காசாவில் அமைதி நிலவிட உலகத்தலைவர்கள் உதவட்டும்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
காசாவில், குழந்தைகள் மற்றும் ஒன்றுமறியாத அப்பாவி பொதுமக்களைக் கொல்லும் தொடர் மரணம் மற்றும் அழிவுகள் குறித்து உலகத் தலைவர்கள் தங்கள் கண்களைத் திறக்குமாறு தான் கேட்டுக்கொள்வதாகக் கூறியுள்ளார் எருசலேமின் செபமாலை அன்னை சபையைச் சேர்ந்த அருள்சகோதரி Nabila Saleh
காசாவில் உள்ள திருக்குடும்ப கத்தோலிக்கப் பங்குத்தளத்தின் அருள்சகோதரி Nabila அவர்கள், டிசம்பர் 16, சனிக்கிழமையன்று, இஸ்ரேலிய துப்பாக்கியேந்திய வீரர்களால் இப்பங்குதளத்தைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்ட வேளை, அதுகுறித்து வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு உலகத் தலைவர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.
மாலை 4 மணிக்குப் பிறகு இப்பங்குதளத்தைச் சேர்ந்தவர்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று இஸ்ரேலியப் படைகள் உத்தரவிட்டுள்ளதாகக் கூறியுள்ள அருள்சகோதரி Nabila அவர்கள், துப்பாக்கியேந்திய இஸ்ரேலிய வீரர்கள் எல்லா இடங்களிலும் வலம் வருவதாகவும், குடிநீர் மற்றும் மின்சார வசதிகள் இல்லாத நிலையிலும் தாங்கள் கடவுளுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்றும், இது வரை குறைந்தபட்சம் அதிக இறப்புகள் ஏற்படவில்லையென்றாலும், இந்தப் போர் மிக விரைவில் முடிவுக்கு வர வேண்டுமென நாங்கள் இறைவேண்டல் செய்து வருகின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தின் போது காயமடைந்த ஏழு பேருக்குத் தற்போது இப்பங்குத்தளம் சிகிச்சை அளித்து வருகின்றது என்றும், இதன் பங்குத் தந்தையும் மறைவட்ட அதிபருமான அருள்தந்தந்தை யூசுப் அவர்கள், இங்குத் தஞ்சமடைந்துள்ள மக்களுக்கு உதவி கேட்டு விண்ணப்பித்துள்ளபோதிலும், இப்பகுதியில் நிகழ்ந்து வரும் போரின் காரணமாக, அவ்வுதவி எப்படி கிடைக்கும் எப்போது கிடைக்கும் என்று தெரியவில்லை என்றும் உரைத்துள்ளார் அருள்சகோதரி Nabila
இத்திருக்குடும்ப பங்குத்தளத்தில் தஞ்சமடைந்துள்ள புலம்பெயர்ந்தோரில் பல குழந்தைகளும் உள்ளனர் என்றும், அவர்களில் பலர் ஊனமுற்றவர்கள் அல்லது நோயாளர்கள் என்றும் எடுத்துக்காட்டியுள்ள அருள்சகோதரி Nabila அவர்கள், இங்குள்ள யாவரும் கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடத் தயாராக உள்ளனர், ஆனால் இது மிகவும் கடினமாக இருக்கும் என்றபோதிலும், இயேசுவின் பிறப்பு எப்பொழுதும் நம் இதயங்களை மகிழ்ச்சியால் நிரப்புவதால், எல்லாவற்றையும் மீறி, தங்களால் முடிந்தளவிற்கு இவ்விழாவைச் சிறப்பிக்கத் தயாராகி வருவதாகவும் கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்