் சொல்லும் செயலும் துவக்கமும் துடிப்பும் அன்னையின் அருகிருப்பிலேயே நடக்க வேண்டும் என்ற எண்ணத்தால் தான் ஒவ்வொரு ஆண்டின் துவக்கமும் அன்னை மரியா இறைவனின் தாய் என்ற பெருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது. அன்னை மரியா அகிலத்தில் உள்ள அனைவரின் தாய். அவராலேயே, அவரின் ஆசீராலேயே நமது வாழ்வின் அனைத்து நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.

வானளவு உயர்ந்த உள்ளம் கொண்டவராகவும், கடலளவு அளவற்ற கருணை கொண்டவராகவும், வெறுப்பைக் காட்டாது அன்பை மட்டுமே அள்ளிக் கொடுக்கும் அமுத சுரபியாகவும் திகழ்பவர் நம் அன்னை மரியா. இத்தகைய அன்னை மரியா இறைவனின் தாய் என்ற பெருவிழாவை புத்தாண்டின் துவக்கத்தில் கொண்டாட இருக்கும் நமக்கு  மரியா - இறைவனின் தாய் என்ற தலைப்பில் தனது கருத்துக்களையும் புத்தாண்டு செய்திகளையும் வழங்க இருப்பவர் அருள்பணி அமல்ராஜ் . மரியின் ஊழியர் சபையைச் சார்ந்த அருள்பணி அமல்ராஜ் அவர்கள் நமது வத்திக்கான் வானொலியில் அன்னை மரியா பற்றிய பல்வேறு கருத்துக்களை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருபவர். உரோமில் உள்ள மரியின் ஊழியர் சபை பொது ஆவணக் காப்பாளராக இருக்கும் தந்தை அவர்களை எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம். 

ஆண்டின் தொடக்கம் என்பது மனித உள்ளங்களுக்குப் புத்துணர்ச்சியை தரக்கூடியது. அதனால் தான் உலகில் வாழும் எல்லா மக்களும் புத்தாண்டை மிகவும் சிறப்பாக மகிழ்வுடன் கொண்டடுகின்றார்கள். ஆண்டின் தொடக்கம் எப்படி அமைகிறதோ அதுபோலவே அந்த வருடம் முழுவதும் அமையும் என்று பெரும்பாலானோர் எண்ணுகின்றார்கள். அதனால் தான் அந்த புதிய ஆண்டின் துவக்கத்தில் தங்களையும் தங்களைச் சுற்றி உள்ளவர்களையும் மகிழ்வாக வைத்திருக்க விரும்புகின்றார்கள். அல்லது தங்களுக்கு மகிழ்வைத்தரும் இடங்களுக்குச் சென்று மகிழ்கின்றனர்.

புதிய ஆண்டினை நல்லவிதமாக வரவேற்கவும் நமக்கு இறையருளால் கொடுக்கப்பட்டிருக்கும் இப்புதிய ஆண்டை மகிழ்வுடன் வரவேற்கவும், 7 முக்கியமான கேள்விகளை நமக்குள் நாம் கேட்டுக்கொள்வோம். 

1,நான் நன்றியுணர்வுடன் ஏற்கின்றேனா? 2.எனது அன்றாட வாழ்க்கைப் பழக்கத்தில் நான் எதை மாற்ற விரும்புகின்றேன்? 3.எனது உணர்வுகளில் எதை நான் சரிசெய்ய விரும்புகின்றேன்? 4.இந்த புதிய ஆண்டில் நான் என்ன கற்றுக்கொள்ளப்போகின்றேன்? 5.குற்ற உணர்வுடன் வாழ்கின்றேனா பிறரை மன்னித்து வாழ்கின்றேனா? 6.என்னையும் எனது செயல்களையும் விமர்சனத்திற்கு உட்படுத்தி அதனை சரிசெய்ய முயல்கின்றேனா? 7. எனது நல்வாழ்வைப் பற்றிய எண்ணம் தொலைநோக்குப் பார்வை எனக்கு உள்ளதா? என்பன போன்ற கேள்விகளை நமக்குள் நாம் எழுப்பிக் கொள்வோம்.

கல்லில் சிலையாய், மண்ணில் மலையாய் என்றும் உயர்ந்தே இருப்போம். புதிதாய் பிறந்தோம் என்றும் நம் உள்ளம் நினைக்க, பூக்களின் நறுமணமாக நம்பிக்கை நம் உள்ளங்களில் நிலைக்க, நல்லதொரு நாளாய் ஒவ்வொரு பொழுதும் விடிய மனதின் ஆசைகள் மாற்றமின்றி நிறைவேற இன்முகத்துடன் புத்தாண்டை வரவேற்போம்.

காலை பனிபோன்று நம் கவலைகள் அனைத்தும் மறைந்து ஓட, கதிரவனின் ஒளியாய் புத்தாண்டின் புத்துணர்ச்சி நம் உள்ளத்தை நிரப்ப, நட்சத்திர கூட்டங்கள் போல் ஒன்றிணைந்து நம்பிக்கை ஒளியை நண்பர்களுடன் பகிர்ந்திடுவோம். நம் கனவுகள் எல்லாம் நினைவாக, நினைவுகளில் நீங்காத சந்தோஷ நிலைபெற்றிட, என்றென்றும் இளமையாய் எண்ணத்தில் வளமையாய் நிரம்பட்டும் இந்த புத்தாண்டு. மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மனதை தயாரிக்கும் நாளாக இந்த நாள் அமையட்டும். ஏற்றங்கள் காண மாற்றங்கள் பலவற்றை காணும் ஆண்டாக புத்தாண்டு அமையட்டும். இன்று பூத்த மலரின் வாசமாய் உங்கள் நேசம் அனைவருக்கும் கிடைக்கட்டும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அன்னை மரியாள், இறைவனின் தாய் பெருவிழா மற்றும் புத்தாண்டுச் செய்தி

அருட்பணி. ஆ. அமல்ராஜ், ம.ஊ.ச.

வத்திக்கான் வானொலி நேயர்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். இப்புதிய ஆண்டின் தொடக்க நாளில் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் காலத்தில் இருக்கின்ற நம் அனைவரையும் அன்னை மரியாள் இறைவனின் தாய் எனும் பெருவிழா வழியாக மனுவுருவாதல் (incarnation) என்னும் மறை உண்மையைப் பற்றித் தியானிக்கவும், இறைவனுடைய மீட்புத் திட்டதில் அன்னை மரியாளுடைய பங்கைத் தியானிப்பதன் வழியாக அன்னை மரியாள் நம் அன்றாட வாழ்விலும் நமது வாழ்க்கைப் பயணத்திலும் எவ்வாறு உடன் நடந்து வருகின்றாள் மற்றும் துணை இருக்கின்றாள் என்பதையும் பற்றிச் சிந்திக்கவும் இன்றைய திருவழிபாட்டு நிகழ்வுகள் நமக்கு உதவுகின்றன. அன்னை மரியாள் இறைவனின் தாய் என்கின்ற கோட்பாட்டினுடைய வரலாற்றை ஏற்கனவே பலர் விளக்கியிருக்கிறார்கள். எனவே, இன்று இக்கோட்பாடு இன்று நமக்கு வழங்கும் செய்தி என்ன என்பதைப் பற்றி நான் உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.

கடந்த நவம்பர் மாதம் 30ஆம் தேதி அகில உலக இறையியல் பேரவையின் (International Theological Commission) அமர்வில் கலந்துகொண்டவர்களைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "பெண் எப்படிப்பட்டவள் அல்லது பெண்மையின் இறையியல் (Theology of womanhood) என்ன என்பதை நாம் புறிந்துகொள்ளவில்லை என்றால், திருஅவை என்றால் என்ன என்பதை நாம் ஒருபோதும் புரிந்துகொள்ள மாட்டோம்" என்று கூறினார். மேலும், 2020ஆம் ஆண்டு ஜனவரி 1 அன்றைய தனது மறையுரையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மரியாளுடைய சிறப்பு என்னவென்றால் அவள் பெண்ணும் தாயும் ஆனவள். பெண்ணான அவளிடமிருந்தே நமக்கு மீட்பு கிடைத்தது. இவ்வகையில் ஒரு பெண் இல்லாமல் மீட்பில்லை. அவளில் கடவுள் நம்மோடு இணைந்திருக்கிறார், நமது வரலாற்றில் நுழைந்திருக்கிறார், நம் இன்ப துன்பத்தில் பங்கெடுத்திருக்கிறார் மற்றும் இன்றும் நம்மோடு இணைந்திருக்கிறார்: நாம் அவருடன் இணைய விரும்பினால் நாமும் அதே பாதையில் செல்ல வேண்டும். எனவேதான் ஆண்டின் தொடக்க நாளிலேயே தாயாம் திருஅவை மாரியாள் இறைவனின் தாய் என்கின்ற இவ்விழா வழியாக நம் அணைவரையும் கடவுள் மனுவுருவானதன் மறை உண்மையைப் புறிந்து கொள்ளவும் அந்த மனிதத்தைப் போற்றி பிறரை மதிக்க வேண்டுமானால் அது இச்சமூகம் பெண்களை மரியாதையுடன் நடத்துவதிலிருந்து தொடங்க வேண்டும் என்று கூறுகின்றார்  (Homily of Pope Francis for the solemnity of Mary, Mother of God, January 1, 2020)

ஆம், பெண் என்பவள் சமுதாயத்தின் மிக முக்கியமானதொரு அங்கம் மட்டுமல்ல திருச்சபையிலும் அவள் பிரிக்கமுடியாததொரு சக்தியாக இருக்கின்றாள் என்பதையே திருத்தந்தையினுடைய இக்கூற்றானது சுட்டிக்காட்டுகின்றது. பெண்ணடிமைத்தனமும் பிற்போக்கு வாதமும் நிரம்பியிருக்கும் நமது இந்திய குறிப்பாக தமிழ்ச் சமூகத்தில் அப்பெண்களுக்கான மாண்பையும் உரிமையையும் வழங்குவதில் திருஅவையானது பொதுச் சமூகத்திற்கு (Civil society) ஒரு முன் மாதிரியை உருவாக்க வேண்டும் என்பதுதான் நமக்கான திருத்தந்தையினுடைய செய்தி ஆகும். திருத்தந்தையினுடைய இக்கருத்தில் பொதிந்துள்ள எதார்த்தத்தைப் புறிந்துகொண்டு மானுடவியல், கிறிஸ்தியல், திருஅவையியில் மற்றும் மரியியில் பார்வையில் அவருடைய வார்த்தைகளைச் சிந்தித்து இப்புதிய ஆண்டில் காலெடுத்து வைக்கும் நாம் ஒருங்கிணைந்த கூட்டுத் திருஅவையை உருவாக்குவதில் இயேசுவின் மனுவுருவாதல் நிகழ்வும், இறைவனின் தாய் மரியாள் என்கின்ற கோட்பாடும் நமக்கு உதவுகின்றன.

ஒரு மதத்தினுடைய வழிபாடானது எதாவது ஒரு வகையில் அம்மக்களுடைய வாழ்வோடு தொடர்புடையதாகவே இருக்கின்றது. இதையே தமிழக வரலாற்று ஆசிரியர் நா. வானமாமலை அவர்கள் தனது பழங்கதைகளும் பழமொழிகளும் என்கின்ற நூலில், "வழிபாடு வழிபடுவோரின் வாழ்க்கை முறையில் இருந்து எழுகின்றன. ஒரு சமுதாயம் அதன் உணவு, உடை உறையுள் ஆகிய புற வாழ்க்கைத் தேவைகளை எந்த முறையில் பெறுகிறதோ, அதற்காக எத்தகைய சமுதாய அமைப்பை உருவாக்கிக் கொண்டுள்ளதோ, அந்த அமைப்பின் அடிப்படையின்மீது தெய்வ நம்பிக்கை என்ற மேற்கோப்பு எழும் (ஏங்கல்ஸ்)" என்று கூறுவார். உதாரணமாக தமிழர்களுடைய தாய்த் தெய்வ வழிபாடே மரியன்னை பக்தியானது நமது மண்ணில் மிக வேகமாகப் பரவிடக் காரணமாகும். இதுவே, மத வேறுபாடுகளைக் கடந்து பிற மதத்தினரும் மரியன்னையினுடைய திருத்தலங்களுக்குச் செல்வதில் பொதிந்துள்ள மானுடவியல் பார்வையாகும். இந்த மானுடவியல் பார்வையானது, நாம் இன்று கொண்டாடும் பெருவிழாவான மரியாள் இறைவனின் தாய் என்கின்ற மரியன்னை கோட்பாட்டிற்கும் ஓரளவுக்குப் பொருந்தும். அதாவது, கி.பி. 341ஆம் ஆண்டு பல விவாதங்களுக்குப் பின் எபேசு நகரில் கூடிய திருச்சங்கமானது அன்னை மரியாள் இறைவனின் தாய் என்பதை ஒரு மரியியல் கோட்பாடாக (marian dogma) அறிவித்தது. ஆனால், அதற்கு முன்னதாகவே பலவேறு கால கட்டங்களில் இறைமக்கள் அன்னை மரியாளை இறைவனின் தாயாகக் கருதி அவருடைய மகன் இயேசுவிடம் தங்களுக்காகப் பறிந்து பேசிட வேண்டிச் செபிக்கக்கூடிய வழக்கமானது இருந்து வந்துள்ளது.

இது குறித்து திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் தனது மரியியல் மறைக்கல்வியில் கூறுகின்றபொழுது, "புறச்சமயத்து புராண இலக்கியங்களில், ஒரு குறிப்பிட்ட பெண் தெய்வமானது எதாவதொரு தெய்வத்தினுடைய தாயாகக் காண்பிக்கப்படுவது வழக்கமாகும். எடுத்துக்காட்டாக, சேயுஸ் (Zeus, is the sky and thunder god in ancient Greek religion and mythology) எனப்படும் தெய்வமானது ரேயா (Rhea) என்னும் பெண் தெய்வத்தை அதனுடைய தாயாகக் கொண்டிருந்தது. இந்தவழக்கமானது, இயேசுவினுடைய தாயான கன்னி மரியாளுக்கு வுhநழவóமழள அதாவது "இறைவனின்

தாய்" என்கிற பெயரைக் கொடுக்கப் பெரிதும் உதவியது. எனினும், "இறைவனின் தாய்" என்னும் பெயரானது அதற்குமுன் யாருக்கும் கொடுக்கப்பட்டதில்லை. ஆனால் புறமதப் புராணங்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாததொரு நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்காக கடவுளுடைய வார்த்தையான இயேசு கிறித்து மரியாளுடைய திருவயிற்றில் கருத்தரித்ததன் நம்பிக்கையில் உருவாக்கப்பட்டதொன்றாகும" என்று கூறுகின்றார். (John Paul II, Church proclaims Mary mother of God, «L'Osservatore Romano weekly edition in English», 4 December 1996, p. 11).

இது பற்றி மேலும் அவர் கூறுகையில், "முதல் கிறித்தவக் குழுமத்தில், இயேசு தந்தையாம் கடவுளுடைய மகன் என்பதைச் சீடர்கள் அதிகம் அறிந்ததால், கன்னி மரியாள் இறைவனுடைய தாய் அதாவது Theotókos என்பது அவர்களுக்கு மிகவும் தெளிவானது. இப்பெயரனாது நற்செய்திகளில் வெளிப்படையாகத் தெரியவில்லையென்றாலும் அவைகளில் "இயேசுவின் தாய்" என்பது குறிப்பிடப்பட்டுள்ளது மற்றும் இயேசுவே கடவுள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது (யோவா 20:28; ஒப்பிடுக. 5:18; 10:30- 33). எப்படியாயினும் கன்னி மரியாள் "கடவுள் நம்மோடு" (மத் 1:22-23) என்ற அர்த்தத்தில் இம்மானுவேலுடைய தாய் என்றும் வழங்கப்படுகின்றார்" என்கின்றார். இங்கு இன்னொன்றையும் உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன், அதாவது எபேசு திருச்சங்கமானது கி.பி. 431 ஆம் ஆண்டு அன்னை மரியாள் இறைவனின் தாய் என்கின்ற கோட்பாட்டை அறிவிப்பதற்கு முன்பே மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதொரு பாடலில் எகிப்தில் வாழ்ந்துவந்த கிறித்தவர்கள் அன்னை மரியாளை இறைவனின் தாயாகக் கருதி அவளை நோக்கிச் இவ்வாறு செபித்தார்கள்,

ஓ மகிமைமிகு கன்னி மரியே, இறைவனுடைய தாயே!

உம்முடைய ஆதரவைத் தேடி உம்மிடம் ஓடி வருகின்றோம்.

எங்கள் தேவைகளில் எங்களுடைய வேண்டுதல்களைத் தள்ளிவிடாமல்,

எல்லாத் தீமைகளிலிருந்தும் எங்களை விடுவித்தருளும். (திருப்புகழ்மாலை).

இறைவனின் தாய் என்று பொருள்படும் Theotókos என்ற சொல்லாடலானது இந்தப் பழமையான ஆவணத்தில் முதல் முறையாக வெளிப்படையாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மரியாளுடைய தாய்மையானது திருச்சபையால் போற்றப்பட்டு கொண்டாடப்படுவதற்கு அடிப்டைக் காரணம் இயேசு கிறிஸ்துவின் மனுவுருவாதல், பாடுகள், இறப்பு மற்றும் உயிர்ப்பு இவைகள் அணைத்தும் மரியாள் என்னும் பெண்ணின் வழியாக நிகழ்ந்ததாகும். இதையே புனித அகுஸ்தினார், “தாய் கற்பனையாக இருந்தால், கிறித்துவினுடைய சதையும் உயிர்த்தெழுதலினுடைய வடுக்களும் கர்ப்பனையானதாகவே இருந்திருக்கும்” (Tract. in Ev. Ioannis, 8, 6-7) என்கின்றார்.

புனித சின்னப்பர் கலாத்தியருக்ககு எழுதிய கடிதத்தில் “காலம் நிறைவேறியபோது திருச்ட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்” (கலா 4:4) என்று கூறுகின்றார். இதனடிப்படையில், மனித வாரலாற்றின் மற்றும் மீட்பு வரலாற்றின் பிரிக்கமுடியாத ஒன்றாக இருக்கின்ற பெண்ணானவள் நமது சமுதாயத்தால் எவ்வாறு நடத்தப்படுகின்றாள் மற்றும் அவளுடைய தனிச்சிறப்பான தாய்மை இன்றைய நவீன உலகால் எவ்வாறு பார்க்கப்படுகின்றது என்பதை நாம் ஆய்வுக்கு உட்படுத்தும்பொழுது அது இச்சமுதாயத்தின் பிற்போக்குத் தனத்தையும் ஆணாதிக்கச் சிந்தனையையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. இது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெண் என்பவள் வாழ்வின் ஆதாராம் ஆனாலும் அவள் தொடர்ந்து அவமானப்படுத்தப்படுகின்றாள், புறக்கணிக்கப்படுகின்றாள், தாக்கப்படுகின்றாள், கற்பழிக்கப்படுகின்றாள், விபச்சாரம் செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றாள் மற்றும் அவள் தனது கர்ப்பத்தில் தாங்கும் உயிரை அடக்குகிறார்கள் மற்றும் அதை அழிக்கின்றார்கள். இவ்வாறு ஒரு பெண்ணின் மீது இழைக்கப்பபடும் ஒவ்வொரு வன்முறையும் ஒரு பெண்ண்pடமிருந்து பிறந்த கடவுளுக்கு எதிரான குற்றமாகும்.

ஒரு தனி மனிதனுடைய குணமோ, சமூகத்தின், நிறுவனத்தின் ஒழுங்கோ அது ஒரு பெண்ணை அல்லது சமூக அமைப்பின் வழிம்பு நிலையில் இருக்கின்ற மக்களை எவ்வாறு நடத்துகின்றது என்பதைப் பொருத்தே அதன் ஒழுக்கமானது அளவிடப்படும். இதன் அடிப்படையில் கிறித்தவர்களாகிய நாம் இச்சிந்தனையைப் பலரிடம் எடுத்துச் செல்வதிலும் திருஅவையின் அனைத்து நிலைகளிலும் பெண்களுக்கு உரிய பங்கையும் மரியாதையையும் கொடுப்பதில் பொதுச்சமூகத்திற்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். ஏனெனில் திருஅவையும் ஒரு பெண் மற்றும் தாய் (Papa Francesco, La Chiesa è donna e madre, «Meditazione mattutina nella cappella della Domus Santae Marthae», 21 maggio 2018; Cfr. L'Osservatore Romano, ed. quotidiana, Anno CLVIII, n.114, 22/05/2018). இதுவே நாம் இன்று கொண்டாடும் அன்னை மரியாள் இறைவனின் அன்னை என்கின்ற விழா நமக்கு விடுக்ககும் செய்தி மற்றும் அழைப்பு ஆகும். உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது புத்தாண்டு 2024  நல்வாழ்த்துக்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 December 2023, 14:53