தேடுதல்

அரேபிய அன்னை அரேபிய அன்னை  (Copyright (c) 2018 Ryle Silva/Shutterstock. No use without permission.)

அரேபிய அன்னை திருத்தலத்தின் வைர விழாவைக் கொண்டாடும் குவைத்!

குவைத் நாடு வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் முதல் உறுப்பினராக 1968-ஆம் ஆண்டில் தனது தூதரக உறவுகளை நிறுவியது. இருப்பினும், உறவுகளை வலுப்படுத்தவும், மதங்களுக்கு இடையேயான உரையாடலை மேம்படுத்தவும் 2000-மாம் ஆண்டில்தான் திருத்தந்தையின் தூதருக்கான அலுவலகம் அந்நாட்டில் நிறுவப்பட்டது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

குவைத்தில் உள்ள கத்தோலிக்கச் சமூகம், அம்மண்ணில் கட்டப்பட்ட முதல் கத்தோலிக்கக் கோவிலும், Bahrain, Qatar மற்றும் Saudi Arabia ஆகிய வடக்குப் பகுதிகளை உள்ளடக்கிய அப்போஸ்தலிக்க மறைவட்டத்தின் (Apostolic Vicariate) தாய்க்கோவிலுமான அரேபிய அன்னை ஆலயத்தின் 75-வது ஆண்டு விழா கொண்டாட்டங்களை நிறைவு செய்யவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி அன்று தொடங்கிய இவ்வாலயத்தின் வைரவிழா கொண்டாட்டங்கள், வரும் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 8-ஆம் தேதி புனித கன்னி மரியாவின் அமல உற்பவ பெருவிழாவன்று, அம்மறைவட்டத்தின் அப்போஸ்தலிக்க மறைவட்ட ஆயர் Aldo Berardi தலைமையில் நடைபெறும் கூட்டுத் திருப்பலியுடன் நிறைவுறும் என்றும் அச்செய்திக் குறிப்புக் கூறுகிறது.

குவைத் நாட்டிற்கான திருப்பீடத் தூதர் பேராயர் Eugene Martin Nugent, அரேபியாவிற்கான பிரான்சிஸ்கன் மறைமாநிலத்தின் அதிபர் தந்தை மைக்கேல் பெர்னாண்டஸ் OFM, மற்றும், குவைத்தில் பணிபுரியும் அனைத்து அருள்தந்தையர்களும் இக்கூட்டுத் திருப்பலியில் கலந்துகொள்வர் என்றும், இவர்களுடன் கத்தார் மற்றும் பஹ்ரைனின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொள்வர் என்றும் அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

காசாவில் போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுடன் தங்களின் உடனிருப்பை வெளிப்படுத்தும் விதமாக,  இந்த நிகழ்விற்காகத் திட்டமிடப்பட்ட மற்ற அனைத்து கொண்டாட்டங்களும் அரசால் இரத்து செய்யப்பட்டுள்ளதாக Fides செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார் ஆயர் Aldo Berardi.

அரேபிய அன்னை ஆலயம் முதலில் அல்-அஹ்மதியில் உள்ள ஒரு பழைய மின் உற்பத்தி நிலையத்தில் அமைந்திருந்தது. பின்னர் இது 1948-ஆம் ஆண்டில் கடவுளின் தாயாம் அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறிய ஆலயமாக மாற்றம் பெற்றது. அதன் பின்னர், 1952-ஆம் ஆண்டில், குவைத் எண்ணெய் நிறுவனம் அந்நகரில் ஒரு புதிய ஆலயம் கட்ட அனுமதி வழங்கியது. 1955-ஆம் ஆண்டு 8- ஆம் தேதியன்று, திருத்தந்தை 12-ஆம் பயஸ் அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட முதல் அடிக்கல் நாட்டப்பட்டது. 1956-ஆம் ஆண்டு இப்புதிய ஆலயம் அன்னை மரியாவுக்கு அர்பணிக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 December 2023, 14:30