தேடுதல்

ஜோசுவா, தாவீது வரிசையில் யூதா மக்கபே ஜோசுவா, தாவீது வரிசையில் யூதா மக்கபே  

தடம் தந்த தகைமை - நல்லுறவு கொண்டிருந்த உரோமையர்

ஆசியாவின் மாமன்னன் அந்தியோக்கை தோற்கடித்த உரோமையர்கள், அவனை உயிரோடு பிடித்து, அவனுடைய மிகச்சிறந்த மாநிலங்களிலிருந்து இந்தியா, மேதியா, லீதியா ஆகியவற்றை ஒப்படைக்கும்படி ஆணை பிறப்பித்தார்கள்;

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

யூதா உரோமையர்களின் புகழைப்பற்றிக் கேள்விப்பட்டார்; அவர்கள் மிக வலிமை வாய்ந்தவர்கள்; அவர்களுக்குச் சார்பாக இருப்போர் அனைவரிடமும் நல்லுறவு கொள்கிறார்கள்; அவர்களை நாடிச்செல்வோருக்கு அன்பு காட்டுகிறார்கள். அவர்கள் மிக வலிமை வாய்ந்தவர்கள்; கால்லியர் நடுவே அவர்கள் போர்கள் புரிந்து, தீரச் செயல்கள் செய்தார்கள்; அவர்களை வென்று திறை செலுத்தச் செய்தார்கள்; இஸ்பெயின் நாட்டில் இருந்த பொன், வெள்ளிச் சுரங்கங்களைக் கைப்பற்றினார்கள்; தங்கள் திட்டத்தினாலும் விடாமுயற்சியினாலும் தங்களுக்கு மிகத் தொலையில் இருந்த இடங்கள் அனைத்தையும் வென்றார்கள்; நிலத்தின் கடையெல்லையினின்று தங்களை எதிர்த்து வந்த மன்னர்களை அடிபணியச் செய்து அழித்து, அவர்களுக்குப் பேரிழப்பை ஏற்படுத்தினார்கள்; எஞ்சிய மன்னர்கள் ஆண்டுதோறும் அவர்களுக்குத் திறை செலுத்திவந்தார்கள்; பிலிப்பையும் கித்திம் அரசனான பெர்சேயுவையும் தங்களுக்கு எதிராய்ப் படையெடுத்து வந்த மற்றவர்களையும் போரில் முறியடித்து அடிபணியச் செய்தார்கள்; ஆசியாவின் அரசனான மாமன்னன் அந்தியோக்கு நூற்று இருபது யானைகளோடும் குதிரைகளோடும் தேர்களோடும் பெரும் படையோடும் அவர்களை எதிர்த்துப் போரிடச் சென்றபோது அவனையும் தோற்கடித்தார்கள். அவனை உயிரோடு பிடித்து, அவனும் அவனுக்குப்பிறகு ஆண்ட மன்னர்களும் தங்களுக்கு மிகுதியான திறை செலுத்தும்படியும், பிணைக் கைதிகளைக் கொடுக்கும்படியும், அவனுடைய மிகச்சிறந்த மாநிலங்களிலிருந்து இந்தியா, மேதியா, லீதியா ஆகியவற்றை ஒப்படைக்கும்படியும் ஆணை பிறப்பித்தார்கள்; இந்நாடுகளை அந்தியோக்கிமிடமிருந்து பெற்று யூமேன் மன்னனுக்குக் கொடுத்தார்கள். கிரேக்கர்கள் வந்து அவர்களை அழித்துவிடத் திட்டமிட்டிருந்தார்கள். அவர்கள் இதை அறிந்து படைத்தலைவர் ஒருவரைக் கிரேக்கர்களுக்கு எதிராய் அனுப்பி அவர்களை எதிர்த்துப் போரிட்டார்கள்; அவர்களுள் பலர் காயமற்று மடியவே, அவர்களின் மனைவி மக்களைச் சிறைப்படுத்திப் பொருள்களைக் கொள்ளையடித்தார்கள்; அவர்களது நாட்டின்மீது வெற்றி கொண்டு கோட்டைகளைத் தகர்த்தார்கள்; அவர்களை அந்நாள்வரை அடிமைகளாக வைத்திருந்தார்கள். தங்களை எதிர்த்து வந்த மற்ற நாடுகள், தீவுகள் அனைத்தையும் அழித்து அவற்றை அடிமைப்படுத்தினார்கள்; ஆனால் தங்களுடைய நண்பர்களோடும் தங்களை நம்பியிருந்தவர்களோடும் நல்லுறவு கொண்டிருந்தார்கள்; அருகிலும் தொலையிலும் இருந்த மன்னர்களைத் தங்களுக்கு அடிபணியச் செய்தார்கள்; அவர்களின் பெயரைக் கேட்ட யாவரும் அவர்களுக்கு அஞ்சினார்கள்; எவருக்கு உதவி செய்து மன்னர்களாக்க விரும்புகிறார்களோ அவர்கள் அனைவரையும் மன்னர்கள் ஆக்குகிறார்கள்; எவரை அரியணையிலிருந்து அகற்ற விரும்புகிறார்களோ அவர்களை அனைவரையும் அகற்றுகிறார்கள்; இவ்வாறு மிக உயர்ந்த நிலையை அடைந்துள்ளார்கள். இவ்வாறெல்லாம் இருந்தும், அவர்களுள் ஒருவரும் தம்மைப் பெருமைப்படுத்திக்கொள்ள முடி தரிக்கவுமில்லை, அரசவுடை அணிந்ததுமில்லை. தங்களுக்கென்று ஓர் ஆட்சிமன்றத்தை அமைத்தார்கள். முந்நூற்று இருபது உறுப்பினர்கள் நாள்தோறும் கூடி மக்களைப்பற்றியும் அவர்களது நலனைப் பற்றியும் கலந்து ஆய்வுசெய்கிறார்கள். தங்கள்மீது ஆட்சிசெலுத்தவும் தங்கள் நாடு முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் ஆண்டுதோறும் ஒரு மனிதரிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார்கள்; எல்லாரும் அந்த ஒருவருக்கே கீழ்ப்பபடிகிறார்கள். அவர்களுக்குள் போட்டியோ பொறாமையோ இல்லை. இவையெல்லாம் யூதாவின் காதுக்கு எட்டின.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 December 2023, 10:54